துணைவேந்தர் தேடுதல் குழுவும் கூட்டாட்சித் தத்துவமும்
- துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவரின் பிரதிநிதி இடம்பெறுவது குறித்துத் தமிழக அரசுக்கும் - ஆளுநருக்கும் இடையே எழுந்துள்ள சர்ச்சை, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர் பதவிகள் காலியாக இருக்கக்கூடிய சூழலுக்குக் கொண்டு செல்லுமோ என்கிற அச்சத்தைக் கல்வியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
துணைவேந்தரின் முக்கியத்துவம்:
- ஒவ்வொரு பல்கலைக்கழகமும் இணைப்பு பெற்ற கல்லூரிகளை வழிநடத்துவது தொடங்கி, அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவது உள்ளிட்ட ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவை அனைத்துக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்திச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பு துணை வேந்தருக்குத்தான் உள்ளது.
- துணைவேந்தரின் ஜனநாயகபூர்வமான அணுகுமுறையும், சிறந்த திட்டமிடலும், ஆக்கமும் ஊக்கமும் தரும் அன்றாடச் செயல்பாடுகளும் ஒரு பல்கலைக்கழகத்தைச் செயல்திறன்மிக்க கல்வி நிறுவனமாக முன்னிறுத்தும். எனவே, ஒரு பல்கலைக்கழகத்தின் அன்றாடச் செயல்பாட்டில் துணைவேந்தரின் பணி இன்றியமையாதது. ஆனால், தற்போதைய நிலையில் சென்னை, மதுரை காமராஜர், கோவை பாரதியார், சிதம்பரம் அண்ணாமலை, சென்னை அண்ணா, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன.
- துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட துணைவேந்தர் பொறுப்புக் குழு நிர்வாகப் பணிகளைக் கவனிக்கும். இந்த மூவரும் தங்களுக்குரிய வழக்கமான பணிகளுடன், பல்கலைக்கழக நிர்வாகப் பணியினையும் சேர்த்து மேற்கொள்ள வேண்டும். துணைவேந்தர் ஒருவர் மட்டும் கையாள வேண்டிய கோப்புகளில் இந்த மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து கையொப்பமிட வேண்டும்.
- இம்மூன்று உறுப்பினர்களும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் இருக்கும்போது, பல்கலைக்கழகத்தின் அன்றாடச் செயல்பாட்டுக்காக முக்கிய, உடனடி முடிவுகளுக்காக மூவரிடமும் ஒப்புதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், பல்கலைக்கழக - கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது.
அதிகரிக்கும் சிக்கல்:
- துணைவேந்தர் பதவி காலியாகும் சூழல் வரும்போது, அடுத்த துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கத் தேடுதல் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவில் யார் யார் இடம்பெறுவது என்பது தற்போது ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. துணை வேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவரின் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறை தெரிவிக்கிறது. அதன் அடிப்படையில்தான் துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட வேண்டும் என்பது ஆளுநரின் வாதமாக உள்ளது.
- ஆனால், பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகளை முழுவதுமாக மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், துணைவேந்தர் தேடுதல் குழு குறித்து அந்தந்தப் பல்கலைக்கழகச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறுகிறது. துணைவேந்தர் தேடுதல் குழு குறித்துத் தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியான சட்டங்களைக் கொண்டிருக்கவில்லை.
- மதுரை காமராசர், சென்னைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், தமிழக அரசின் பிரதிநிதி இல்லை. பாரதிதாசன், பாரதியார், பெரியார், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் பிரதிநிதி இல்லை. அண்ணா, அண்ணாமலை, திருவள்ளுவர், அழகப்பா, ஆசிரியர் கல்வியியல், திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் பிரதிநிதியும், தமிழக அரசின் பிரதிநிதியும் துணைவேந்தர் தேடுதல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
- இவ்வாறு துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பாகத் தமிழகத்தின் மாநிலப் பல்கலைக்கழகங்கள் அனைத்துக்கும் ஒரு பொதுவான விதி இல்லாதபோது, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளவாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் சார்பாக ஒரு பிரதிநிதியைத் தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சிக்கும் விரோதமானது.
- அதனால்தான், பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகள், 2010இல் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவரின் பிரதிநிதி, துணைவேந்தர் தேடுதல் குழுவில் இடம்பெற வேண்டும் என்கிற பரிந்துரை, கூட்டாட்சித் தத்துவத்தின் மாண்புகளை உள்வாங்கிக்கொண்ட அப்போதைய பல்லைக்கழக மானியக் குழுவினால் 2013ஆம் ஆண்டில் ரத்துசெய்யப்பட்டு, அந்தந்தப் பல்கலைக்கழகச் சட்டங்களின் அடிப்படையிலேயே துணைவேந்தர் தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற திருத்தம் கொண்டுவரப்பட்டது.
மாநில அரசின் முடிவே இறுதியானது:
- மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகள் 2018 வெளிவந்த பின்புதான், தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் சட்டப்படி, தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுத் துணைவேந்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அப்போதெல்லாம், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவரின் பிரதிநிதி தேடுதல் குழுவில் இல்லையே என்கிற கேள்வி எழவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
- அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உயர் கல்வி தொடர்பான பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பாக மாநிலத்தில் பின்பற்றிவந்த சட்ட நடைமுறைகள் மறுதலிக்கப்படுவதன் நியாயம் என்ன? துணைவேந்தருக்கு உரிய தகுதிகள் எனப் பல்லைக்கழக மானியக் குழு அறிவித்ததைப் பின்பற்றாமல், தமிழகத்தில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்ட வரலாறும் உண்டு.
- பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகள் 2010இல் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுபவர்கள் பேராசிரியர்களாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. பேராசிரியர் பதவி என்பது பல்கலைக்கழகங்களில் மட்டுமே உள்ளதாகும். ஆனால், 2012 முதல் 2015 வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் கல்யாணி மதிவாணனும், இதே காலக்கட்டத்தில் திருச்சி பாரதிதாசன் பல்லைக்கழகத்தில், திருப்பூர் அரசுக் கல்லூரியில் முதல்வராக இருந்த முத்துக்குமாரும் துணைவேந்தர்களாகச் செயல்பட்டுள்ளனர்.
- பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை அமல்படுத்துவதில் மாநில அரசின் முடிவே இறுதியானது என்பதற்கு இவற்றை உதாரணமாகச் சொல்ல முடியும். துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகள், பிரிவு 7.3 (ii)–ஐ நீக்கிவிட்டு அந்தந்தப் பல்கலைக்கழகச் சட்டங்களின்படியே இக்குழு அமைக்கப்பட வேண்டும் என 2021ஆம் ஆண்டு அரசாணை எண் 5 வெளியிடப்பட்டது கவனிக்கத்தக்கது.
- நிறைவாக, திட்டக்குழு இருந்த காலக்கட்டத்தில், ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் பல்கலைக்கழக மானியக் குழு, தனக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து பல்கலைக்கழகம் - கல்லூரி மாணவர்களின், ஆசிரியர்களின் நலனுக்கான ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தியது. தற்போது அத்தகைய திட்டங்கள் குறைவு அல்லது இல்லை.
- பல்கலைக்கழக மானியக் குழுவின் ஊதியம் குறித்த பரிந்துரைகள், மாநிலத்தில் அமல்படுத்தப்படுவதால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தில் 50 விழுக்காட்டை முதல் ஐந்து ஆண்டுகளுக்குக் கொடுத்துவந்த பல்கலைக்கழக மானியக் குழு, 7ஆவது ஊதியக் குழுவில் இதனை 39 மாதங்கள் மட்டும் கொடுப்பதாக அறிவித்தது. ஆனால், இந்தக் குறைந்தபட்ச நிதிகூடத் தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்சினையில் உரிய தீர்வு காணப்படவில்லை என்றால், அது மாணவர்களின் எதிர்காலத்தைத்தான் பாதிக்கும்!
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 01 – 2025)