தேர்தல் முறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்
- தேர்தல் நடத்தை விதிகள் - 1961இல் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இதன்படி, வாக்குச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை மக்கள் பார்வைக்காக வெளியிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
- ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான காணொளிகள், சிசிடிவி பதிவுகள், படிவம் 17-சியின் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிடுமாறு பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மஹ்மூத் பிரச்சா வழக்குத் தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த ஆவணங்களை மஹ்மூத் பிரச்சாவிடம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு, டிசம்பர் 9இல் உத்தரவிட்டது.
- இந்தப் பின்னணியில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் தேர்தல் நடத்தை விதிகள், 1961, விதி 93 (2) (a)இல் மத்திய சட்டம் - நீதித் துறை அமைச்சகம் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. இதன்படி, வேட்பு மனுக்கள் உள்ளிட்ட தேர்தல் ஆவணங்கள் - குறிப்பாகக் காகித ஆவணங்களை மட்டுமே மக்கள் கேட்டுப்பெற முடியும். வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களின் சிசிடிவி கேமரா பதிவுகள், இணையத்தில் வெளியிடக்கூடிய காட்சிகள் போன்ற ஆவணங்களைக் கேட்டுப் பெற முடியாது.
- பொதுவெளியில் எந்த விவாதமும் நடத்தப்படாமல் தன்னிச்சையாக இந்த மாற்றத்தைத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருப்பதாகவும், உடனடியாக அதை மத்திய சட்டம் - நீதித் துறை அமைச்சகம் செயல்படுத்தியிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் அக்கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கூறியிருந்தது.
- மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் தற்காலிகமாக அறிவிக்கப்பட்ட பதிவான மொத்த வாக்குகளைவிட, இரவு 11.30 மணிக்கு இறுதியாக அறிவிக்கப்பட்ட வாக்குகளில் 76 லட்சம் வாக்குகள் கூடுதலாக இருந்தது குறித்தும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியிருந்தது. இதில் எந்தத் தவறும் நேரவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப ரீதியில் முறைகேடு செய்ய முடியுமா என்பது இன்னும் அதிகாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
- ஆனால், அரசு அமைப்புகள், உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றின் துணையுடன் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கான சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. இதுதொடர்பாகச் சந்தேகம் எழுப்புபவர்களுக்கு முறையாக விளக்கம் அளிப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை. தேர்தல் பத்திரம் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என 2024 பிப்ரவரியில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் நிறுவனங்கள், தனிநபர்கள் குறித்த தகவல்களை வாக்காளர்கள் தெரிந்துகொள்வது அடிப்படை உரிமை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- தவிர, இது சமூக ஊடக யுகம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வாக்காளர் எந்தக் கட்சி சின்னத்துக்கான பொத்தானை அழுத்துகிறார் என்பதைத் தவிர ஏறத்தாழ எல்லா நிகழ்வுகளும் ஒளிப்படங்களாகவும் காணொளிகளாகவும் வாக்காளர்களாலும் அரசியல் கட்சியினராலும் ஊடகங்களாலும் பதிவுசெய்யப்படுகின்றன; சமூகவலைதளங்களில் பதிவேற்றப்படுகின்றன. இப்படியான ஒரு காலக்கட்டத்தில் இப்படியான சட்டத் திருத்தங்கள் தேவையற்ற சர்ச்சைகளுக்கே வழிவகுக்கும்.
- குறிப்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு இன்னமும் உரிய விளக்கங்கள் கிடைக்காத நிலையில், ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் இப்படியான ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதைத் தகவல் உரிமைச் செயற்பாட்டாளர்களும் விமர்சித்திருக்கிறார்கள். தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், தேர்தல் அரசியலின் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்தும் வகையிலான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கிலும் நியாயமான தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 12 – 2024)