TNPSC Thervupettagam

தேவை தடையல்ல, தண்டனை!

March 3 , 2025 5 hrs 0 min 32 0

தேவை தடையல்ல, தண்டனை!

  • மகாராஷ்டிரத்தில் உள்ள ஏவியோ மருந்து தயாரிப்பு நிறுவனம் வலி நிவாரண மாத்திரைகளைத் தயாரிக்கிறது. இந்த மாத்திரைகளில் உடலுக்குத் தீங்கிழைக்கும் டேபன்டடால், கரிசோப்ரோடால் ஆகியவற்றின் கலவை இடம்பெற்றுள்ளது. மூச்சு விடுவதில் சிரமத்தையும் மூளையில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதால் இந்த மருந்துக் கலவையைப் பயன்படுத்த உலகில் எங்குமே அனுமதி அளிக்கப்படவில்லை.
  • இதை அதிக அளவில் பயன்படுத்தினால் மரணமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவிலும் இவற்றைத் தனித்தனியே மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • மலிவான விலை, பரந்த அளவில் கிடைப்பது போன்றவற்றால் ஏவியோ நிறுவன வலி நிவாரண மாத்திரைகள் மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப் பொருளைப்போல பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவல் சர்வதேச அளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்த மாத்திரைகள் பார்ப்பதற்கு சட்டபூர்வமானவைப்போல தோற்றம் அளிக்கும் வகையில் பேக்கிங் செய்யப்பட்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால், இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கானா, நைஜீரியா போன்ற நாடுகளில் பெரும் பொது சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
  • "ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அவர் தன்னிலை மறந்து இளைப்பாறுவார். இது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கானது. ஆனால், இதுவே இப்போது வியாபாரமாகி உள்ளது' என்று ஏவியோ நிறுவன இயக்குநர்களில் ஒருவரான வினோத் சர்மா கூறிய கருத்துகள் ரகசிய கேமராவில் படம் பிடிக்கப்பட்டு வெளியானது மருத்துவ வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஏவியோ நிறுவனத்தின் இந்த முறைகேட்டை பிபிசி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
  • பிபிசியில் இந்தக் காணொலி வெளியானவுடன் களத்தில் இறங்கிய இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ), டேபன்டடால், கரிசோப்ரோடால் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு அளிக்கப்பட்ட தடையில்லாச் சான்றை (என்ஓசி) திரும்பப் பெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் உள்ள ஏவியோ மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மத்திய, மாநில மருந்துக் கண்காணிப்பாளர்களின் கூட்டுக் குழு சோதனை நடத்தியுள்ளது.
  • இந்திய மருந்துகளால் எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறையல்ல. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகளை உட்கொண்ட 69 குழந்தைகள் உயிரிழந்ததாக மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் அகமதோ லாமின் சமடே கடந்த 2022-ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டினார்.
  • ஹரியாணா மாநிலம், சோனிப்பட்டை சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த நான்கு இருமல் மருந்துகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றும் குழந்தைகளின் இறப்புக்கு காரணமான ரசாயனங்களைக் கொண்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) அப்போது எச்சரித்தது நினைவுகூரத்தக்கது.
  • வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் டைஎத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் ஆகியவை இந்த மருந்துகளில் அளவுக்கு அதிகமாக இருந்தது உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
  • காம்பியாபோலவே, 2022-இல் இந்திய மருந்துகளை உட்கொண்ட உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் 65 பேர், 2023-இல் கேமரூனில் 12 குழந்தைகள் உயிழந்தனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்தை அமெரிக்காவில் பயன்படுத்திய மூன்று பேர் 2023-இல் உயிரிழந்தனர்; எட்டு பேர் பார்வை இழந்தனர்.
  • இந்தியாவிலும் இதுபோன்ற மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
  • 1986-இல் மும்பையில் 14 பேர், 1998-இல் புது தில்லி அருகே உள்ள குருகிராமில் 36 பேர், ஜம்மு ஒன்றியப் பிரதேம், உதம்பூரில் 2020-இல் 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
  • முந்தைய சம்பவங்களில் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் குறித்து இந்தியா கேள்வி எழுப்பியது. ஆனால், இப்போது மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் புகார் தெரிவிக்கவில்லை என்றபோதும், மறுக்க முடியாத ஆதாரமாக ஏவியோ நிறுவன இயக்குநரின் பேட்டி வெளியானதன் காரணமாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
  • ஏவியோ நிறுவனம் மருந்து உற்பத்தி செய்ய தடை, மருந்து உற்பத்திக்கான உரிமத்தைத் திரும்பப் பெறுதல், குற்றச்சாட்டுக்கு உள்ளான மருந்துகளின் ஏற்றுமதிக்குத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவையே.
  • இருப்பினும், அதிகபட்ச அபராதம் விதிப்பதுடன், மருந்து நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு சட்டபூர்வமாக கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதேபோன்று, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு தரமற்ற மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசு அதிகாரிகளும் பொறுப்பாக்கப்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள்தான் எதிர்காலத்தில் மருந்து ஏற்றுமதி முறைகேடுகளைத் தடுப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.
  • கரோனா தீநுண்மி பரவியபோது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கு தடுப்பூசிகளை இலவசமாக இந்தியா வழங்கியது. இந்திய மருந்துகளின் தரத்துக்கு உலக நாடுகளில் நற்பெயர் உள்ளது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. ஒரு சில நிறுவனங்களின் மோசமான செயல்களால் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.
  • குறைந்த முதலீட்டில் கொள்ளை லாபம் ஈட்ட நினைக்கும் ஒருசில மருந்து நிறுவன உரிமையாளர்களாலும், லஞ்சத்தில் திளைக்கும் மருந்துக் கண்காணிப்பு அதிகாரிகளாலும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட அனுமதிக்கக் கூடாது.

நன்றி: தினமணி (03 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories