TNPSC Thervupettagam

தெளிவான தீர்ப்பு

February 20 , 2025 6 hrs 0 min 47 0

தெளிவான தீர்ப்பு

  • தென் மாவட்டங்களில் நடந்துள்ள கடலோர தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக நடந்துள்ள இந்த தாது மணல் கொள்ளையில், அரசியல் வாதிகள்-அதிகாரிகள்-மணல் கொள்ளையர்களுக்கிடையே தொடர்பு உள்ளதா என்பதை ஆழமாக விசாரிக்கவும், சதி, ஊழல், இணக்கம் ஆகியவை இல்லாமல் இவ்வளவு பெரிய முறைகேட்டை எவரும் செய்திருக்க முடியாது என்றும் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், எம். ஜோதிராமன் ஆகியோர் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
  • அது மட்டுமின்றி, அணு உலைகளில் பயன்படுத்தக் கூடிய கதிர்வீச்சு தன்மை கொண்ட தோரியம் உள்ளிட்ட அரிய தாது மணல் கொள்ளையில் தேசப் பாதுகாப்பும் அடங்கியுள்ளதால் சட்டவிரோத பணப் பரிமாற்றம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பதையும் விசாரிக்க அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தாது மணல் கொள்ளையால் அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த கடலோர தாது மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
  • பிரச்னை பூதாகரமாகத் தொடங்கியதால் அப்போதைய அதிமுக அரசு கடந்த 2013 செப்டம்பரில் கடலோரங்களில் தாது மணல் அள்ள தடை விதித்தது. இந்த மணல் கொள்ளை குறித்து 2015-இல் சென்னை உயர்நீதிமன்றமும் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. தடைக்குப் பிறகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வந்ததுதான் உச்சகட்ட முறைகேடு.
  • தமிழக அரசின் அப்போதைய வருவாய்த் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு மேற்கொண்ட ஆய்வில், தடைக்கு முன்பும், தடைக்குப் பிறகும் சுமார் 18.25 லட்சம் டன் தாது மணல் அள்ளப்பட்டு கடத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு 2017-இல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அரசுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பீட்டை சரி செய்ய தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ. 5,832.44 கோடியை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
  • அதிகாரிகள் ககன் தீப் சிங் பேடி மற்றும் இரண்டாவது கட்ட ஆய்வை மேற்கொண்ட அதிகாரி சத்யபிரத சாகு ஆகியோரின் விசாரணை அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம், தாது மணல் நிறுவனங்களுக்கு அரசு விதித்துள்ள அபராதத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை தொடர அனுமதி அளித்துள்ளது. சட்டவிரோதமாக 3 மாவட்டங்களிலும் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 1.55 கோடி டன் தாது மணலை மணவாளக்குறிச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான அரிய மணல் ஆலையிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கு விசாரணையை மேற்கொள்ள நேர்மையான அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து அதை சிபிஐ இயக்குநர் கண்காணிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
  • சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள தாது வளத்தின் மதிப்புக்கும், தனியார் மணல் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகைக்கும் இடையே மலைக்கும், மடுவுக்குமான வேறுபாடு உள்ளது. சிபிஐ விசாரணைக்குப் பிறகு, அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு முழுமையாகக் கணக்கிடப்பட்டு அதை வசூலிக்க வேண்டும். தொடர்புடைய நிறுவனங்கள் மட்டுமல்லாது அவர்களுக்கு, உடந்தையாகச் செயல்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • சிபிஐ விசாரணையைக் காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிக்க வேண்டும். நீதிமன்றம் தாமாக முன்வந்து மேற்கொண்ட விசாரணை என்பதால் அதன் நேரடி கண்காணிப்பு இருக்கும் என நம்பலாம்.
  • அது மட்டுமின்றி, தாது மணல் கொள்ளைபோன்றே மாநிலம் முழுவதும் கடந்த பல பத்து ஆண்டுகளாக இதர கனிம வளங்கள் தனி நபர்களால் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளையடிக்கும் நபர்கள் மாறுகிறார்களே தவிரஸ கனிம வளக் கொள்ளை நின்றபாடில்லை.
  • ஆற்று மணல், செம்மண், சரளை மண், ஜல்லி கற்கள், செயற்கை மணல் தயாரிப்புக்காக உடைக்கப்படும் மலைகள், மலை மரங்கள் என இயற்கை வளங்கள் பலவும் நாள்தோறும் பெருமளவு கொள்ளையடிக்கப்பட்டு கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட கடத்தப்பட்டு வருகின்றன. அது தொடர்பான செய்திகளும், காணொலிகளும் சமூக ஊடகங்களில் நாள்தோறும் வலம் வருகின்றன; பல வழக்குகளும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.எனவே, அந்த வழக்குகளையும் இதேபோல் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து உரிய அபராதத் தொகையை வசூலித்து அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். அவ்வாறு கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே நாட்டின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததிக்கு கொஞ்சமாவது வளங்கள் மிஞ்சும்.

நன்றி: தினமணி (20 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories