TNPSC Thervupettagam

தமிழில் அறிவியல் புனை​வுகள்

December 29 , 2024 3 days 21 0

தமிழில் அறிவியல் புனை​வுகள்

  • அறி​வியல் புனைகதை உலகம் என்பது இன்று உலக அளவில் பிரம்​மாண்​டமாக வளர்ந்து நிற்கும் இலக்​கி​யத்​துறை. கேம்​ரிட்ஜ், ஆக்ஸ்​போர்டு, பிரின்ஸ்டன் போன்ற பல்கலைக்​கழகங்களில் தனி பட்டப் படிப்புகள் இதற்காக வந்து​விட்டன. அறிவியல் தொழில்​நுட்பம் விண்​வெளிக் காலப் பயணம், இணை பிரபஞ்​சங்​கள், வேற்றுக் கிரக வாழ்க்கை என்று கற்பனை செய்​யும் இந்த உலகம் குறித்து அடிப்​படைகளைத் தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்​குப் பரவலாக இன்று அறியப்​பட்​டுள்​ளது.
  • உலக பிரசித்திபெற்ற புக்கர் பரிசை, கடந்த மூன்று ஆண்டு​களாக அறிவியல் புனைகதை நாவல்கள்​தான் வென்று வருகின்றன. புலிட்ஸர் பரிசின் புனைகதைப் பரிசைக் கடந்த நான்கு ஆண்டு​களாக அறிவியல் புனை கதைகள்​தான் வென்​று​வரு​கின்றன. உலக அளவில் இலக்​கியப் போக்​குகளை உள்வாங்​கிக்​கொண்டு தரமான படைப்பு​களைத் தருவ​தில் எப்போதுமே தமிழ் இலக்கிய உலகம் பின்​தங்​கியது இல்லை. அறிவியல் புனை​கதைகள் வகைக்​கும் அது பொருந்​தும்.
  • தமிழில் அறிவியல் புனை​வு​களின் காலத்தை, சுஜா​தாவுக்கு முன்பு, சுஜா​தாவுக்​குப் பின்பு என்று பிரித்​துப் பார்க்​கலாம். அறிவியல் சிறுகதை ஒன்றை முதலில் எழுதிய எழுத்​தாளர் யார் என்ப​தில் வழக்கம் போல் தமிழில் சர்ச்சை நிலவு​கிறது. பாரதி​யார் ‘காட்டு நாய் வீட்டு நாய்’ என்று ஒரு கதை எழுதினார். வனத்​திலிருந்து வெளி​யேறிய ஒரு ஓநாய் வீட்டு நாயோடு உரையாடு​வது​தான் கதை. அற்புதமான இந்தக் கதையின் இறுதி​யில் விடுதலை வேட்​கையை இந்த அறிவியல் புனை​வோடு இணைத்து விதைத்து இருப்​பார் பாரதி. இதனடிப்​படை​யில் பாரதி​தான் பிதாமகர் என்பது தெளிவு. இந்தக் கதையை பாரதி 1919இல் எழுதி​விட்​டார்.
  • பிற்காலத்​தில் அறிவியல் புனை​வுகளை உள்வாங்​கிக் கொண்டு தமிழில் அதற்கான முயற்சிகளை க.நா.சு. போன்ற​வர்கள் திரும்ப​வும் தொடங்​​கினார்கள். 1950களில் பலவகையான முயற்சிகள் தமிழில் மேற்​கொள்​ளப்​பட்டன. கல்வி கோபால​கிருஷ்ணன், மாத்​திரை சாப்​பிட்டு எறும்பு அளவு ஆகி விடும் ஒரு சிறுவனைக் குறித்து அறிவியல் கதை எழுதினார். அவரது ‘பறக்​கும் பாப்பா’ அறிவியல் புனைவு, வாண்​டு​மாமா எழுதிய ‘காட்டு சிறுவன் கந்தன்’, ‘மந்​திரக் கம்பளம்’, பெ.நா.அப்பு​சாமி எழுதிய ‘பறக்​கும் ரயில்’ மாலன் எழுதிய ‘வித்​வான்’ சிறுகதை என்று தமிழில் அறிவியல் புனை​வுகள் தொடர்​கின்றன. ஆனால், இந்தக் காலக்கட்​டத்​தில் எழுதி​ய​வர்கள் அறிவியல் புனைகதைகள் என்று சொல்​லிக்​கொண்டு எழுதவில்லை அறிவியலும் இருக்​கும் கதைகள் என்று​தான் அவற்றை நாம் அழைக்க வேண்டும்.
  • விஞ்​ஞானக் கதை என்ப​தைத் தெளிவாகப் புரிந்​து​கொண்டு எழுதிய தமிழின் முதல் எழுத்​தாளர் சுஜாதா. மற்றொரு காலத்​தில் மற்றொரு சூழ்​நிலை​யில் இந்தக் கதைகள் நடைபெற்​றாலும் நாம் அடையாளம் கண்டு கொள்​ளக்​கூடிய சமூக உணர்​வுகளை இந்தக் கதைகள் சொல்​லும். இவற்றின் ஊடாக மெல்​லிதான சித்தாந்த தத்துவப் பின்னணி​களும் தென்​படும். கதைகளில் சொல்​லப்​படும் எதிர்​காலங்​கள், சாத்​தி​யக்​கூறுகளே என்ப​தைத் தெளிவாக முன்​வைத்​தவர் சுஜாதா. ஏறத்​தாழ160க்கும் மேற்​பட்ட விஞ்ஞான கதைகளை அவர் எழுதி​யுள்​ளார். ‘ஜீனோ’ போன்ற அவரது அறிவியல் தொடர்கள் பெரிய அளவிற்​குப் பேசப்​பட்டவை. அறிவியலை வெகுஜன வாசிப்​புக்கு எடுத்துச் சென்ற பெருமை அவரையே சேரும்.
  • 1980களின் இறுதியான எனது கல்லூரிக் காலங்​களில் சுஜா​தாவால் ஊக்கு​விக்​கப்​பட்டு அறிவியல் புனை​வுகளை எழுதத் தொடங்​கினேன். என்னைப் போல் ஒரு 60, 70 இளைஞர்​களை​யாவது சுஜாதா உருவாக்கியிருப்பார். ஆனால், நாங்கள் எழுது​வதற்​கும் சுஜா​தா​விற்​கும் சிறு வேறு​பாடு உண்டு. அறிவியல் புனை​வுகள் என்கிற அந்த அமைப்​பிற்​குள் நம்முடைய சமூகத்​தின் அவலங்​கள், போராட்​டங்​கள், அரசியல் என்று கலப்பது எங்கள் உத்தி. அரசி​யலோடு தொடர்​பில்லாத அறிவியல் புனை​வு​களைப் படைப்​ப​தால் என்ன பயன்?
  • இன்று சிறுகதை, நாவல், கவிதை, திரைப்​படம் என அனைத்து வடிவங்​களி​லும் அறிவியல் ஆக்கம் தமிழில் வளர்ந்​து​வரு​கிறது. இந்த ‘சாட் ஜீபீடி’ யுகத்​தில் தொழில்​நுட்பம் இல்லாமல் பெரும்​பான்மை வாழ்க்கை சாத்​தி​யமில்லை. பாடப் புத்​தகங்​களில்கூட ‘க்யூ ஆர் கோடு’ நுழைந்​து​விட்ட நிலையில் சைபர் பங்க் என்னும் உலக அளவில் அறியப்​படும் துணைவகை உட்பட தமிழில் இன்று சாத்​தி​ய​மாகிறது.
  • இத்தகைய நம்பிக்கையை இரா.​முரு​கன், தமிழ் மகன், ராஜ் சிவா, க. சு​தாகர் ஆகியோரது எழுத்து​கள் தரு​கின்றன. இணை​யத்​தைப் பயன்​படுத்​தும் உலக மொழிகளின் பட்​டியலில் தமிழ் ஆறாம் இடத்​திற்கு வந்​து​விட்​டது. இந்த நிலை​யில்​ அறி​வியல்​ மனப்​பான்​மையை ​விதைக்​கும்​ இலக்​கி​யம்​ என்​பதை நோக்​கி இந்​தத் துறை பயணிக்​க வேண்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories