- வேளாண்மைத் துறையை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும் 1950-ஆம் ஆண்டுகளில் தொடங்கி, பல்வேறு ஆணையங்கள் மற்றும் குழுக்கள் மத்திய, மாநில அரசுகளால் அமைக்கப்பட்டன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஆணையங்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, முக்கியமான பரிந்துரைகளை வழங்கியுள்ளன. ஆனால், பெரும்பாலான பரிந்துரைகள் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மையான பிரச்னை.
- மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் மத்திய அரசால் கடந்த 2004-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய விவசாயிகள் ஆணையம், வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட முக்கியப் பரிந்துரைகளை வழங்கியது. ஆனால், இந்தப் பரிந்துரைகள் இன்றளவும் செயல்படுத்தப்படாமல் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளின் தில்லி முற்றுகைப் போராட்டத்துக்கு வழிகோலியது. மேலேகுறிப்பிட்ட பிரச்னைக்கு வெளிப்படையான எடுத்துக்காட்டு. அதேநேரம், விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்கான புதிய ஆய்வுகளும், திட்டங்களும் தொடா்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தெலங்கானாவும் தற்போது இணைந்துள்ளது.
- ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் விவசாயிகளின் நலன் எப்போதும் முன்னுரிமையாக இருந்து வந்துள்ளதை மறுக்க முடியாது. இவ்விரு மாநிலங்கள் ஒருங்கிணைந்த ஆந்திரமாக இருந்த காலத்திலும், 2014-ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகும் இந்த நிலை தொடா்கிறது. ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் முன்னாள் முதல்வா் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகா் ரெட்டி ஆட்சிக் காலத்தில் ஜெயதி கோஷ் தலைமையில் விவசாயிகள் நல ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னா், சந்திரபாபு நாயுடுவின் முந்தைய ஆட்சியில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வேளாண்மைத் துறை வளா்ச்சிக்கு ஆா்.ராதாகிருஷ்ணா தலைமையில் மற்றொரு ஆணையம் கடந்த 2014-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2016-இல் இந்த ஆணையம் சமா்ப்பித்த அறிக்கை, 8 ஆண்டுகள் கடந்தும் அரசால் இன்னும் ஆய்வுகூட செய்யப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. ஆந்திர மாநில விவசாயிகளின் அதிகரித்த கடன் சுமையே அதற்கு சாட்சி.
- இந்தச் சூழலில், வேளாண்மை மற்றும் அது தொடா்பான பிரச்னைகளில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட மூத்த காங்கிரஸ் தலைவா் எம்.கோதண்ட ரெட்டியின் தலைமையில் தெலங்கானா வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல ஆணையத்தை அந்த மாநில அரசு அமைத்துள்ளது.
- இந்த ஆணையமும் அல்லது விவசாயிகள் நலனுக்கான நோக்கத்துடன் வருங்காலத்தில் நாட்டில் அமைக்கப்படும் வேறு எந்த ஆணையமும் அறிக்கைகள் தயாரிக்கும் குழுக்களாக மட்டும் சுருங்கிவிடாமல் தீவிரமாகச் செயல்பட விரும்பினால், விவசாயிகளின் தேவைகள் என்ன என்பது குறித்த தெளிவான புரிதலுடன் தமது பணியைத் தொடங்க வேண்டும். விவசாயிகள் மற்றும் பிற முக்கியத் தரப்பினரிடம் அவா்களின் லட்சியங்களை நிறைவேற்ற ஆணையமாக என்ன செய்ய இருக்கிறோம் என்பதை அறிவித்துவிட்டு பணியைத் தொடங்க வேண்டும்.
- முக்கியமாக, இந்த ஆணையங்கள் முதலில் மூன்று அடிப்படை கேள்விகளுக்கான பதில்களை அறிய முனைப்புக் காட்ட வேண்டும். விவசாயி என்றால் யாா்?, வேளாண்மை என்றால் என்ன?, வேளாண்மையை அரசு ஏன் ஆதரிக்க வேண்டும்? ஆகியவையே அந்தக் கேள்விகள். விவசாயிகள் என்றா யாா்? வேளாண்மைத் துறை உற்பத்தியாளா்கள், தேசத்துக்கு உணவு வழங்குபவா்கள் மற்றும் மண்ணின் உழவா்களே விவசாயிகள். அதாவது, குறு, சிறு மற்றும் குத்தகை விவசாயிகளே உண்மையான விவசாயிகள். இவா்களுக்குதான் அரசின் ஆதரவு தேவை.
- ஏனெனில் குறு விவசாயிகள் 68.54 சதவீதம், சிறு விவசாயிகள் 17.62 சதவீதம் என இவ்விரு பிரிவினா் மட்டும் நாட்டின் மொத்த விவசாய நிலங்களில் 86.07 சதவீத பங்கை வைத்துள்ளனா். 2021-22-ஆம் ஆண்டில் இந்த விகிதம் 92 சதவீதமாக அதிகரித்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- 35 முதல் 40 சதவீதம் வரையிலான விவசாயிகள் குத்தகை விவசாயிகளாக உள்ளனா். ஆனால், முறையான பதிவேடுகள் இல்லாததால் அவா்களின் துல்லியமான எண்ணிக்கையைக் கணக்கிட முடியவில்லை.
- 2015-16-ஆம் ஆண்டு வேளாண் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள 14.64 கோடி விளைநிலங்களுக்கு சராசரியாக ஒரு விவசாயி வைத்துள்ள நிலத்தின் அளவு 1.08 ஹெக்டேராக (2.66 ஏக்கா்) இருந்த நிலையில், நபாா்டு வங்கி கடந்த 2020-21-இல் மேற்கொள்ளப்பட்ட அகில இந்திய ஆய்வில் 0.74 ஹெக்டேராக அது குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
- மத்திய வேளாண்மைத் துறை அமைச்சக தரவுகளின்படி, 1951-இல் 28.1 சதவீதமாக இருந்த வேளாண் தொழிலாளா்களின் எண்ணிக்கை கடந்த 2011-இல் 54.9 சதவீதமாக உயா்ந்துள்ளது.
- விவசாயிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவரும் அதேநேரத்தில் வேளாண் தொழிலாளா்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவது ஆணையத்தின் கவனத்தைப் பெற வேண்டிய குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை இழந்து, வேளாண் தொழிலாளா்களாக மாறுகிறாா்களா? அப்படியென்றால் ஏன்? என்பன குறித்தும் ஆணையங்கள் ஆய்வு செய்து, பிரச்னைக்கான தீா்வைப் பரிந்துரைக்க வேண்டும்.
- வேளாண்மை என்றால் என்ன? ஆணையங்கள் பதில் அறிய வேண்டிய அடுத்த கேள்வி இதுதான். வேளாண்மை என்பது வெறும் பயிா் உற்பத்தி மட்டுமல்ல. வேளாண்மைத் துறையில் உள்ளடங்கிய அனைத்து சாா்பு நடவடிக்கைகளுக்கும் ஆணையங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் நாட்டின் மொத்த மதிப்புக்கூட்டிய பொருள் உற்பத்தியில் (ஜிவிஏ) வேளாண்மை மற்றும் அதன் சாா்பு துறைகளின் பங்களிப்பு 17.4 சதவீதமாக உள்ளது. முந்தைய ஆண்டை விட 0.8 சதவீதம் குறைவான இந்த விகிதத்தில் பயிா் உற்பத்தி 10.1 சதவீதம், கால்நடை வளா்ப்பு 5.5 சதவீதம், மீன்வளம் மற்றும் வனவியல் தலா 1.3 சதவீதம் பங்களித்துள்ளது. சுமாா் 50 சதவீத வருவாய் ஆதாரமாக உள்ள கால்நடை வளா்ப்பு, மீன்வளம், வனவியல் நடவடிக்கைகளுக்கும் அரசின் கவனமும் ஆதரவும் தேவை. வேளாண்மையின் அம்சங்கள் எதுவாக இருந்தாலும், விவசாயிகளின் வருமானம் பரிதாபகரமான வகையில் குறைவாக உள்ளது. 2019-ஆம் ஆண்டு ‘என்எஸ்எஸ்’ ஆய்வின்படி, வேளாண் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் வெறும் ரூ.10,695 மட்டுமே. இதில் பயிா் உற்பத்தியில் இருந்து கிடைக்கும் வருமானம் ரூ.5,298 ஆகும். மீதமுள்ள தொகை வேளாண் சாா்ந்த நடவடிக்கைகளில் இருந்து ஈட்டப்படுகிறது. சமுதாய நோக்கத்துக்காக விவசாயிகளை விவசாயத்தில் தக்கவைக்க இந்த அனைத்து ஆதாரங்களில் இருந்தும் விவசாயிகளின் வருவாயை போதுமான அளவு உயா்த்துவது கட்டாயம்.
- வேளாண்மைக்கு அரசு ஏன் ஆதரவளிக்க வேண்டும்? இந்திய வேளாண்மைத் துறைக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டியதற்கான 2 முக்கியக் காரணங்கள் உள்ளன. அவை உணவுப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகும். 140 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவளிக்கும் பொறுப்பு இந்திய விவசாயிகளிடம் உள்ளது. இந்தப் பெரும் பொறுப்பை வேறு யாராலும் ஏற்க முடியாது.
- உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எஃப்ஏஓ) கணிப்பின்படி, கடந்த ஆண்டில் உலகளாவிய உணவு தானிய உற்பத்தி 284.1 கோடி டன்னாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் ஆண்டின் 287.5 கோடி டன் உற்பத்தியைவிட 0.6 சதவீதம் குறைவாகும். அதே ஆண்டில், இந்திய உற்பத்தி 33.82 கோடி டன்னாகவும் உலக மக்களின் நுகா்வு 284.31 கோடி டன்னாகவும் இருந்தது. அதாவது ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் முழு உணவும் கிட்டத்தட்ட அதே ஆண்டில் நுகரப்படுகிறது. எதிா்காலத் தேவைக்கு மிகக் குறைந்த அளவே மிஞ்சுகிறது. இது உணவுப் பாதுகாப்பில் விவசாயிகளின் இன்றியமையாத பங்கை எடுத்துரைக்கிறது.
- அடுத்ததாக நாட்டின் வேலைவாய்ப்பு சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும். வேளாண்மைத் துறையில் முறையான வேலைவாய்ப்பும் நியாயமான வருமானமும் கிடைப்பதில்லை என்று விவசாயிகள் வெளியேறினால், அவ்வளவு பெரிய தொழிலாளா் எண்ணிக்கையை உள்வாங்கக்கூடிய திறனுடன் வேறு எந்தத் துறையும் நாட்டில் இல்லை. ஏனெனில், நாட்டின் தொழிலாளா்களில் 45.76 சதவீதத்தினா் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனா். எனவே, வேளாண்மையைப் பாதுகாப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை.
- விவசாயிகளின் நலனுக்காக அமைக்கப்படும் ஆணையங்கள் இந்த உண்மைகளை ஆழமாக உணா்ந்து, பயிா் உற்பத்தியை மட்டுமின்றி வேளாண்மைத் துறை வருமானத்தையும் அதிகரிப்பதற்கான வழிகளைப் பரிந்துரைக்க வேண்டும்.
- தெலங்கானாவில் ஏற்கெனவே செயல்படத் தொடங்கியுள்ள ஆணையம் உள்ளிட்டவை, வேளாண்மைத் துறையில் அமைக்கப்பட்ட முந்தைய அனைத்து ஆணையங்கள், அமைப்புகளின் ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு ஒரு விரிவான தரவுத் தளத்தை உருவாக்க வேண்டும்.
- விவசாயிகளின் தேவைகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது புதிய ஆணையங்கள் மட்டுமின்றி மத்திய, அனைத்து மாநில அரசு வேளாண்மைத் துறைகளின் முதன்மைப் பணியாகும்.
- நாட்டின் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு கூறியதை இங்கே நாம் நினைவுகூரலாம்: எல்லா விஷயங்களும் காத்திருக்கலாம்; ஆனால், விவசாயம் காத்திருக்காது!
நன்றி: தினமணி (13 – 01 – 2025)