TNPSC Thervupettagam

நட்சத்திரங்களின் துகள்களா நாம்?

February 13 , 2025 4 hrs 0 min 3 0

நட்சத்திரங்களின் துகள்களா நாம்?

  • உலகப் புகழ்பெற்ற வானியல் அறிஞர் கார்ல் சாகன், ‘நாம் எல்லாரும் நட்சத்திரங்களின் துகள்களே’ என்று குறிப்பிடுவார். அவருடைய கூற்றை நிரூபிக்கும் வகையில், அண்மையில் அறிவியல்பூர்வத் தரவுகள் கிடைத்திருக்கின்றன. பூமியைத் தவிர வேறு கோள்களில் உயிரினங்கள் உண்டா என்பதை அறிய, முதலில் அதற்குத் தேவையான அடிப்படை அம்சங்கள் அங்கே இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவது அவசியம். தற்போது கிடைத்திருக்கும் தரவுகள் பூமியில் மட்டும்தான் உயிர்கள் உண்டு என்கிற கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கின்றன.

உயிர்களின் இருப்பிடம்:

  • பூமியில் மட்டும்தான் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் என உயிர்கள் தழைத்து வாழ்கின்றன என்று கருதிவரு​கிறோம். சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற ஏழு கோள்களில் உயிர்கள் வாழ்ந்து வருவதற்கான சான்றுகள் தற்போது வரை இல்லை என்று கருதப்​படு​கிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், சீனா என விண்வெளி ஆய்வில் முன்னணி வகிக்கும் நாடுகள் விண்வெளி குறித்து மேற்கொண்டு​வரும் தொடர் ஆய்வுகள் இதைத்தான் உணர்த்து​கின்றன.
  • பூமியில் மட்டும் உயிர் வாழ்வதற்கான சூழல் நிலவு​கிறது. குறிப்பாக, நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன், அருந்தும் நீர் போன்றவை வேறு கோள்களில் இல்லை. பூமியின் துணைக்​கோளான நிலவில் நீர் ஆதாரங்கள் இருப்பதாக ‘சந்திர​யான்-1’ ஆய்வு மூலம் கண்டறிந்​திருக்​கிறோம். பூமியி​லிருந்து 14 கோடி கி.மீ. தொலைவில் உள்ள செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் நீர் இருந்​ததற்கான தடம் மட்டும் காணப்​படு​கிறது. செவ்வாய்க் கோள், பூமியைவிட அளவில் சிறியது. அங்கு உயிர்கள் வாழ்ந்​திருக்க வாய்ப்பு உள்ளதா என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பென்னு சொல்லும் செய்தி:

  • நமது சூரிய மண்டலத்தின் ஆரம்பக் கட்டங்​களில் உயிர் எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்​து​கொள்​வதற்கு, விண்கற்கள், சிறுகோள்கள் நமக்கு முக்கியமான தடயங்களை வழங்கு​கின்றன. இந்நிலை​யில், ‘ஒசைரஸ்​-ரெக்ஸ்’ (OSIRIS-REx) என்னும் விண்கலம் மூலம் ‘பென்னு’ (Bennu) என்கிற சிறுகோளின் (Asteroid) மேற்பரப்​பிலிருந்து மாதிரி​களைச் சேகரித்து, சிறிய விண்சிமிழ் (Capsule) மூலம் பூமிக்குக் கொண்டு​வரு​வதற்​காகத் திட்ட​மிடப்​பட்டது. இதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2016 செப்டம்பர் 8 அன்று ‘அட்லஸ் 54 11 ஏ.வி.067’ என்கிற ஏவூர்தி மூலம் விண்கலனை அனுப்​பியது.
  • பூமியி​லிருந்து சுமார் 6.1 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பென்னு சிறுகோளி​லிருந்து மண் மாதிரிகளை எடுத்து​வரு​வதுதான் இதன் திட்டம். விண்கலத்தில் இருந்த ரோபாட் கரம் மண் மாதிரி​களைச் சேகரித்து விண்சிமிழில் பத்திரப்​படுத்​தியது. 2023 செப்டம்பர் 24 அன்று பூமிக்கு அருகில் அந்த விண்கலம் பறந்த​போது, அதில் சேகரித்து​வைக்​கப்​பட்​டிருந்த 120 கிராம் எடையுள்ள மண் மா​திரியைப் பூமிக்கு எடுத்துச் செல்லும் விண்சிமிழைப் புவிக்கு அனுப்பி வைத்தது.
  • இந்தக் கலம் பூமிக்குள் நுழைந்தபோது தனது வான்குடையை (Parachute) விரித்துத் தரையில் பத்திரமாக இறங்கியது. இந்த மாதிரிகளை வைத்து நாசா விஞ்ஞானிகள் மாதக்​கணக்கில் ஆய்வு செய்தனர். இந்தத் திட்ட​மானது சூரியக் குடும்பத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, அதன் ஆரம்பக் கட்டக் கோள்களின் உருவாக்கம், பூமியில் உயிர்​களின் தோற்றத்தை நிர்ண​யிக்கும் கரிமச் சேர்மங்​களுக்கான ஆதாரம் ஆகியவற்றைக் கண்டறியும் முயற்​சியாக இருந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்​பட்டன. பென்னு மாதிரி​களில் உயிரின் தோற்றத்​துக்கான அடிப்படை அடையாளங்கள் இருந்​ததுதான் இதில் குறிப்​பிடத்​தக்கது.

வாழ்க்கையின் அடையாளம்:

  • பூமியில் வாழும் உயிரினங்​களின் கட்டு​மானத்​துக்கான அடிப்படை புரதங்களே (Protiens). புரதங்​களின் உருவாக்​கத்​துக்கு அமினோ அமிலங்கள் அவசியம் தேவை. பூமியில் பல கோடிக்​கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன, அவற்றின் அடிப்​படையே புரதங்​களும் அவற்றை உருவாக்கிய அமினோ அமிலங்​களும்​தான். பென்னுவின் மாதிரியில் அமினோ அமிலங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்​துள்ளனர்.
  • மேலும், இந்த மாதிரி​களில் கார்பன், நைட்ரஜன், அமோனியா போன்றவை நிறைந்​திருப்​பதும் கண்டறியப்​பட்டது. புரதங்கள் உயிரினங்​களில் மட்டுமே காணப்​படும் வேதிப்​பொருள்கள் என்பதால், அவை ‘வாழ்க்கையின் அடையாளம்’ என்று அழைக்​கப்​படு​கின்றன. பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்​களில் உள்ள அனைத்துப் புரதங்​களிலும் காணப்​படுவை 20 அமினோ அமிலங்களே. இவற்றில் 14 அமினோ அமிலங்கள் பென்னு மாதிரியில் அடையாளம் காணப்​பட்​டுள்ளன.
  • பூமியில் உயிரினம் எவ்வாறு தோன்றியது என்பது குறித்துப் பல கோட்பாடுகள் உள்ளன. ‘விண்​வெளியில் இருந்து வந்த விண்கற்கள் மூலமாகவே உயிரினம் தோன்றி​யிருக்க வேண்டும்’ என்பது அவற்றில் ஒன்று. இதை ‘பான்ஸ்​பெர்​மியா’ (Panspermia) கோட்பாடு என்று அழைக்​கின்​றனர். பென்னு மண் மாதிரிகள் இதைத் தற்போது உறுதிப்​படுத்து​கின்றன.

பான்ஸ்​பெர்மியா என்ன சொல்கிறது?

  • கிரேக்கத் தத்து​வ​விய​லாளர் அனாக்​சகரஸ் முதன்​முதலில் பான்ஸ்​பெர்மியா கோட்பாட்டை முன்மொழிந்​தார். பூமியில் உள்ள உயிர்கள் விண்வெளியில் இருக்கும் நுண்ணுயி​ரி​களி​லிருந்து தோன்றியதாக பான்ஸ்​பெர்மியா கோட்பாடு கூறுகிறது. லித்தோபன்ஸ்​பெர்​மியா, பாலிஸ்டிக் பான்ஸ்​ பெர்​மியா, இயக்கப்பட்ட பான்ஸ்​பெர்மியா ஆகியவை பான்ஸ்​பெர்மியா கோட்பாட்டின் வகைகள். இதன்படி பூமிக்கு வந்த விண்கற்​களி​லிருந்து நுண்ணு​யிர்கள், அமினோ அமிலங்கள் தோன்றிய​தாகக் கருதப்​படு​கிறது.
  • ‘புறஊதாக் கதிர்​வீச்சு, புரோட்டான் குண்டு​வீச்சு, குளிர் போன்ற விண்வெளியின் கடுமையான சூழலில் பாக்டீரி​யாக்கள் வாழ முடியும்; பாக்டீரியா உயிர்ப்புடன் நெடுந்​தூக்க நிலையில் நீண்ட காலம் வாழலாம்; விண்கற்​களில் அமினோ அமிலங்கள் உள்ளன, பாக்டீரியா, கார்பன் பாறைகளுக்குள் பாதுகாக்​கப்​படு​கின்றன’ - இவை பான்ஸ்​பெர்​மி​யாவின் கோட்பாட்டுக்கான சான்றுகளாக முன்வைக்​கப்​படு​கின்றன.
  • உயிர் மூலக்​கூறுகளின் மரபணுத் தடங்களைச் சேகரித்து அனுப்புவது நியூக்கி​ளியோபேஸ்கள் ஆகும். அதாவது அடினைன், சைட்டோஸின், குவானைன், தயமின், யுராசில் என்கிற நைட்ரஜனை அடிப்​படை​யாகக் கொண்ட ஐந்து பொருள்​களாகும். அமினோ அமிலங்களை டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. புரதங்களாக மாற்றும் அம்சங்கள் பென்னு மாதிரியில் கண்டறியப்​பட்​டுள்ளன.
  • கூடுதலாக, இந்த மாதிரியி​லிருந்து நைட்ரஜனைக் கொண்ட சுமார் 10,000 வேதிப்​பொருள்கள் பிரித்​தறியப்​பட்​டுள்ளன. பென்னு விண்கற்​களில் இருந்து கிடைத்​துள்ள இந்த உறுதியான தரவுகள், நமது பிரபஞ்​சத்தில் வேறு இடங்களில் உயிர் இருப்​ப​தற்கான தேடல்கள் குறித்த ஆய்வை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக அறிவியலாளர்கள் கருதுகின்​றனர்​.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories