TNPSC Thervupettagam

நகரமயத்தால் சாதி ஒழிந்துவிடுமா?

July 17 , 2024 10 hrs 0 min 18 0
  • சமீபமாகப் பல கிராமங்களை வலுக்கட்டாயமாக நகர உள்ளாட்சிகளாக மாற்றும் / இணைக்கும் முயற்சியைச் செய்துவருகிறது தமிழ்நாடு அரசு. இதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்துவரும் நிலையில், இந்த ஊர் - காலனி பற்றியும் அதற்கான தீர்வு பற்றியுமான உரையாடலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கௌதம சன்னா ‘இந்து தமிழ் திசை’யில் ‘ஊர் - சேரி - காலனி: மாற்றத்துக்கான தருணம்’ (2024 ஜூலை 4) கட்டுரையின் மூலம் தொடங்கியுள்ளார். ஊர் - காலனி என்கிற சிக்கல்களுக்குத் தீர்வாக நகரமயமாக்கலை அவர் முன்வைக்கிறார். அந்த உரையாடலின் நீட்சியே இந்தக் கட்டுரை.

நகரமயமாக்கலும் நில உரிமையும்:

  • ‘கிராமம் என்பது உள்ளூர்வாதத்தின் சாக்கடை’ என்ற அம்பேத்கரின் வார்த்தைகளுக்கு இந்தியக் கிராமங்களின் வன்கொடுமை வரலாறே சான்று. இன்றும் ஊர் - காலனி என்கிற பண்பாட்டுப் பாகுபாட்டை நம் கிராமங்களும் நகரங்களும் ஒரு சமூக ஒழுங்காகவே கொண்டுள்ளன. இதற்குத் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.
  • தமிழ்நாட்டின் நகரமயமாக்கல் எப்போதுமே நிலம் சார்ந்த அரசியலைக் கொண்டே நகர்ந்துவருகிறது. நிலம் என்பது அதிகாரத்தோடும் மக்கள் உரிமையோடும் நெருங்கிய தொடர்புடையது. கிராமம் நகரங்களோடு இணைக்கப்படும்போது அதன் நிலங்கள் நகரங்களுக்கான புறநகர்ப் பகுதியாக மாற்றமடைந்து, அரசு/தனியார் தொழிற்சாலைகளுக்காகவோ ரியல் எஸ்டேட்டுகளுக்காகவோ அபகரிக்கப்பட்டுவருவது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.
  • கடலூரில் என்.எல்.சி-யை ஒட்டிய கிராமங்கள், பரந்தூர், சென்னையின் புறநகர் கிராமங்கள் எல்லாம் இதற்கு உதாரணம். இவ்வாறு தொழில்மயமாக்கப்பட்ட நகரங்கள் அல்லது ரியல் எஸ்டேட்டுகளால் உருவான குடியிருப்புகள் அனைத்தும் நவீனக் குடியிருப்புகளாக மாறுவதுடன் அங்கு வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களின் குடியிருப்புகள் நவீனச் சேரிகளாக மாற்றப்படுகின்றன. சென்னையின் கே.பி. பார்க், கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்றவை எடுத்துக்காட்டுகள்.
  • தவிர, நகரின் குப்பைகளைக் கொட்டுவதற்காகவும் இந்தக் கிராமங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஊட்டி நகரோடு இணைக்கப்படவுள்ள அதன் புறநகர் கிராமமான நஞ்சநாடு ஊராட்சியின், கவர்னர் சோலை கிராமம் ஊட்டி நகரின் குப்பைகளைக் குவிக்கும் இடமாகத் தற்போது உள்ளது.
  • அதன் பக்கத்திலேயே தோடர் இனப் பழங்குடிகளின் குடியிருப்பும் உள்ளது. ஊராட்சியாக இருக்கும்போதே குப்பை குவிக்கும் இடமாக மாற்றப்பட்ட இந்தப் பட்டியல் சாதி / பழங்குடியினக் கிராமங்கள் மாநகராட்சியாக மாற்றப்பட்ட பிறகு எதற்காகப் பயன்படுத்தப்படும் என்பதற்கு பெருங்குடி, கொடுங்கையூர் போன்ற உதாரணங்களே போதும்.
  • மேலும், நகரமயமாக்கலால் அரசியல் பொருளாதார இழப்புகளும் தலித்துகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. கிராம ஊராட்சியாக இருந்தால் மட்டுமே கிராமசபை இருக்கும். கிராமசபை இருந்ததால்தான் கதிராமங்கலம், நெடுவாசல் போன்ற பகுதிகளில் நிலங்களைப் பாதுகாக்க முடிந்தது. குத்தம்பாக்கம் ஊராட்சியின் மேய்க்கால் புறம்போக்கு நிலம் சென்னையின் குப்பைகளைக் கொட்டும் இடமாக மாற்றப்பட இருந்ததைத் தடுக்க முடிந்தது.
  • சமீபத்தில் கடலூரில் பல கிராமங்களில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்கு எதிராக மக்கள் கிராமசபைத் தீர்மானங்களைக் கொண்டுவந்தது செய்தியானது. இந்தக் கிராமசபை மூலமும் மக்கள் போராட்டம் மூலமும் மட்டுமே பரந்தூர் பிழைத்துக்கொண்டிருக்கிறது.
  • இல்லையேல் சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம்போல், தாம்பரம் மாநகராட்சியின் அனகாபுத்தூர் போல், சிவகாசி மாநகராட்சியின் பொத்தமரத்துக் குடியிருப்புபோல் தலித் மக்கள் என்றைக்கோ வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருப்பார்கள்.

