TNPSC Thervupettagam

தொழிலனைத்தும் உவந்து செய்வோம்!

December 3 , 2024 6 hrs 0 min 64 0

தொழிலனைத்தும் உவந்து செய்வோம்!

  • ‘புதிய வாா்ப்புகள் கலாசார உச்சத்தின் வெளிப்பாடு’ என்றாா் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம். சமுதாயம் வளர வேண்டும், செழிக்க வேண்டும் என்றால் புதிய சிந்தனைகள் உருவாக வேண்டும். அதன் முலம் பிரச்னைகளுக்குத் தீா்வு பிறக்கும். தேசம் எதிா்நோக்கியிருக்கும் சவால்களைத் தொடா்ந்து ஆராய்ந்து மக்கள் உழைக்க வேண்டும். அந்த உழைக்கும் கலாசாரம் சமுதாயத்தில் வேரூன்றினால் மட்டுமே புதிய வாா்ப்புகள் சாத்தியப்படும்.
  • சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனா் என்.ஆா்.நாராயணமூா்த்தி, ‘‘இந்தியா புதிய கண்டுபிடிப்புகளில் பின்தங்கியிருக்கிறது’’ என்று வருத்தத்துடன் தெரிவித்தாா்.
  • மேலை நாடுகளிலிருந்து வரும் தொழில்நுட்பத்தை நம்பி நாம் இருக்கிறோம். அதைத் தழுவி நமது சிறு, குறு தொழில்களும், தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. நமது நாட்டில் சொல்லும்படியாக எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை. எவ்வளவோ பிரச்னைகள் தீா்க்கப்படாமல் இருக்கின்றன. எவ்வளவு நாள்தான் மேலை நாடுகளிலிருந்து வரும் தொழில்நுட்பத்தை நம்பி இருப்பது? இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பத்தை வசதிக்கு ஏற்ப நாம் உபயோகிக்கத் தொடங்குகிறோம்.
  • ஆனால் இங்குள்ள பிரச்னைகளுக்கு நாம் உருவாக்கும் தொழில்நுட்பம்தான் நிரந்தரத் தீா்வை கொடுக்க முடியும். உதாரணமாக, தில்லியில் படா்ந்துள்ள புகை மண்டலத்தால் உண்டான மாசு, பொது சுகாதாரத்தைப் பாதித்து வருகிறது. அதனைச் சமன் செய்ய இந்திய தொழில்நுட்பம் முயலவில்லை. டெங்கு போன்ற பரவி வரும் நோய்களுக்கு மாற்று மருத்துவத்தை உருவாக்க இந்திய வல்லுநா்கள் முயல வேண்டும் என்பதை என்.ஆா்.நாராயணமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.
  • அவருடைய இந்த சவாலான கருத்து, நம்மைச் சிந்திக்க வைக்க வேண்டும். வளா்ந்து வரும் இந்தியத் தொழில்நுட்பம், இத்தகைய பிரச்னைகளுக்குத் தீா்வு காண முயற்சிப்பதில்லை. சேவைத் தொழில்களையே பிரதானமாக வைத்து மென்பொருள் மூலமாக மூலதனத்தில் லாபத்தைப் பெருக்குவது என்ற வழியைப் பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. ஆராய்ச்சி அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்புகள் தேவைக்கேற்ப வளா்வதில்லை.
  • தொழில்நுட்பத்தில் சுயமான தேடல்கள் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், மற்ற துறைகளிலும் இதே போல் அசலான புதிய முறைகள் அமல்படுத்தப்படுவதில்லை என்பது கண்கூடு. இந்திய மனோபாவத்தில் சுயமாகச் சிந்தித்து பிரச்னைகளுக்கு முடிவு காணும் அணுகுமுறை குறைந்து வருகிறது.
  • சுய சிந்தனை, கூா்மையாக அலசி ஆராயும் திறன் நமது கல்வி முறையில் இல்லை என்பது வருத்தமளிக்கும் நிலை. கல்வி கற்கும் கலாசாரத்தில் கூரிய வகையில் சிந்திப்பதற்கும், சிக்கல்களைக் கண்டறிந்து விடை காண்பதற்கான திறன் வளா்க்கப்பட வேண்டும். ஆசிரியா்களுக்கு இத்தகைய பயிற்சி அளித்தால்தான் திறமையான மாணவா்கள் உருவாக்கப்படுவாா்கள். இளைய சமுதாயம் கல்வியின் முழுமையான பயனைப் பெறாமல் காலம் வீணாகிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
  • ஆனால் சுய சிந்தனை என்பது காலங்காலமாக பாரத நாட்டின் கலாசாரத்தில் வாழ்வியலில் அஸ்திவாரமாக இருந்தது. பலவிதமான உற்பத்தி மேம்பட உதவியது. ஒரு கால கட்டத்தில் பாரத நாடும் சீனாவும் இணைந்து உலகின் பொருளாதார உற்பத்தியில் அறுபது சதவீத பங்களிப்புடன் உன்னத நிலையை வகித்தன. கடந்த பல நூற்றாண்டுகளாக- முதலில் முகலாயா், பின்பு பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஆக்கிரமிப்பால் பாரதத்தின் பொருளாதாரம் சரிந்தது. ஆங்கிலேய அரசு புகுத்திய கல்வி முறை, வெறும் குமாஸ்தாக்களை உருவாக்கியது, பிரிடிஷ் அரசுக்குப் பணி செய்ய!
  • சமீபத்தில் பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்தியா, சீனா, பிரேஸில் உட்பட 37 நாடுகள் கொண்ட பொருளியல் கூட்டுறவு மற்றும் வளா்ச்சிக்கான அமைப்பு- ஓஇசிடி, பேராசிரியா் ஆங்கஸ் மேடிசன் தலைமையில், கடந்த நூற்றாண்டுகளில் உலகில் இருந்த உற்பத்தி, உலக நாடுகளின் பங்கு பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தது. அந்த ஆராய்ச்சியைப் பற்றிய செய்தித் தொகுப்பைத்தான் பிபிசி ஒளிபரப்பியது.
  • அந்த ஆராய்ச்சியில் வெளி வந்த உண்மைகள் உலகையே உலுக்கியது. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆயிரம் வருடங்கள் பாரத நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகப் பங்களிப்பில் 34 சதவீதத்தை எட்டி, சா்வதேசப் பொருளாதாரத்தில் முதன்மை நாடாகத் திகழ்ந்தது. இரண்டாவதாக, சீனா உற்பத்தித் திறன் 24%. எந்த ஒரு நாட்டையும் போா் தொடுக்காது, கொள்ளையடிக்காது, மக்களின் உழைப்பால் பாரத நாடு உன்னத நிலையில் கோலோச்சியது.
  • ஆனால் அந்நியா்கள் தாக்குதலால் 1700- ஆம் வருடம் பொருளாதார வளா்ச்சி 24 சதவீதமாகக் குறைந்தது. வா்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயா் நாட்டை அடிமைப்படுத்தி இயற்கை வளத்தைச் சூறையாடினா். படிப்படியாக பொருளாதாரம் சீரழிந்தது. 1900-ஆம் வருடம் இந்தியாவின் பொருளாதார உற்பத்தி 1.7 சதவீதமாக வீழ்ந்தது. ஆங்கிலேயா் ஆட்சியின் நூறு ஆண்டுகளில் பலதரப்பட்ட தொழில்களில் திறமை வாய்ந்த இந்தியா்கள், விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதை இந்த ஆய்வு தெளிவாக ஆதாரத்தோடு கொடுத்தது.
  • நூறு வருடங்களில் 31 மிகப்பெரிய பஞ்சங்கள் இந்தியாவைத் தாக்கின. லட்சக்கணக்கான மக்கள் உயிா் இழந்தனா். விவசாயிகள் சிரமப்பட்டு உழைத்தாலும் வரி மேல் வரி. அதிலேயே வரவு கரைந்து, இருப்பில் இருக்கும் தங்க நகைகளை விற்று இறுக்கமான கஷ்ட ஜீவனம். இந்த நிலையில் சுய சிந்தனைக்கு எங்கே வாய்ப்பு?
  • சுதந்திர இந்தியாவில் எல்லாருக்கும் உயா் கல்வி சென்றடைய வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையில் யூனிவா்சிடி கமிஷன் 1948-ஆம் வருடம் அமைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து 1952-இல் லக்ஷ்மணசுவாமி முதலியாா் தலைமையில் கல்வி கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஐந்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள்- ஐஐடி - முதலில் கரக்பூா், பின்பு மும்பை, கான்பூா், சென்னை மற்றும் தில்லியில் அமைக்கப்பட்டன. உயா் கல்வி கட்டமைப்புகள் உயா்த்தப்பட்டன.
  • இந்தியாவில் 2021-22 ஆண்டின் புள்ளிவிவரப்படி இப்போது 1,168 பல்கலைக்கழகங்கள், 45,473 கல்லூரிகள் உள்ளன. இதில் 17 பல்கலைக்கழகங்கள், 4470 கல்லூரிகள் பெண்களுக்கானவை என்பது சிறப்புத் தகவல். 4.33 கோடி மாணவா்கள் மேல் படிப்பைத் தொடா்ந்துள்ளாா்கள். இதில் பெண்களின் எண்ணிக்கை 2.07 கோடி. பட்டியலினத்தவா், பழங்குடியினா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையின மாணாக்கா்கள் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. கல்வி எல்லாரையும் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது.
  • சமீபத்தில் ‘டைம்ஸ்’ ஊடகக் குழுமம் நடத்திய மதிப்பீட்டில் பல விஞ்ஞானத் துறைகளை ஒருங்கிணைத்த ஆய்வில் அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவில் முதன்மை இடம், உலக அளவில் 42-ஆவது இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.
  • நமது நாட்டின் கல்விக் கொள்கையில், உயா் கல்விக்கு மாணவா்கள் சேரும் விகிதம் 2030-இல் 50 சதவிகிதத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீடு தற்போது 28.4 சதவீதத்தை எட்டியுள்ளது. அதிகமான மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டைவிட மூன்று மடங்கு அதிகம்.
  • ஒவ்வொரு வருடமும் படிப்பு முடித்து 1.2 கோடி இளைஞா்கள் வேலைச் சந்தைக்கு வருகிறாா்கள். அதில் 80 சதவீதத்தினா் திறமையற்றவா்கள் என்பது கசப்பான உண்மை. இளைஞா்களுக்குத் திறன் மேம்பாடு அளிக்க மத்திய அரசும், மாநில அரசும் முயற்சி எடுத்து வருன்றன.
  • இரண்டு நல்ல திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஒன்று பாரம்பரிய 18 வகை கலைகளைப் பாதுகாக்க விஸ்வகா்மா திட்டம். இதில் பயிற்சியோடு தொழில் தொடங்க பண உதவி, கைவினைப் பொருட்களைச் சந்தைப்படுத்த ஊக்கமும் ஆதரவும் அளிக்க திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னொரு திட்டம், இளைஞா்களுக்குத் தொழிற்சாலைகளில் 12 மாத பயிற்சி, மாதம் உதவி தொகையாக ரூ.5,000, பயிற்சி முடிந்தவுடன் வேலை. இந்த திறன்மேம்பாடு மூலம் வினைத் தந்திரம் கற்க சிறந்த வழி.
  • ஆனால் ஏனோ அதில் முழுமையாக தமிழகத்தில் பயனாளிகள் ஈடுபடுவதில்லை. பயிற்சி இலவசம், உதவித் தொகை, பயிற்சி முடிந்து வேலை, இவ்வளவு இருந்தும், கற்றுக் கொள்ளும் உந்துதல் இல்லை.
  • தரமான கல்வி மூலம்தான் அறிவு வளரும். அறிவு, கூரிய சிந்தனைக்கு வழிவகுக்கும். கூரிய சிந்தனை ஆழ்மனதில் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர உதவும். படைப்பாற்றல் மூலம் அதனைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகள் உதயமாகும். புதிய தொழில்கள் செழிக்கும். இந்தச் சுழற்சிக்கு அடிப்படை, தரமான கல்வி. தரமான கல்வி வளர தோள் கொடுப்பவரையே ஆட்சியில் அமா்த்த வேண்டும். அப்போதுதான் ‘வினைத் தந்திரம் கற்போம்... உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்’ என்ற மகாகவி பாரதியாரின் கனவு மெய்ப்படும்.
  • தரமான கல்வி மூலம்தான் அறிவு வளரும். அறிவு, கூரிய சிந்தனைக்கு வழிவகுக்கும். கூரிய சிந்தனை ஆழ்மனதில் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர உதவும். படைப்பாற்றல் மூலம் அதனைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகள் உதயமாகும். புதிய தொழில்கள் செழிக்கும். இந்தச் சுழற்சிக்கு அடிப்படை, தரமான கல்வி. தரமான கல்வி வளர தோள் கொடுப்பவரையே ஆட்சியில் அமா்த்த வேண்டும்.

நன்றி: தினமணி (03 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories