திருநங்கை டிடிஇ முதல் பிரிட்டனின் தமிழ் எம்.பி வரை
- தெற்கு ரயில்வே துறையின் டிக்கெட் பரிசோதகராக (TTE) திருநங்கையான சிந்து கணபதி நியமனம் செய்யப்பட்டார். தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் இவர்.
- தமிழகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அதிகாரியான பிரியா ரவிச்சந்திரன், இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த முதல் தீயணைப்புத் துணை அதிகாரி என்கிற பெருமையைப் பெற்றார்.
- ராணுவ மருத்துவச் சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா பதவியேற்றார்.
- மேகாலயத்தின் முதல் பெண் காவல்துறைத் தலைவராக இடாஷிஷா நோங்ரங் நியமிக்கப்பட்டார். இவர் ‘காசி’ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
- இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமன் குமாரி எல்லைப் பாதுகாப்புப் படையில் ஸ்னைப்பர் ரகத் துப்பாக்கி சுடும் பிரிவில் இணைந்த முதல் பெண்.
- மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளர் என்கிற பெருமையை சுஜாதா சௌனிக் பெற்றார்.
- மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக நீனா சிங் நியமிக்கப் பட்டார். இந்த உயர் பதவியை வகிக்கும் முதல் பெண் இவர்.
- மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்றார் கிளாடியா ஷீன்பாம். 200 ஆண்டு கால நவீன மெக்ஸிகோவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இவர் எழுதியிருக்கிறார்.
- பிரிட்டனின் முதல் பெண் நிதியமைச்சர் என்கிற வரலாற்றைப் படைத்தார் ரேச்சல் ரீவ்ஸ். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவவியல், அரசியல், பொருளாதாரம் பயின்றவர்.
- பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் எம்.பி. என்கிற பெருமையை உமா குமரன் பெற்றார்.
மனங்களை வென்றவர்
- அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டபோதும் தன் கண்ணியமான பிரச்சாரத்தாலும் அணுகுமுறையாலும் மக்களின் மனங்களை வென்றார் கமலா ஹாரிஸ். ‘தேர்தலில் வெல்வதல்ல நம் போராட்டத்தின் நோக்கம். விடுதலை, வாய்ப்பு, நேர்மை, கண்ணியம் இவற்றுக்கான போராட்டத்தைக் கைவிடாமல் இருப்பதே முக்கியம்’ என்று சொன்னதன் மூலம் மக்களின் மனங்களில் உயர்ந்துவிட்டார்!
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 12 – 2024)