தமிழகம் என்ன கேரளாவின் குப்பைத் தொட்டியா?
- கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக் கொண்டுவந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் கொட்டிய விவகாரம் கடந்த மாதம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலையீட்டின்பேரில், கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தும் மீண்டும் கேரளாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு, கேரள மாநில அரசுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி, இனிமேல் கேரளாவில் இருந்து கழிவுகள் நுழைவதை தடுக்கவும் கண்காணிக்கவும் தமிழக அரசு சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- கடந்தமுறை சோதனைச் சாவடிகளில் தவறு நடந்ததா? என்பது குறித்த விசாரணையும் ஒருபுறம் நடந்து வருகிறது. அப்போது கேரள எல்லையோர பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பணியாற்றியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- இவ்வளவு களேபரத்துக்கு மத்தியிலும் கேரள மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இறைச்சிக் கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகளை ஏற்றிக் கொண்டு 5 வாகனங்கள் நேற்று தமிழகத்துக்குள் நுழைந்துள்ளன. அவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்து 9 பேரை கைது செய்துள்ளனர்.
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கை, தமிழக அரசின் நடவடிக்கை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் கண்டிப்பு என பல நடவடிக்கைகள் எடுத்த பின்பும், கழிவுகளை ஏற்றிக் கொண்டு லாரிகள் தமிழகத்துக்குள் நுழைகிறது என்றால் தமிழகத்தை கேவலமாக எடைபோடும் எண்ணம் ஒருதரப்பினருக்கு இருக்கிறது என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது.
- கேரளாவின் குப்பைத் தொட்டி தமிழகம் என்ற எண்ணம் அங்கிருப்பவர்களுக்கு இருப்பதையே மீண்டும் மீண்டும் நடைபெறும் சம்பவங்கள் உறுதி செய்கின்றன. இவ்வளவு நடந்தபிறகும் கழிவுகளை அனுப்பி வைக்கும் தைரியம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிந்து, அந்த தைரியத்தை ஆணிவேரோடு அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இறைச்சிக் கழிவுகளை அழிப்பதற்கும், கழிவுகளை லாரிகளில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கும் கடுமையான விதிமுறைகளை தேசிய அளவில் வகுக்கதேவையான முயற்சிகளை தமிழகம் எடுக்க வேண்டும். மருத்துவக் கழிவுகளை அழிக்க ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மேலும் கடுமையாக்கவும், அவற்றை ஒவ்வொரு மருத்துவமனைகளும் முறையாக பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிக்கவும் அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசுக்கு தமிழகம் அழுத்தம் தர வேண்டும்.
- சமூக அக்கறையே இல்லாமல், லஞ்சம் பெற்றுக் கொண்டு சோதனைச் சாவடிகளை திறந்துவிடும் அலுவலர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதும் அவசியம். எல்லையோர மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் தன்னார்வலர்களாக பலர் செயல்பட்டு இதற்கு முன்பு நடந்த சம்பவங்களில் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களையும் ஒருங்கிணைத்து கூட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கேரள மாநிலத்தில் இருந்து இனிமேலும் கழிவுகள் வராமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்!
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 01 – 2025)