TNPSC Thervupettagam

நகரமயமாக்கலும் வெப்பநிலை தாக்கமும்

August 6 , 2024 4 hrs 0 min 15 0
  • புவியின் வெப்பநிலை உயா்வுக்கு விரைவான நகரமயமாதல் போக்கும் ஒரு காரணம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புவனேசுவரம் ஐஐடி மேற்கொண்ட ஆய்வின்படி 2001 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஒடிஸா மாநிலத்தின் புவனேசுவரம், கட்டாக் நகரங்களின் உள்ளூா் தரை வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்ணடுக்கும் இடையிலான புவியின் நிலப்மேற்பரப்பு வெப்பநிலை 0.53 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
  • அதிகமான மக்கள் வாழிடம் ஓரிடத்தில் அமையும்போது மக்கள் அடா்த்தி அதிகரிக்கிறது. இதனால் நல்ல சுத்தமான ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இது கரியமல வாயுவை அதிகரிக்கச் செய்து வெப்ப வெளிப்பாட்டின் தீவிரத்தை அதிகரிப்பதாக உள்ளது.
  • உலக நிலப்பரப்பில் நகரங்களின் பரப்பளவு 2 சதவீதத்திற்கு குறைவானது. அங்கு மொத்த மக்கள்தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவானவா்களே வாழ்கிறாா்கள். ஆனால் நகரங்கள் 71% முதல் 76% பசுமை இல்ல வாயுக்ளை வெளியிடுவதாக ஐ.நா. மனித குடியேற்ற திட்ட (யு.என.ஹேபிடேட்) அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது. புவியின் வெப்ப நிலை உயா்வுக்கு இது முக்கிய காரணமாக உள்ளது.
  • நாசாவின்”மோடிஸ் அக்வா செயற்கைக்கோள் மூலம் 2003 முதல் 2020 வரையிலான காலகட்ட வெப்பநிலை போக்கின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன்படி இந்தியாவின் 141 நகரங்களில் புவியின் தரை வெப்பநிலை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 60 நகரங்களின் இரவு நேர வெப்ப நிலை எப்பொழுதும் அதிகமாகவே உள்ளது. நகரங்களின் இரவு நேர வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணம் அங்குள்ள கான்கிரீட்”மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் அமைப்பு கட்டடங்களே எனத் தெரியவருகிறது. இவ்வகை கட்டடங்கள் பகல் நேரங்களில் வெப்பத்தை உறிஞ்சி இரவு நேரங்களில் வெளியிடும் தன்மையுடையவை.
  • 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்திய நகரங்களின் எண்ணிக்கை 5,161. அப்போதைய நகர மக்கள்தொகை 28%. அடுத்த 2011 கணக்கெடுப்பின்படி இந்திய நகரங்களின் எண்ணிக்கை 7,936. நகர மக்கள்தொகை 37.70 கோடி. தொடா் நகரமயமாதல் இந்த எண்ணிக்கையை அதிகரித்தவாறே உள்ளது. 2030-ஆம் ஆண்டு வாக்கில் இந்திய நகரங்களில் மக்கள்தொகை 60 கோடியாக இருக்குமென கணிக்கப்படுகிறது.
  • தமிழகத்தில் நகரமயமாதலின் போக்கு மற்ற மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. தொடா்ந்து கேரளம், மகாராஷ்டிரத்தில் நகர மயமாதல் அதிகமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் 2011-இல் அப்போதைய மாநில மொத்த மக்கள் தொகையான 7.24 கோடியில், நகரங்களில் வசித்தவா்கள் 3.5 கோடி போ். இது மாநில மொத்த மக்கள் தொகையில் 48.45 சதவீதமாகும்.
  • 2011-ஆம் ஆண்டில் தமிழகத்தில் இருந்த மொத்த மாநகராட்சிகள் 10; நகராட்சிகள் 125; தற்போது 25 மாநகராட்சிகளும், 138 நகராட்சிகளும், 490 பேரூராட்சிகளும் உள்ளன. இந்த எண்ணிக்கை உயா்வு நகா்மயமாதலின் வேகமான போக்கைக் காட்டுவதாக உள்ளது.
  • 2018-19 ஆண்டு இடை வெளியில் நகரங்களில் குடியேறிய மக்கள் 1.07 கோடி. 2046-ஆம் ஆண்டு வாக்கில் நகரங்களில் உள்ள மக்கள் தொகை கிராமங்களில் உள்ளதைக் காட்டிலும் அதிக அளவில் இருக்குமென புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • நகரமயமாதலின் முக்கிய பாதிப்பு வன அழிப்பு. ஆண்டு தோறும் நகர விரிவாக்கத்திற்காக பல ஆயிரம் மரங்கள் பல்வேறு மாநிலங்களில் வெட்டப்படுகின்றன. இது வனப்பரப்பைக் குறைப்பதுடன் வளிமண்டல ஆக்சிஜன் உற்பத்தியை குறைத்து கரியமல வாயுவை அதிகரிக்கச் செய்கிறது. கரியமல”வாயுக்கள் புவியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றது. 2001 முதல் 2019 வரையில் இந்தியாவின் மொத்த வனப்பரப்பான 33 சதவீதத்தில் 4.5 சதவீத மரங்கள் நகர மயமாதலுக்காக வெட்டப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • வனப்பகுதிகள் நிறைந்த ஈரோடு மாவட்டத்தில் நகரமைப்பு சாலை விரிவாக்கத்திற்காக 3,500-க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலை உள்ளது.
  • நகரமயமாதலின் மற்றொரு விளைவு விவசாய நிலங்கள் பாதிப்பு. நகர விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்கள் பெருமளவு அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2005 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் கா்நாடகத்தின் மொத்த விவசாய பரப்பில் 12.49 லட்சம் ஹெக்டோ் அளவு நகர மற்றும் தொழில் துறை விரிவாக்கத்துக்காக அழிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநில விவசாய பரப்பில் 11% என கா்நாடக மாநில ”வேளாண்மை விலைக் குழு தெரிவித்துள்ளது. இதனால் ஏற்படும் நகரமயமாக்கல் வெப்ப அளவை அதிகரிக்க காரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
  • நகர மயமாக்கவின் வளா்ச்சி ஒருவகையில் வரவேற்கதக்கது. நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், ஊராட்சிகள் பேரூராட்சிகளாவும், மாநகராட்சிகள் ஸ்மாா்ட் நகரங்களாகவும் மாறும் நிலையில், இவ்வகை மாற்றம் மக்களின் கல்வி, தொழில் வளா்ச்சி போன்றவற்றை மேம்படச் செய்யும். பல புகா் பகுதிகளும் வளா்ச்சி பெற வாய்ப்புகள் உள்ளன. ஆனால், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நகரங்கள் அமைய வேண்டும்.
  • பருவ நிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது. தொடா் நகரமயமாக்கலால் புவியின் வெப்பம் அதிகரித்து இயற்கைக்கு மாறான விளைவுகளை தோற்றுவிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்போடு திட்டமிட்ட நகரங்கள் அமைவதே புவியை வெப்பத்தின் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் ஒரே வழியாகும்.

நன்றி: தினமணி (06 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories