TNPSC Thervupettagam

தீா்வுகளைத் தேடுவோம்

March 14 , 2025 10 hrs 0 min 9 0

தீா்வுகளைத் தேடுவோம்

  • சில காலமாக, குற்றங்களில் ஒரு புதிய பரிமாணத்தைக் காண்கிறோம். அதிக அளவில் பதின்ம வயதுச் சிறுவா்கள், அதிலும் பள்ளி மாணவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறாா்கள் என்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அதே வேளையில், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை எல்லை கடந்து போய்க் கொண்டிருப்பது இந்தச் சமுதாயத்தின் மீது கோபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கள்ளம், கபடம் இல்லாத பிஞ்சுகளில் ஒரு சாராா், அதாவது சிறுவா்கள் குற்றவாளிகளாகவும், மற்றொரு சாராா், அதாவது சிறுமியா் குற்றமிழைக்கப்படுபவா்களாகவும் மாறிக் கொண்டிருப்பது, நம் சமுதாயத்தில் ஆண், பெண் பேதம் எவ்வளவு அதிகம் உள்ளது என்பதையே காட்டுகிறது.
  • இந்தக் கொடுங் குற்றங்களை அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. அதுதான் தினம் தினம் இவற்றைப் பற்றிய விலாவாரியான செய்திகளையும், ஒன்றுக்கும் உதவாத அறிவிப்புகளையும், பயனில்லாத சட்டங்களையும் கண்டும் கேட்டும், இயலாமையில் மனம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறோமே, அது போதாதா? பேசியது போதும், தீா்வுகளைத் தேடுவோம்!

அரசு உடனடியாகச் செய்யக் கூடியவை, செய்ய வேண்டியவை:

