திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மத வன்முறைக்கு இடமளிக்காதீர்..!
- மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளதாலும், ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக இந்துக்கள் கருதுவதாலும், திருப்பரங்குன்றம் மலை புனிதமானதாக கருதப்படுகிறது. அங்கு அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, சேவல் பலியிடப் போவதாக ஒரு சில முஸ்லிம் அமைப்புகள் அறிவித்து ஊர்வலம் சென்றதன் பேரில், மதரீதியான பதற்றம் உருவாகியுள்ளது.
- அங்கு சென்ற திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ்கனி, பிரியாணியை கொண்டு சென்று சாப்பிட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு சமைத்த பிரியாணியை எடுத்துச் செல்ல முயன்ற சிலரும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
- மலையின் மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல முயன்ற மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக சுவாமிகள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவங்களை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மற்றொரு சர்ச்சைக்குரிய பகுதியாக மாறியுள்ளது.
- நமது நாட்டில் ஏற்கெனவே இருக்கும் மதப் பிரச்சினைகளே தீர்க்க முடியாமல் நீடிக்கும்போது. இன்னொரு வழிபாட்டுத் தலத்தில் சர்ச்சையை உருவாக்குவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இந்த விவகாரம் குறித்து காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் விசாரணை நடத்தி வருவதாகவும்.
- இதற்கு முன்பு என்ன நடைமுறை இருந்தது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப விதிமுறைகளை வகுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இதற்கு முன்பிருந்த நடைமுறை குறித்த ஆராய்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மத விவகாரம் எப்போதும் மக்களை எளிதில் உணர்ச்சிவசப்படுத்தி, நட்புடன் பழகி வருபவர்களைக்கூட எதிரிகளாக மாற்றிவிடும் சக்தி படைத்தது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
- மக்களை கோடுகள் போட்டு பிரிப்பது மிக எளிதான விஷயம், மதம்,இனம்,மொழி, திராவிடம், ஆரியம், உணவுப் பழக்க வழக்கம், நிறம் என ஏராளமான கோடுகளைப் போட்டு ஏற்கெனவே பிரித்து வைத்துள்ளனர். மதரீதியான விஷயங்களை கையில் எடுத்து அரசியல் செய்து அதன் மூலம் ஆதாயம் பெற அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன.
- வடமாநிலங்களில் பசுப் பாதுகாப்பு குழு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகள், வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பெயர்ப் பலகைகளில் உரிமையாளரின் பெயரை, அவர்கள் என்ன மதம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், வெளிப்படையாக எழுதி வைக்க வேண்டும் என்ற அறிவிப்பு போன்ற மத ரீதியான செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அந்த அளவுக்கு தீவிர மத விரோதங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டுக்குள் அண்மைக்காலமாக சனாதன எதிர்ப்பு.
- கோயில் ஆக்கிரமிப்பு, மத ரீதியிலான வேறு சில வெறுப்பு பேச்சுகள் என்று எழுவது கவலை தருகிறது. நம்மை பிரிக்கும் அடையாளங்களையும் கோடுகளையும் புறந்தள்ளி, அதற்கு சொற்பமான மதிப்பளித்து, நாம் அனைவரும் மனித இனம் என்பதை உணர்ந்து அன்பு, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முதலிடம் அளித்து சிந்தித்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் நாடு அமைதி வழியில் நடைபோடும். இவற்றை மனதில் வைத்து பிரிவினை. கலவரத்தை உருவாக்கும் விஷயங்களை கையிலெடுக்காமல் இருப்பதே அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 01 – 2025)