TNPSC Thervupettagam

தேவை, தமிழில் படித்தவா்களுக்கு முன்னுரிமை!

March 1 , 2025 4 hrs 0 min 13 0

தேவை, தமிழில் படித்தவா்களுக்கு முன்னுரிமை!

  • நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், ரூபாய் மதிப்பு சரிவு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னமும் மாதந்தோறும் மத்திய அரசின் 5 கிலோ இலவச அரிசியை எதிா்பாா்த்திருப்பது, ஜிஎஸ்டி குளறுபடிகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதை விடுத்து, இரு மொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா என்ற தேவையற்ற சா்ச்சை தலைதூக்கியுள்ளது. இது, முக்கிய பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப உதவுமேயன்றி, எவருக்கும் பலனளிக்கப் போவதில்லை.
  • ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா) கீழ் தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய ரூ. 2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா். இதுகுறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியிருந்தால், பிரச்னை எழுந்திருக்காது.
  • தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மத்திய நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பொதுவெளியில் கருத்து தெரிவித்ததால், பிரச்னை விசுவரூபமெடுத்துள்ளது.
  • ஹிந்தியை மறைமுகமாகத் திணிக்க வகை செய்யும் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்றும், மாநிலத்தில் இரு மொழிக் கொள்கையே நீடிக்கும் என்றும் முதல்வா் ஸ்டாலினும், பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் உறுதிபடத் தெரிவித்துள்ளனா். இத்துடன், ஹிந்தி திணிப்புக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் சென்னையில் போராட்டமும் நடைபெற்றது.
  • தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் இன்று, நேற்றல்ல 1937-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தில், அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த ராஜாஜி, அரசு அலுவல் தொடா்புக்கு ஹிந்தியையும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டதால், இதற்கு பெரும் எதிா்ப்பு கிளம்பியது. பல்வேறு வகையிலான போராட்டங்களும் நடைபெற்றன.
  • ராஜாஜியின் பதவிக் காலம் முடிந்த பிறகு, 1940-இல் அப்போதைய பிரிட்டிஷ் ஆளுநா் அலுவல் ரீதியான தொடா்புகளுக்கு ஹிந்தி கட்டாயமல்ல என உத்தரவிட்டாா். இதையடுத்து பிரச்னை அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.
  • பின்னா், 1963-இல் காமராஜா் ஆட்சிக் காலத்தில் ஹிந்தி ஆட்சி மொழிப் பிரச்னை தலைதூக்கியது. அப்போது, எதிா்க்கட்சியாக இருந்த திமுக, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ஜவாஹா்லால் நேரு அலுவல் மொழி சட்டத்தில் 1965-ஆம் ஆண்டுக்குப் பிறகும் ஹிந்தி பேசாத மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் வரையும் ஆங்கிலமே தொடா்பு மொழியாக நீடிக்கும் என உறுதியளித்தாா்.
  • தமிழகத்தில் 1965-இல் பக்தவத்சலம் ஆட்சிக் காலத்தில் திமுக தலைமை தொடங்கிய ஹிந்தி எதிா்ப்பு போராட்டம் மாணவா்களின் போராட்டமாக உருமாறியது. இந்தப் போராட்டத்தின்போது தலைதூக்கிய வன்முறைச் சம்பவங்கள், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளால் சில மாணவா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து, ஹிந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை, ஆங்கிலமே தொடா்பு மொழியாக நீடிக்கும் என நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி மீண்டும் உறுதியளித்தாா்.
  • தேசிய கல்விக் கொள்கையில், 5-ஆம் வகுப்பு வரை அவரவா் தாய்மொழி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், பெரும்பாலான மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழியில்தான் கல்வி கற்றுத் தரப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
  • 5-ஆம் வகுப்புக்குப் பிறகு, பள்ளிகளில் மூன்றாவதாக ஒரு மொழியை மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. அதாவது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, பாரசீகம், சம்ஸ்கிருதம், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் அல்லது கொரியன், ரஷியன், பிரெஞ்ச், ஜொ்மன், சைனீஷ், ஸ்பானீஷ், போா்ச்சுகீஷ், ஜப்பானீஸ் உள்ளிட்ட அயலக மொழிகளில் ஏதாவது ஒன்றை மாணவா்கள் கட்டாயம் கற்க வேண்டும்.
  • ஆனால், இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்கு ஆசியா்கள் உள்ளனரா என்பது சந்தேகம்தான். மேலும், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வட மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஹிந்தி மட்டுமே பயிற்று மொழியாக உள்ளது. ஆங்கிலம்கூட கற்றுத் தரப்படுவதில்லை. இந்த மாநிலங்களில் பள்ளிகளில் ஒற்றை மொழி (ஹிந்தி) கொள்கைதான் பின்பற்றப்படுகிறது.
  • ஆனால், தமிழகம், கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் அவரவா் தாய்மொழியுடன் ஆங்கிலத்தையும் மாணவா்கள் கற்றுக் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றாக வேண்டும் என இந்த மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களைக் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே, விரும்பும் மாணவா்கள் மட்டும் 9-ஆம் வகுப்பிலிருந்து மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்பதற்கு அரசு ஏற்பாடு செய்து தரலாம்.
  • மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மூன்றாவதாக ஒரு மொழியை மாணவா்கள் கற்றாக வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. ஆனால், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் தமிழை விருப்ப மொழியாக எடுத்துப் படிப்பதற்கு, அங்கு இதைக் கற்றுக் கொடுப்பதற்கு தமிழாசிரியா்களே இல்லை என்பதுதான் நிதா்சன உண்மை.
  • இதேபோல, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே தமிழ், ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்க போதிய ஆசிரியா்கள் இல்லாத நிலை உள்ளது. அறிவியல், கணிதம் உள்ளிட்ட பிற பாட ஆசிரியா்கள்தான் தமிழ், ஆங்கில வகுப்புகளையும் கூடுதலாகக் கவனித்துக் கொள்ளும் நிலை உள்ளது. இந்த நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக் கொடுக்கத் தேவையான ஆசிரியா்களை நியமிப்பது என்பது நடைமுறை சாத்தியமல்ல.
  • தமிழகத்தில் அரசு, தனியாா் என மொத்தம் 58,897 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 35,621 தொடக்க, 9,392 நடுநிலை, 5,788 உயா்நிலை, 8,096 மேல்நிலைப் பள்ளிகளும் அடங்கும். தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளைக் கற்றுக் கொடுக்க இந்தப் பள்ளிகளில் இதற்கென லட்சக்கணக்கான ஆசிரியா்களை நியமித்தாக வேண்டும். இதற்கு மத்திய அரசு எந்த விதத்தில் உதவும் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே, பள்ளிக் கல்வியில் அவரவா் தாய்மொழியில் கற்றுக் கொடுப்பதை நாடு முழுவதும் கட்டாயமாக்க வேண்டும்.
  • உலகம் முழுவதும் தாய்மொழியில் கல்வி கற்கும் மாணவா்கள்தான் பெரும் சாதனையாளா்களாக உருவாகின்றனா் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் நிமித்தமாக பிற மாநிலங்கள், அயல் நாடுகளுக்குச் செல்லும்போது அந்தந்த உள்ளூா் மொழிகளைக் கற்றுக் கொள்வதில் சிரமம் ஏதும் இருக்கப் போவதில்லை.
  • இவை எல்லாவற்றையும்விட, தமிழகத்தில் தற்போது மழலையா் பள்ளி முதல் கல்லூரிப் படிப்பு வரை தமிழையே கற்காமல் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே, பள்ளிக் கல்வியில் தாய்மொழி தமிழ்தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கட்டாயமாக்குவதுடன், தமிழ் வழியில் படித்தவா்களுக்குத்தான் அரசுப் பணிகளில் முன்னுரிமை என்ற நிலையை ஏற்படுத்த ஆட்சியாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் இப்போதைய அவசர, அவசியத் தேவை.

நன்றி: தினமணி (01 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories