தேர்தல் ஆணையம் மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு சாதாரணமல்ல!
- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியாவில், நியாயமான முறையில் தேர்தலை நடத்திவரும் தேர்தல் ஆணையத்தின்மீது மின்னணு வாக்கு எந்திரம் உட்பட ஏதாவது ஒரு வகையில் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புதிதாக ஒரு குற்றச்சாட்டை தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தெரிவித்துள்ளார்.
- அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில தேர்தலின் உண்மைத்தன்மை குறித்து அவர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ‘அந்த மாநிலத்தின் மக்கள் தொகை 9.54 கோடி மட்டுமே. ஆனால், அதைவிட அதிகமாக வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இடையில் 39 லட்சம் வாக்காளர்கள் எப்படி சேர்க்கப்பட்டனர்’ என்று அவர் எழுப்பியுள்ள கேள்வி சாதாரணமானதல்ல.
- ஜனநாயக நாட்டில் தேர்தல் நடைமுறை நம்பிக்கைக்குரியதாக இருந்தால் மட்டுமே அரசு நிர்வாகம் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வரும். நாட்டு மக்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருப்பார்கள். அந்த நடைமுறை மீது சந்தேகம் எழுந்தாலோ, பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை இழந்தாலோ, அமைதி சீர்கெடும். அத்தகைய ஒரு சூழ்நிலை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு ஏற்றதல்ல.
- பொறுப்புள்ள பதவியில் உள்ள ராகுல் காந்தி, இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தும் முன், குற்றம்சாட்டுவதற்கு மேற்கோள் காட்டும் புள்ளி விவரங்களை அவரே ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துவிட்டு பொதுவெளியில் வெளியிடுவதே அவர் வகிக்கும் பதவிக்கு அழகாக இருக்கும். ராகுலின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மறுத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் ராகுலின் குற்றச்சாட்டை புறந்தள்ளி விடாமல் அவருக்கு எழுத்துப்பூர்வமாக உரிய பதிலளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
- மக்கள்தொகை எண்ணிக்கை என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையிலானது. இந்தியாவில் கடைசியாக 2011-ம் ஆண்டுதான் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. அதற்கடுத்து 2021-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், கோவிட் பெருந்தொற்று காரணமாக அந்தப்பணி தள்ளிப்போனது. இந்த ஆண்டு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
- ஆனால், தேர்தல் ஆணையத்தை பொறுத்தமட்டில், ஆண்டுதோறும் செப்டம்பரில் தொடங்கி டிசம்பர் வரைபுதிய வாக்காளர்களை சேர்த்தல், திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. காலாண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டு புதிய வாக்காளர்களை சேர்த்தவண்ணம் உள்ளது.
- இதுதவிர, 18 வயது பூர்த்தியானவர்கள் உடனுக்குடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். எனவே, பழைய மக்கள்தொகை புள்ளிவிவரத்துடன் தற்போதைய வாக்காளர் பட்டியலை ஒப்பிடுவதே தவறானது. இருந்தாலும் ராகுல் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு நம் ஜனநாயக அமைப்பின்மீது வீசப்படும் பலமான ஏவுகணை என்பதால், தேர்தல் ஆணையம் நாட்டு மக்கள் அனைவரும் சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து கொள்ளும் வகையில் பதிலளிப்பது அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 02 – 2025)