அரசியல் அதிகார இழப்பு:

  • அதேபோல் ஊராட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு உள்ளது. கிராம ஊராட்சித் தேர்தல்களில் கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என்பதால், ஒரு தலித் தலைவர் கட்சி சார்பின்றித் தன்னிச்சையாகச் செயல்பட வாய்ப்புள்ளது. இதுவே நகரமானால் மொத்தக் கிராம ஊராட்சியும் ஒரே வார்டாக மாற்றப்பட்டு, அங்கு அரசியல் கட்சி சொல்லும் நபர்தான் கவுன்சிலராகப் போட்டியிட முடியும். இது தலித்களின் குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்.
  • ஏற்கெனவே, கிராம ஊராட்சிச் செயலாளர் பதவியில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசோ சட்டத்திருத்தங்கள் மூலம் கிராம ஊராட்சிகளின் அதிகாரங்களைப் பறித்து, அதிகாரிகளிடம் கையளித்து வருகிறது.
  • இந்நிலையில், ஊராட்சிகளைக் கலைத்துவிட்டு அவற்றைக் காலனிய அதிகாரத்துவம் (colonial bureaucracy) கெட்டிப்பட்டுப் போயுள்ள நகர நிர்வாகத்திடம் ஒப்படைப்பது எவ்வகையிலும் மக்களுக்கு நன்மை பயக்கப் போவதில்லை.

வாழ்வாதார இழப்பு:

  • நகரமயமாக்கல் என்பது மூலதனக் குவிப்போடு தொடர்புடையது. நிலம், இயற்கை / மனித வளங்கள் போன்ற மூலதனங்களைக் குவித்து வளத்தையும் உழைப்பையும் சுரண்டுவதே இதன் பண்பாகும். இதனால் நிலமற்ற விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் ஆவர். உழைக்கும் மக்களின் முக்கிய வாழ்வாதாரப் பாதுகாப்பாக உள்ள, உலகிலேயே வேலை கேட்கும் உரிமையைத் தந்துள்ள 100 நாள் வேலைத் திட்டம் உள்படப் பல்வேறு நலத்திட்டங்கள் பறிபோகும். இத்திட்டப் பயனாளிகள் ஒப்பந்த முறை தூய்மைத் தொழிலாளர்களாக மாற்றப்படுவது அரங்கேறும்.

சமூக உறவு:

  • சாதி புரையோடிப் போயுள்ள தமிழ்நாட்டின் கிராமங்களில் சமூக உறவு என்பது சாதியை அடிப்படையாகக் கொண்டே உள்ளது. எனவேதான் நகரங்களுக்கு இடம்பெயர்வதன் மூலம் இந்த சாதிரீதியிலான சமூக உறவை வர்க்கரீதியிலான உறவாக மாற்றலாம் என்று அம்பேத்கர் வாதிட்டார்.
  • ஆனால், அவரே தலித் என்பதற்காக பரோடா நகரத்தில் தனக்கு வீடு மறுக்கப்பட்டதாகவும், தன்னை பார்சி என்று கூறிக்கொண்டே அங்கு தங்க முடிந்ததாகவும் எழுதியுள்ளார். எனவே, கிராமத்தை நகரமாக மாற்றினாலும் நகரத்தோடு இணைத்தாலும் அது அரசு ஆவணங்களில் வேண்டுமானால் நகர்ப்புறமாக இருக்குமே தவிர, அது அடிப்படையில் கிராமத்துக்கான பண்பையே கொண்டிருக்கும்.
  • ஆகவே, நகரமயமாக்கல் மூலம் சாதியும், சாதிரீதியிலான சமூக உறவும் தளரும் என்பதையும், ஊர் - காலனி பாகுபாடு மாறும் என்பதையும் உறுதியாகக் கூற முடியாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. என்னதான் சென்னை, உலகின் இரண்டாவது மாநகராட்சியாக இருந்தாலும் அங்குள்ள மயிலாப்பூர் இன்றும் ஊராகத்தான் உள்ளது. அருகிலுள்ள நொச்சிக்குப்பம் இன்றும் குப்பமாகத்தான் உள்ளது.

மாற்றத்துக்கான அரசியல் உறுதித்தன்மை:

  • ஓர் ஊருக்கு / காலனிக்கு அதன் சாதிப் பெயரை மாற்றி என்ன பெயர் வைப்பது என்பதை அந்தப் பகுதி மக்கள் முடிவெடுத்து, அதை அந்த உள்ளூர் மன்றங்களில் தீர்மானமாக நிறைவேற்றி, அரசு ஆவணங்களில் மாற்றிக்கொள்வதற்கான 3.10.1978ஆம் தேதியிட்ட அரசாணை ஒன்று உள்ளது.
  • இது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. சாதிப் பெயரில் உள்ள தெருக்கள், ஊர்கள் என அனைத்துக்கும் பொருந்தும் இந்த அரசாணையைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு அரசியல் உறுதித்தன்மை தேவை.
  • மேலும், ஏற்கெனவே குத்தம்பாக்கம் ஊராட்சியில் அதன் முன்னாள் தலித் தலைவர் இளங்கோ வெற்றிகரமாகச் செயல்படுத்தியதிட்டத்தைத்தான், ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ என்று தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தினார் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. இதைத் தமிழ்நாடு அரசுதான் செயல்படுத்த வேண்டும் என்றில்லை.
  • சமத்துவபுரம் போன்ற புரட்சிகர சமூகநீதித் திட்டத்தை ஒரு கிராம ஊராட்சியால் செயல்படுத்த முடிந்தபோது, நகர்ப்புற உள்ளாட்சிகளால் முடியாதா என்ன? கிராம சமத்துவபுரம்போல நகரங்களின் குடியிருப்புகளையும் தலித்/ தலித் அல்லாதோர்; அதிகார/ உழைக்கும் வர்க்க மக்கள் அக்கம் பக்கத்தவர்களாக வாழும்படியான திட்டங்களை வடிவமைக்க முடியாதா?
  • இதைச் செயல்படுத்துவதற்கு முதலில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய இரண்டு வாரியங்களும் இணைக்கப்பட்டு, அவை நகர்ப்புற உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
  • இவை கட்டும் குடியிருப்புகள் நகரங்களின் பூர்வகுடி மக்களையும், நகரங்களுக்குள் குடிபெயரும் பொருளாதாரத்தில் உயர்ந்த மக்களையும் ஒரே இடத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களாக மாற்றுமாறு அவற்றின் திட்டங்களும் விதிகளும் மாற்றப்பட வேண்டும். இதை அனைத்து மக்களின் பங்கேற்புடன் 2003இல் டெல்லி மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்ட பங்கேற்பு நிர்வாக மாதிரி (Bhagidari Model) முறை போன்று செயல்படுத்தலாம். இதன் மூலம் கே.பி. பார்க் போன்ற தரமற்ற குடியிருப்புகள் உருவாவது தடுக்கப்படுவதுடன், நவீனச் சேரிகள் உருவாவதும் தடுக்கப்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories