தொடரக் கூடாது போராட்டம்!
- வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டு காலமாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் இம் மாதம் 14-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதன்மூலம் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டுவதாகத் தெரிகிறது.
- நாள்தோறும் இன்னல்களைச் சந்தித்து வரும் விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தலைநகர் தில்லியை நோக்கிய இந்த இரண்டாவது கட்ட போராட்ட பேரணியானது ஹரியாணா-பஞ்சாப் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த இரண்டாவது கட்ட போராட்டத்தை தொடர்ந்து இதுவரையில் ஐந்து முறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அவற்றில் இரு தரப்புமே தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் தீர்வு எட்டப்படவில்லை.
- கடந்த ஜனவரி 18 -ஆம் தேதி விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட பயிர்களை மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்தது. அதை விவசாய சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
- வேளாண் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எனக் கூறி மத்திய அரசு கடந்த 2020-இல் 3 சட்டங்களை இயற்றியது. அந்த சட்டங்கள் வேளாண் துறையில் தனியார் பெரு நிறுவனங்கள் புகுந்துவிட வாய்ப்பளிக்கும்; அவர்களிடம் விவசாயிகள் கையேந்தும் நிலையை உருவாக்கிவிடும் எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் தில்லியை நோக்கி பேரணி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஓராண்டு காலம் நீடித்த அந்த முதல் போராட்டமானது, மூன்று வேளாண் சட்டங்களையும் அரசு திரும்பப் பெற்ற பிறகே முடிவுக்கு வந்தது.
- அப்போது, விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அரசு அளித்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் விவசாயிகளின் குற்றச்சாட்டு. எனவே, மீண்டும் தொடங்கப்பட்டதுதான் இப்போதைய இரண்டாவது கட்ட போராட்டம்.
- வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் மட்டுமின்றி, அந்த விலை நிர்ணயத்துக்காக தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை அரசு கைவிட்டு, மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலான முறையைப் பின்பற்ற வேண்டும். 23 பயிர்களுக்கு மட்டுமேயான ஆதரவு விலைப் பட்டியலை விரிவுபடுத்த வேண்டும்; சிறு-குறு விவசாயிகளுக்கான வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; பயிர்காப்பீட்டு திட்டத்துக்கான பிரீமிய தொகையை அரசே செலுத்த வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன முக்கியமான கோரிக்கைகள் ஆகும்.
- இதனிடையே, நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன், தொழில் துறையினரைப் போன்று நிதியமைச்சரை விவசாய சங்கப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசினர். அப்போது பிரதம மந்திரி வேளாண் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக வழங்கப்படும் ரூ.6,000 நிதியுதவியை இரட்டிப்பாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- அதற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் எதிர்க்கட்சியான காங்கிரûஸ சேர்ந்த சரண் ஜித் சிங் சன்னி எம்.பி. தலைமையிலான வேளாண்மை, கால்நடைகள் மற்றும் உணவுப்பதப்படுத்துதல் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவும் பரிந்துரை செய்தது. நிதியுதவியை இரட்டிப்பாக்க வாய்ப்பு இல்லை என்றாலும், கூடுதலாக ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. எனினும் 2025-26 -ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அதற்கான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
- நாட்டில் உள்ள இதர பெரும் தொழில் நிறுவனங்கள் இதுபோன்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்கு தீர்வுகாண அரசு ஓராண்டு காலத்தை எடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை. உற்பத்தி முடங்கும்; வேலைவாய்ப்பு பாதிக்கும்; பொருளாதாரம் சரியும்; அந்நியச் செலாவணி கையிருப்பு குறையும்; விலைவாசி உயரும் என அடுக்கடுக்கான காரணங்களைக் கூறி என்ன விலை கொடுத்தாவது அந்தப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர அரசு முனைப்புக் காட்டும்.
- ஆனால், நாட்டில் 60 சதவீத மக்களுக்கும் மேலானவர்கள் நம்பியுள்ள வேளாண் தொழிலைப் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு, அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண ஆண்டுக்கணக்கில் கால அவகாசம் எடுத்துக்கொள்வது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
- வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பதற்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை அளிக்க வாய்ப்பில்லை என அரசு பலமுறை மறைமுகமாக தெரிவித்துள்ளது. அது பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசு அஞ்சுவதாகத் தெரிகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை கோருவதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதும், அதை அளிப்பதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதும் பிரச்னையைத் தீர்க்காது.
- எனவே, இரு தரப்பும் தங்களது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வந்தால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும்; போராட்டமும் முடிவுக்கு வரும்.
நன்றி: தினமணி (12 – 02 – 2025)