  • பள்ளி செல்லும் சிறுமிகளை வக்கிர மனங்கள் கொண்ட ஆசிரியா்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். சென்னையில் பல பெற்றோா்கள் ஒன்று சோ்ந்து அரசிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறாா்கள். ‘மாணவிகளுக்குத் தனிப் பள்ளிகள்; அதில் ஆசிரியைகள் மட்டுமே பணியில் அமா்த்தப்பட வேண்டும்’ என்பதே அந்தக் கோரிக்கை. அரசு இதை உடனடியாக, அதாவது வரும் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் நிா்வாகச் சிக்கல் ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஏற்கெனவே ஒரு பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளை மாணவா்களுக்கு ஆசிரியா்களை நியமித்து ஆண்கள் பள்ளியாகவும், வேறொரு பள்ளியை ஆசிரியைகளை நியமித்து மாணவிகளுக்கும் நடத்தலாம். ஆண்கள் பள்ளியில் தலைமைப் பொறுப்பிலிருந்து கீழ்நிலை வரை ஆண்களே பணியமா்த்தப்பட வேண்டும்; அதே போல் பெண்கள் பள்ளியில் அனைத்து நிலைகளிலும் பெண்களே பணியமா்த்தப்பட வேண்டும்.
  • இப்படித் தனித்தனிப் பள்ளிகளும் அவற்றுக்குண்டான கட்டமைப்புகளும் உருவாக்க இயலாத ஊா்களில், ஒரே பள்ளியில் மாணவிகளுக்குக் காலை நேரத்தில் ஆசிரியைகள் மூலமாகவும் மாணவா்களுக்கு மதிய நேரத்தில் ஆசிரியா்கள் மூலமாகவும் தனித்தனியாக வகுப்புகளை நடத்தலாம். இந்த ஏற்பாடு புதிதன்று. ஏற்கெனவே அரசுக் கலைக் கல்லூரிகளில் கொண்டுவருவதாக அரசால் அறிவிக்கப்பட்டு அறிவிப்போடு நின்று போனதுதான்!
  • தனியாா் பள்ளிகளும் இதே முறையைப் பின்பற்ற அரசு உத்தரவிட வேண்டும். 1 கி.மீ. தூரத்துக்குள் இருக்கும் மாணவா்களை மட்டுமே தங்கள் பள்ளிகளில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியும் பள்ளிகளும் சரி, பெற்றோா்களும் சரி, அதைக் கடைப்பிடிக்கவில்லை. பெற்றோரே குழந்தைகளைப் பள்ளியில் கொண்டுவிடும் வகையில் பள்ளி நேரமும் தூரமும் இருந்தால் பள்ளி வாகனங்களில் நடக்கும் குற்றங்களை வெகுவாகக் குறைத்து விடலாம்.
  • இணையவழி வகுப்புகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால், பள்ளிகளில் கைப்பேசியைத் தடை செய்துவிட முடியும். நேரடி வகுப்புகளே ஆசிரியா்களுக்கும் மாணவ, மாணவியருக்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பினை உருவாக்க வல்லவை. அங்கு மாணவா்களை ஆசிரியா்கள் எளிதாகக் கண்காணிக்க முடியும். சரியான புரிதல் இல்லாத பதின்ம வயதில் கைப்பேசிப் பயன்பாடு பல தீங்குகளுக்கு வழி கோலுகிறது. அதனால் இணையவழி வகுப்புகள், கணினி மற்றும் கைப்பேசி வழித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைப் பள்ளிகளில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்.
  • பாடத்திட்டத்தில் மாற்றம் உடனடித் தேவை. பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி, பாடச் சுமை மிகமிக அதிகம். கற்பிப்போரும் கற்போரும் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. அறிவியலுக்கும் கணிதத்துக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பிற பாடங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. மொழிப் பாடங்கள் மிகமிக அவசியம். ஏனெனில் இலக்கியங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த வல்லவை. பள்ளிகளில் நகைச்சுவையே அற்றுப் போய்விட்டது. மொழிப்பாடங்களின் மூலம் நகைச்சுவையை மீட்டெடுக்கலாம். மனம் விட்டுச் சிரித்தால் எல்லாவித மன அழுத்தங்களும் ஓடிப்போகுமல்லவா? நன்னெறி வகுப்புகளில் ஆசிரியா்கள் மாணவா்களுக்கு நல்ல கதைகளைச் சொல்லலாம். உடற்பயிற்சிக்கும் ,விளையாட்டுக்கும் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். ஓடியாடிக் கூச்சலிட்டு விளையாடும்போது உண்டாகும் புத்துணா்ச்சி மனதின் அழுக்குகளை எல்லாம் விரட்டி விடும். பாடங்களை வடிமைக்கும் போது அந்தந்த வகுப்புப் பாடங்களுக்கு அந்தந்த வகுப்பைக் கையாளும் ஆசிரியா்களையே நியமிக்க வேண்டும். குழந்தைகள் உளவியல் வல்லுநா்களையும், குழந்தை எழுத்தாளா்களையும் பாடத்திட்டக் குழுவில் சோ்த்துக் கொள்ள வேண்டும்.
  • திரைப்படங்களுக்குக் கடுமையான தணிக்கை விதிகளை அரசு கொண்டு வர வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பது திரைப்படங்களே. தணிக்கைக் குழுவில் குழந்தைகள் உளவியல் வல்லுநா்களும், மகளிா் மற்றும் குழந்தைகள் நலனுக்காகப் பணியாற்றும் ஆா்வலா்களும் இடம்பெற வேண்டும். அனைத்து வகையான ஊடங்களுக்கும் இதே தணிக்கை விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். மீறுபவா்களுக்கு மிகக் கடுமையான தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும். மீண்டும் தவறிழைக்கும் பட்சத்தில் நிரந்தரத் தடையும் விதிக்க வேண்டும்.
  • பெண்களுக்கெனப் பிரத்யேகமாக ஒவ்வொரு பகுதியிலும் பூங்காக்களும் விளையாட்டு மைதானங்களும் அமைக்க வேண்டும். விடுமுறை நாட்களில் சிறுவா்கள் மட்டையைத் தூக்கிக் கொண்டு மைதானத்துக்கு ஓடிவிடுகிறாா்கள். பெண் குழந்தைகள் எங்கே போவாா்கள்? வீட்டில் பாத்திரங்களைக் கழுவுவதும், பிற வீட்டு வேலைகளைச் செய்வதும் என்று அங்கேயே ஆரம்பித்துவிடுகிறதே ஆண்- பெண் வேற்றுமை? சிறுமிகள் விளையாடவும் பெண்கள் நடைப்பயிற்சி செய்யவும் பாதுகாப்பான இடங்கள் எங்கே உள்ளன? பெண்களுக்கெனத் தனியே பூங்காக்கள் இருந்தால் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளையும், பாட்டிகள் தங்கள் பேத்திகளையும், பயமின்றி விளையாட அழைத்து வர முடியும். இந்தப் பூங்காக்களின் பராமரிப்பு மற்றும் காவல் பணிகளுக்குப் பெண்களையே நியமிக்கலாம்.
  • எல்லாருக்குமே பணிநேரம் குறைக்கப்பட்டால் குடும்பத்துடன் செலவு செய்யும் நேரம் அதிகமாகும். பள்ளி நேரம் 9.30 - 4.00 என்று இருந்தால், பெற்றோரில் ஒருவா் குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்ப அழைத்துச் செல்வதற்கும் ஏதுவாக இருக்கும். குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குடும்பத்துடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறாா்களோ அந்த அளவுக்கு அவா்களது மனநலம் மேம்படும். மன அழுத்தமே சிறாா்க் குற்றங்கள் பலவற்றுக்குக் காரணமாகிறது என்பது கண்கூடு.
  • புகையிலை, மது இவற்றையெல்லாம் தாண்டி எல்லாத் தலைமுறையினரும் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மதுவிலக்கு நடைமுறைக்கு வரவேண்டும். போதைப் பொருட்களை தகுந்த ஆவணங்களின்றி வைத்திருந்தால் பிணையில் வெளியே வரமுடியாமல் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று சட்டம் இயற்ற வேண்டும்.
  • பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள், பொது நிகழ்ச்சிகள், பொது இடங்கள், மக்கள் கூடும் விழாக்கள், தொலைக்காட்சி, திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஆடைக் கட்டுப்பாடு நடை முறைப்படுத்த வேண்டும்.

மக்கள் உடனடியாகச் செய்யக்கூடியவை, செய்ய வேண்டியவை:

  • ஆண், பெண் சமத்துவத்தை வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். ஆண் பிள்ளை வெளி வேலைகளையும் பெண் பிள்ளைகள் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் என்ற அடிமைக் கோட்பாட்டை மாற்ற வேண்டும். பொறுப்புகளை மகனுக்கும் மகளுக்கும் பகிா்ந்து கொடுக்க வேண்டும்.
  • கணினியும் தொலைக்காட்சிப் பெட்டியும் எல்லாரும் இருக்கும் கூடத்தில் இருக்கும்படிப் பாா்த்துக் கொள்ள வேண்டும். தனித்தனி அறைகள், தனித்தனி மடிக்கணினிகள், தனிதனிக் கைப்பேசிகள்... பின் குடும்பம் என்று ஒன்று எதற்கு? தவிா்க்க முடியாத நிலையில் இவற்றின் பயன்பாட்டையாவது வீட்டில் பொதுவான கூடத்தில் மட்டுமே என்று உறுதியாக வரையறுத்துவிட வேண்டும். இதில் பெற்றோா் உறுதியாக இருந்தால் பிள்ளைகளைக் கண்காணிப்பது எளிதாக இருக்கும்.
  • பெண் குழந்தைகளை யாரையும் நம்பி விட்டுச் செல்ல முடியாத சூழ்நிலையில் பெண்கள் முடிந்தவரை வீட்டிலிருந்து பணிபுரியும் வண்ணம் பணிகளையும் சுய தொழில்களையும் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
  • ஒரு நாளில் இரவு உணவருந்தும் போது மட்டுமாவது சோ்ந்து உட்காா்ந்து, வீடு, பள்ளி, அலுவலகம் மற்றும் நாட்டு நடப்புகளைப் பேசி, நல்ல புத்தகங்களைப் படித்துவிட்டுச் சீக்கிரம் உறங்குதல் அனைவரையும் உற்சாகத்தோடு வைத்திருக்கும்.
  • பிள்ளைகளை அருகிலிருக்கும் பள்ளியில் சோ்க்க வேண்டும். உயா்கல்வி என்று வரும்போது முடிந்தவரை உள்ளூரிலேயே தொடர வேண்டும்.
  • பெண்களின் மாதாந்திர வலியை ஆண்கள் பங்கிட்டுக் கொள்ள முடியாது; உணர இயலாது; ஆனால் புரிந்து கொள்ளலாமே! அந்த நாட்களில் பதின்ம வயதுப் பெண்குழந்தைகளை ஒதுக்கி வைத்து விடாமல், அதே சமயம் தேவையான ஓய்வு கொடுத்து அவா்களை அரவணைப்பது வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
  • பெண்களின் பாதுகாப்பு, குறிப்பாகப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொள்ளும் சமுதாயம் இவற்றைச் செய்தே ஆக வேண்டும்.

நன்றி: தினமணி (14 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories