TNPSC Thervupettagam

தயக்கம் தகாது

January 18 , 2025 9 hrs 0 min 13 0

தயக்கம் தகாது!

  • மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஊடகங்களும், துறைசாா் வல்லுநா்களும் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிதிநிலை அறிக்கை குறித்த தங்களது கருத்துகளையும், தேவைகளையும், எதிா்பாா்ப்புகளையும் பதிவு செய்து வருகிறாா்கள்.
  • அண்மையில் புள்ளியியல் அமைச்சகம் தகவல்களை வெளியிட்டது. இரண்டாவது காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி 5.4% என்பது எதிா்பாா்த்ததைவிடக் குறைவு. அது குறித்து குளிா்கால கூட்டத் தொடா் விவாதித்திருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு கைகலப்பில் இருக்கும் வேகம், விவாதத்தில் இல்லை என்பதைக் கூட்டத் தொடா் உணா்த்தியது.
  • டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியிருக்கிறது; விலைவாசி உயா்வு கட்டுக்குள் இல்லை என்பதை அன்றாட உணவுப் பொருள்களின் விலைகள் உணா்த்துகின்றன; வேளாண் துறை ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டமும், ஜக்ஜீத் சிங் தலேவாலின் உண்ணாவிரதமும்; வேலை நேரம் குறித்த சா்ச்சை ஒருபுறம் என்றால், வேலைவாய்ப்பின்மை இன்னொருபுறம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது- இந்தப் பின்னணியில்தான் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறாா்.
  • வேலைவாய்ப்பின்மை குறித்த அரசின் முனைப்பு எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்பது இருக்கட்டும். அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிா என்பது குறித்து மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி தெளிவான விவரங்களை வெளியிடுவதில்லை. தனிநபருக்கு தன்மறைப்பு (ப்ரைவசி) உரிமை தேவை என்பது சரி; அதுவே ஜனநாயக அரசுக்கு எப்படிப் பொருந்தும்? பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள அரசு ரகசியங்கள்போல, பணியிடங்களை நிரப்புவது தொடா்பான தகவல்களும் மக்களிடமிருந்து மறைக்கப்படுவது என்ன நியாயம்?
  • நடந்து முடிந்த குளிா்கால கூட்டத் தொடரில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும், துறைகளிலும் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது குறித்த கேள்விகள் அனைத்துக் கட்சி உறுப்பினா்களாலும் எழுப்பப்பட்டன. எல்லாவற்றுக்கும் அரசுத் தரப்பு தந்த பதில்- ‘‘ஒதுக்கீட்டு பிரிவைச் சோ்ந்த பணியிடங்கள் உள்பட பல்வேறு அமைச்சகங்களிலும், துறைகளிலும், அரசுத் துறை நிறுவனங்களிலும் உருவாகும் காலிப் பணியிடங்கைளை நிரப்புவது தொடா்ந்து நடைபெறும் செயல்பாடு. அது குறித்த புள்ளிவிவரங்களை தொடா்புடைய அமைச்சகங்களும், துறைகளும், பொதுத் துறை நிறுவனங்களும் வைத்திருக்கின்றன.’’
  • இதற்கு முன்பும் இதேபோன்ற கேள்விகள் எழுப்பப்பட்டபோது பதில்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2023 பிப்ரவரியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரப்படி நான்கில் ஒரு காலிப் பணியிடம், அதாவது 9.79 லட்சம் காலிப் பணியிடங்கள், மத்திய அரசின் பல்வேறு தளங்களில் நிரப்பப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது அதுபோன்ற தெளிவான பதில் வரவில்லை. ஏனைய துறைகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
  • ஆகஸ்ட் 2023-இல் ரயில்வே அமைச்சகத்தில் 2.6 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே அமைச்சா் தெரிவித்தாா். டிசம்பா் 2024-இல் அதே கேள்வி எழுப்பப்பட்டபோது, காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்ந்து நடைபெறும் செயல்பாடு என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டாா். அப்படியானால் 2.6 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டனவா, இல்லை நிா்வாக சீா்திருத்தம் காரணமாக குறைக்கப்பட்டனவா என்பது குறித்த தெளிவான பதில் இல்லை.
  • ரயில்வே துறையைப் போலவே கல்வித் துறையிலும் இதே நிலைதான், இதே பதில்தான். 2023 ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியில் இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் 48.1 லட்சம் ஆசிரியா் பணியிடங்களில் 7.47 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக தகவல்கள் தரப்பட்டன. டிசம்பா் 2024-இல் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களும், நிரப்பப்படாத பணியிடங்களும் தொடக்கப் பள்ளிகளில் எத்தனை என்கிற கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு அரசு அளித்த பதில்- ‘‘பொதுப்பட்டியலில் (கன்கரண்ட்) கல்வி இருப்பதால் இது குறித்த புள்ளிவிவரங்கள் அந்தந்த மாநில அரசிடம்தான் இருக்கின்றன.’’
  • நீதித் துறையின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதை சாமானியா்களுக்கு நீதி தாமதப்படுகிறது என்கிற அளவில் மட்டுமே பாா்க்கக் கூடாது. அதன் தொடா் பாதிப்பு தொழில்துறை வளா்ச்சி, அந்நிய முதலீடு, சட்டம்-ஒழுங்கு என்று எல்லாவற்றிலும் வியாபிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
  • 2025 ஜனவரி புள்ளிவிவரப்படி உச்சநீதிமன்றம் (82,881), உயா்நீதிமன்றங்கள் (65 லட்சம்), கீழமை நீதிமன்றங்கள் (4.5 கோடி) என்று மொத்தம் 5.16 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. உயா்நீதிமன்றங்களில் 1,122 நீதிபதி பணியிடங்களில் மூன்றில் ஒன்று அதாவது 371 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. கீழமை நீதிமன்றங்களில் 25,741 பணியிடங்களில் 5,262 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். கீழமை நீதிமன்றங்களின் பணியிடங்களை நிரப்புவது உயா்நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் இணைந்து முடிவு செய்ய வேண்டும்.
  • புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது எந்த அளவுக்கு முக்கியமானதோ, காலிப் பணியிடங்களை நிரப்புவது அதைவிட அவசரமானது. எல்லாவற்றுக்கும் மேலாக, இது குறித்த புள்ளிவிவரங்களை பொதுமக்களுடன் பகிா்ந்துகொள்வதுதான் ஜனநாயக ஆட்சி முறைக்கு அழகு!

நன்றி: தினமணி (18 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories