TNPSC Thervupettagam

தேவை நிரந்தரத் தீர்வு!

February 27 , 2025 5 hrs 0 min 16 0

தேவை நிரந்தரத் தீர்வு!

  • மத்தியிலும், மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவது தொடர்கிறது. இதேபோல, தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன், அதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிப்பதும், மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
  • கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரை, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அதோடு, அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதைக் கண்டித்து, ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • தமிழக மீனவர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த மீனவர்களை விடுதலை செய்யும்போது, அவர்களுக்கு அபராதமாகப் பெரும் தொகை விதிக்கும் நடவடிக்கையை இலங்கை நீதிமன்றங்கள் அண்மைக்காலமாகக் கடைப்பிடிக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் விசைப் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு, தற்போது அவர்களை விடுதலை செய்யும்போது அபராதமும் விதிப்பது அவர்களது வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
  • தமிழக மீனவர்களைக் கைது செய்வதுடன், அவர்களை இலங்கைக் கடற்படையினர் அவ்வப்போது தாக்குவதும் நீடித்து வருகிறது. கடந்த 2014-2024 வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 3,288 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 365 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மீனவர் சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2024-ஆம் ஆண்டு, நவம்பர் 22-ஆம் தேதி வரை இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 736 முறை தாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு உதவும் வகையில், மத்தியில் முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், தற்போதைய பாஜக அரசும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாலும், அவை எதுவும் நடைமுறை சாத்தியமாகவில்லை என்பதுதான் உண்மை. கைதான மீனவர்களில் பலர் அவ்வப்போது விடுதலை செய்யப்பட்டாலும், இந்த பிரச்னைக்கு இன்னமும் நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.
  • தமிழக மீனவர்களின் இந்த அவல நிலைக்கு நமது கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததுதான் முக்கியக் காரணம் என காங்கிரஸ், திமுக மீது பிற கட்சிகள் குற்றஞ்சாட்டுவதில் உண்மை இருந்தாலும், இந்தப் பிரச்னையை அனைத்துக் கட்சிகளும் அரசியல் கண்ணோட்டத்துடன்தான் அணுகுகின்றன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
  • கடந்த 1974-ஆம் ஆண்டில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பது என்றும், இதற்குப் பதிலாக இலங்கை வசமிருந்த கன்னியாகுமரி அருகேயுள்ள தாது வளமிக்க சிறு தீவை இந்தியாவுக்கு விட்டுக் கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகவும் கையொப்பமிட்டனர்.
  • இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு 50 ஆண்டுகள் கடந்த பிறகும், தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இதனிடையே, கச்சத்தீவை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் இன்னமும் நிலுவையில்தான் உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, கச்சத்தீவை மீட்க முடியாது என மத்திய அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
  • இரு நாட்டு மீனவர்கள் அடங்கிய பணிக் குழுக்கள் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்னைக்கு முடிவு காண மத்திய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இந்தக் குழுக்கள் ஏற்கெனவே சில முறை நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் எந்த முடிவும் ஏற்படவில்லை. இரு நாடுகள் இடையே ராஜீய ரீதியில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாத நிலையில், மீனவர்கள் குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டாலும், அது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமாகும் எனத் தெரியவில்லை.
  • எனவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாவிட்டாலும், நமது மீனவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையிலான நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது, கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில் புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் போலவே தமிழர்களான வட இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
  • தமிழக மீனவர்கள் பிரச்னையை அரசியலுக்காக அவ்வப்போது எழுப்புவதை விடுத்து, நிரந்தரத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது. இது விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்லாமல் இலங்கை அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், தமிழக மீனவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்!

நன்றி: தினமணி (27 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories