திருநர்களுக்கான இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட வேண்டும்!
- கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் திருநர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த கொள்கை முடிவை எடுக்குமாறு தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது, அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிவரும் திருநர்களுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது.
- ஏ.நிவேதா என்ற திருநர், 2024-2025 கல்வி ஆண்டில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்திருந்தார். மாணவர் சேர்க்கைக்கான கையேட்டில் திருநர் என்பதைப் பதிவுசெய்வதற்கான காலியிடமே ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.
- இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட நிவேதா, பல்கலைக்கழக நடைமுறையானது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிரானதாக இருப்பதால், கையேட்டைச் செல்லாததாக அறிவிக்கும்படியும், தான் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு வழிகாட்டும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.
- அண்மையில் அவரது மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. திருநர் என்பதற்காக நிவேதாவுக்கு இடம் மறுக்கப்படக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் திருநர்களுக்கு இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்து ஆறு வாரங்களுக்குள் முடிவெடுக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.
- தமிழக அரசைச் சேர்ந்த ஐந்து துறைகள் திருநரைப் பணியமர்த்த முன்வந்துள்ளதாக விசாரணையின்போது அரசுத் தரப்பு கூறியது. மீதமுள்ள துறைகளின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்னர், திருநர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த கொள்கை முடிவை எடுப்பதாகவும் அரசுத் தரப்பு கூறியது.
- திருநர், பால்புதுமையருக்காக (LGBTQIA+) தமிழ்நாடு சமூக நலத் துறை, ஜனவரியிலேயே ஒரு வரைவினைக் கொண்டுவந்துவிட்டது. வேலைவாய்ப்பில் திருநருக்குச் சிறப்பு இடஒதுக்கீட்டை வழங்கவும் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் அனைத்துப் படிப்புகளிலும் ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் அந்த வரைவில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கோட்பாட்டு அளவில் முன்வந்துவிட்ட தமிழக அரசு, அதைச் செயல்படுத்துவதில் தயக்கம் காட்டக் கூடாது.
- பொது இடங்களில் கையேந்துவதையே வருவாய் ஈட்டுவதற்கான முதன்மையான வழிமுறையாகப் பெரும்பாலான திருநர்கள் கொண்டிருப்பதுதான் யதார்த்த நிலை. பல்வேறு பணிகளைச் செய்யும் திறனும் விருப்பமும் இவர்களுக்கு இருப்பினும், பொதுச்சமூகமும் இவர்களைச் சமமாக நடத்த இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது. திருநர்களில் மிகச் சிலரே தடைகளையும் அவமானங்களையும் தாண்டி உயர் கல்வி பெறவும் அரசுப் பணிக்குத் தயாராகவும் முடிகிறது. அவர்களின் உரிமைகளை மறுப்பது, ஒட்டுமொத்த திருநர் சமூகமும் அவல வாழ்க்கையைத் தொடரச் செய்வதாகிவிடும்.
- திருநர்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் வழங்கும் பணியை அரசுதான் தொடங்கிவைக்க முடியும். அரசுப் பணிகளில் திருநர்கள் தயக்கமின்றி அமர்த்தப்படும் சூழல், தனியார் நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவைக்கும். ஆட்சிப்பொறுப்பில் அமரும்போது திருநர்களின் நலன்களைக் கவனத்தில் கொள்ளும் கட்சியாகவே திமுக அறியப்படுகிறது. சமூக, அரசியல் புரிதலுடன் உள்ள திருநர்களுக்கான செயல்பாட்டாளர் பலரும் இதே கருத்தைக் கொண்டுள்ளதைக் காண முடிகிறது.
- ஆண், பெண் ஆகிய சொற்களுக்கு ஈடாக ‘திருநங்கை’, ‘திருநம்பி’ ஆகிய சொற்களை அறிமுகப்படுத்தியதிலும் அவற்றை அரசு நிர்வாகச் சொல்லாடல்களில் இடம்பெறச் செய்ததிலும் திமுகவின் பங்களிப்பு உள்ளது. சாதி, மத நோக்கில் உரிமை மறுக்கப்படுவோருக்காக திமுக அரசு முன்னிறுத்தும் சமூக நீதி என்கிற கொள்கை, பாலின நோக்கில் புறக்கணிக்கப்படும் திருநர்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதாக இருக்க இயலாது. வேலைவாய்ப்பில் திருநர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது, மிக நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட அவர்களது ஆற்றலையும் திறனையும் பயன்படுத்தி, அரசுப் பணிகளைப் பல படிகள் தரம் உயர்த்துவதாகவும் அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 11 – 2024)