நதிநீர் இணைப்பு: கவனம் தேவை
- யமுனை ஆற்றின் கிளை நதிகளான கென் நதியையும், பேட்வா நதியையும் இணைக்கும் கென் - பேட்வா நதிநீர் இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்துத் தேசிய அளவிலான விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. நதிகளை இணைப்பதால் கிடைக்கும் பலன்களைப் பேசுவதுடன், இதில் இருக்கும் பாதகமான அம்சங்களையும் புரிந்துகொள்வது இந்தத் தருணத்தில் மிகவும் முக்கியமானது.
- இந்தியாவின் நதிநீர் இணைப்புக் கொள்கையின்படி - தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின்படி (என்.ஆர்.எல்.பி.) உருவாக்கப்படும் முதல் திட்டம் என்பதால், கென் - பேட்வா நதிநீர் இணைப்புத் திட்டம் மிகுந்த கவனம் பெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் பாயும் கென் நதியும், உத்தரப் பிரதேசத்தின் பேட்வா நதியும் இணைக்கப்படும் இந்தத் திட்டத்தை, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டுத் தினத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்ததும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
- உத்தரப் பிரதேச - மத்தியப் பிரதேச மாநிலங்களில் பரவியிருக்கும் புந்தேல்கண்ட் பிரதேசம் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தப் பிராந்தியத்தின் தண்ணீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணவும், நீர்ப்பாசனம் மூலம் வேளாண்மையைப் பெருக்கவும், நீர் மின்சக்தி உற்பத்திக்கும் இத்திட்டம் உதவும் என நம்பப்படுகிறது. ரூ.44,000 கோடியில் உருவாக்கப்படும் இந்தத் திட்டத்தின்படி, இரண்டு நதிகளையும் இணைக்கும் வகையில் 230 கிலோமீட்டர் நீளத்துக்குக் கால்வாய் உருவாக்கப்படுகிறது.
- நதிநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் நதிகளை இணைக்க வேண்டும் என்கிற கருத்து கிழக்கிந்திய கம்பெனியின் நீர்ப்பாசனப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டனால் 1858இல் முன்வைக்கப்பட்டது. வெவ்வேறு நதிகளை இணைக்க வேண்டும் என இந்தியாவின் பல தலைவர்கள் பல்வேறு தருணங்களில் வலியுறுத்திவந்திருக்கிறார்கள்.
- இந்தத் திட்டங்கள் மூலம் நீர் மின்சக்தி தயாரிப்பது, நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவது எனப் பல்வேறு பலன்கள் கிடைக்கும். நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக அண்டை மாநிலங்களுக்கு இடையே பிணக்குகள் தொடரும் நிலையில், இப்படியான திட்டங்கள் அவசியம் என்று கருதுபவர்களும் உண்டு.
- எனினும், நதிநீர் இணைப்பின்கீழ் கொண்டுவரப்படும் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படலாம் எனச் சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருவதைப் புறந்தள்ள முடியாது. இயற்கையாகப் பாயும் நதிகளின் போக்கில் குறுக்கிடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், வெவ்வேறு இயல்புகளைக் கொண்ட நதிகள் இணைக்கப்படுவதால் நிறைய பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
- நதிநீர் வீணாகக் கடலில் கலக்கிறது என்கிற வாதமே அறிவியல் ஆதாரமற்றது என்று சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். கென் - பேட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்தால், பன்னா புலிகள் சரணாலயப் பகுதியில் வெள்ளம் ஏற்படலாம் எனக் குரல்கள் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் புதிய அணைக்கட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படுவதில்லை. பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கெனவே கட்டப்பட்ட அணைக்கட்டுகள் செயலிழக்க வைக்கப்படுகின்றன. இப்படியான சூழலில், நதிநீர் இணைப்பு தொடர்பான விவாதங்கள் இந்தியாவில் அறிவியல்பூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். குறுகிய காலப் பலன்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், நீண்டகாலப் பாதிப்புகள் குறித்தும் அரசு பரிசீலித்து உரிய முடிவுகளை எடுக்க வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 01 – 2025)