தொடரும் விபரீதங்கள்!
- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு மார்ச் 4-ஆம் தேதி திடீரென பெயர்ந்து விழுந்தது.
- அப்போது வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக்கொண்டிருந்த மாணவர்களில் ஒருவருக்கு தலையில் ரத்தக் காயமும், மேலும் இரு மாணவர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டிருக்கிறது. அதிருஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை.
- வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட இந்த வகுப்பறைக் கட்டடம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தில் ஆறு மாதங்களில் பழுது ஏற்பட்டு, மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- இதற்கு முன்னால், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் (ஜூன், 2022), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியிலும் (ஆகஸ்ட், 2024), ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் (அக்டோபர், 2024) இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இவையெல்லாம் சில உதாரணங்கள்தான். இந்த சம்பவங்கள் எல்லாம் அரசுப் பள்ளிகளில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
- சம்பவம் நடந்தவுடன் பரபரப்பாகப் பேசப்படுவதோடு, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கண்டனக் குரல்கள் எழுவதும், நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் பதிலளிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. அதனால் இவற்றைக் கடந்து செல்ல முடியவில்லை.
- "பள்ளிகளில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டடங்களைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு செய்து அது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என்பன போன்ற உத்தரவுகள் அரசின் சார்பில் பிறப்பிக்கப்படாமல் இல்லை. இதுபோன்ற சம்பவங்களில் பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
- மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்படும் கட்டடங்கள் பெரும்பாலும் உறுதியற்றவையாகவும், பயன்பாட்டுக்கு தகுதியின்றியும் இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. பள்ளிக் கட்டடங்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ரயில்நிலைய நடைமேடை, மேம்பாலங்கள், ஆற்றுப் பாலங்கள், விமான நிலைய மேற்கூரைகள், சாலை மேம்பாலங்கள் உள்ளிட்டவை இடிந்து விழுவது அன்றாட நிகழ்வாகவே மாறியிருக்கிறது.
- பிகார் மாநிலத்தில் மட்டும் கடந்த சில மாதங்களில் 12-க்கும் அதிகமாக ஆற்றுப் பாலங்கள் இடிந்து விழுந்திருக்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளில் பெரும்பாலும் ஒப்பந்ததாரர்கள்தான் கைது செய்யப்படுகின்றனர். அதற்கு அனுமதி அளித்த, சோதனையிட்டு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் யாருமே இடைநீக்கம்கூட செய்யப்படுவதில்லை.
- அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற பல கட்டடங்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டப்பட்டு வருகின்றன. மக்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகளில் கட்டடத் தேவைகளுக்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் நிதியை ஒதுக்கித் தருகிறார்கள்.
- அவ்வாறு கட்டப்படும் கட்டடங்கள், பல ஆண்டுகள் நீடித்து நிற்கும் வகையில் உறுதியானதாக இருக்க வேண்டும். மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதாக அந்தக் கட்டடங்கள் அமைய வேண்டும். ஏனோதானோ என்று அவசரகதியில், தரமில்லாமல் கட்டப்படும் கட்டடங்களால் தங்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது என மக்கள் கருதுவதற்கு இடமளிக்காமல் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- நிதி பெற்ற ஒப்பந்ததாரர், பொறுப்பான முறையில் கட்டடம் கட்டுகிறாரா, தரமாகப் பணியை மேற்கொள்கிறாரா என நிதி அளித்த மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து மேற்பார்வையிடுவது சாத்தியமில்லை.
- ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கும், கட்டடங்கள் தரமானவைதானா என்று உறுதிப்படுத்தும் பொறுப்பு மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கும் உண்டு.
- கட்டடப் பணிகள் நடைபெறும் சில இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, பணிகள் தரமற்று இருப்பதைச் சுட்டிக்காட்டி ஒப்பந்ததாரரை கடிந்துகொண்டதாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
- தரமற்ற கட்டடப் பணிகளை மேற்கொண்டு, மனித உயிர்களுடன் விளையாட மனசாட்சியுள்ள யாரும் துணியமாட்டார்கள். இதற்கு அரசுப் பள்ளிகளில் கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர்கள் விதிவிலக்காக இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.
- வீடு கட்டுமானத்தில், தான் பொறுப்பேற்றுக் கட்டும் வீட்டுக்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் ஆயுள்காலம் என ஒப்பந்ததாரர் உத்தரவாதம் அளிப்பதாகக் கூறப்படுகிறது. அதுபோல பள்ளிக் கட்டடத்தின் உறுதித்தன்மை, அதன் ஆயுள்காலம் குறித்தும் எந்த சமரசமும் கூடாது.
- கட்டடம் முழுமை பெற்று ஒப்படைக்கப்பட்ட பின், நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலத்துக்கு முன் பழுது ஏற்படும்பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்புக்கு ஏற்ப அவர்களிடம் நஷ்டஈடு வசூலிப்பதையும், மேற்கொண்டு அவர்களுக்குப் பணி ஒப்பந்தம் வழங்குவதை நிறுத்திவைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
நன்றி: தினமணி (12 – 03 – 2025)