TNPSC Thervupettagam

திரையில் இல்லை எதிர்காலம் !

February 27 , 2025 5 hrs 0 min 17 0

திரையில் இல்லை எதிர்காலம் !

  • இன்று நம் குழந்தைகள் அதிக நேரம் எதில் செலவிடுகிறார்கள்? நிச்சயமாக, நம் கைகளில் இருக்கும் கைப்பேசிகளில்தான்!
  • தொழில்நுட்பம் முக்கியம். ஆனால், அந்த மின்னும் திரைகளுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்தை நாம் கவனிக்கிறோமா? குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு திரையில் செலவிடும் நேரம் எப்படி கெடுதல் செய்யும் என்பதைப் பற்றி யோசித்திருக்கிறோமா? பெற்றோர்களாகிய நாம், இந்த எண்ம உலகினுள் குழந்தைகள் மூழ்கிப்போவதால் என்ன நடக்கும் என்பதை உண்மையில் தெரிந்துகொண்டிருக்கிறோமா?
  • குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியான கனவுகளால் நிறைந்திருக்க வேண்டும். ஆனால், இன்று பல குழந்தைகளின் உலகம் எண்மத் திரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சின்ன குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை கைப்பேசிகளுக்கு அடிமையாகி விட்டார்கள். இந்த மின்னும் திரைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்குமா? பெற்றோர்களே, கொஞ்சம் கவனியுங்கள்! குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்.
  • திரையைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பல வழிகளில் பாதிக்கிறது. பல பிரச்னைகளை உருவாக்குகிறது. குழந்தைகளின் உடல், மன மற்றும் சமூக வாழ்க்கையைப் பாதிக்கிறது. ஒரு சமீபத்திய ஆய்வு இதை உறுதி செய்துள்ளது. 2 வயது முதல் 8 வயது வரையில் உள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளைப் பல ஆண்டுகளாகக் கண்காணித்ததில், அதிக நேரம் திரையைப் பார்க்கும் குழந்தைகளுக்குப் பலவிதமான பிரச்னைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • உடல்நலப் பிரச்னைகள் முதல் மனநலப் பிரச்னைகள் வரை, படிப்பில் பின் தங்குவது முதல் மற்றவர்களுடன் பழகுவதில் சிரமம் ஏற்படுவது வரை, திரையில் செலவழிக்கும் அதிக நேரம் நமது குழந்தைகளின் வாழ்க்கையைக் கெடுக்கிறது.
  • குழந்தைகள் அதிக நேரம் திரையில் மூழ்கியிருப்பது அவர்களின் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். கண் கோளாறுகள், தூக்கமின்மை போன்ற உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படும்.
  • மன அழுத்தம், பதற்றம், கவனக்குறைவு போன்ற மனநலப் பிரச்னைகள் திரையை அதிக நேரம் பார்ப்பதுடன் தொடர்புடையவையாக உள்ளன.
  • மற்றவர்களுடன் பழகுவதில் சிரமம், உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமை போன்ற சமூகத் திறன்கள் குறைபாடு திரையை அதிக நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும்.
  • கற்றலில் ஆர்வம் குறைதல், குறைந்த மதிப்பெண்கள் போன்றவை திரையை அதிக நேரம் பார்ப்பதால் ஏற்படும். இந்த ஆய்வில், அதிக நேரம் திரையைப் பார்க்கும் குழந்தைகளின் எழுதும் திறன் மற்றும் தகவல் தொடர்புத் திறன்கள் குறைவாக இருப்பது தெரியவந்தது. கல்வியில் பின்னடைவு ஏற்படுகிறது.
  • இந்த ஆபத்தான விஷயங்களை நினைத்து, பெற்றோர்கள் உடனே ஏதாவது செய்ய வேண்டும். திரையை அதிக நேரம் குழந்தைகள் பார்ப்பது குறித்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இந்த ஆய்வு முடிவுகள் நம்மை எச்சரிக்கின்றன!

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சந்தோஷமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக, பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்:
  • திரையைப் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள். குழந்தைகள் எவ்வளவு நேரம் திரையைப் பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்து, அதை கண்டிபாகப் பின்பற்றுங்கள். குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக திரையைப் பார்க்கும் நேரம் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
  • மாற்று வழிகளை ஊக்குவியுங்கள். விளையாடுதல், படித்தல், நண்பர்களுடன் பழகுதல் போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபட குழந்தைகளை ஊக்குவியுங்கள். அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுங்கள், விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்லுங்கள், நண்பர்களுடன் விளையாடச் சொல்லுங்கள்.
  • குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். குழந்தைகளுடன் பேசுங்கள்; விளையாடுங்கள்; புத்தகங்கள் படியுங்கள். அவர்களுடன் நேரம் செலவிடுவது அவர்களின் மன மற்றும் சமூக வளர்ச்சிக்கு ரொம்ப முக்கியம்.
  • அதிக நேரம் திரையை குழந்தைகள் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இது பற்றி தெரியப்படுத்தி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
  • இந்த வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், நமது குழந்தைகளுக்கு நல்ல எதிர்கால உலகை உருவாக்க முடியும். மேலும் அவர்கள் நன்றாக வளர உதவ முடியும். குழந்தைகளின் எதிர்காலம் எண்மத் திரையில் இல்லை. அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும்.
  • ஒவ்வொரு மின்னும் திரையும் ஒரு வாய்ப்பை இழக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதை சொல்லலும், ஒவ்வொரு விளையாட்டும், ஒவ்வோர் உரையாடலும் சிறந்த ஓர் எதிர்காலத்தை உருவாக்குகிறது. நம் குழந்தைகளின் எதிர்காலம் நம் கையில்.

நன்றி: தினமணி (27 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories