- தமிழவன் ‘போதிமரம்’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். ‘போதிமரம்’ என்ற கதையின் தலைப்பே தொன்ம மதிப்புடையது. இந்தக் கதையின் நாயகனுக்குக் கௌதமன் என்று பெயர். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாகவும் இவனைக் கருதலாம். இவன் தன் அடையாளங்களை அழிக்க நினைக்கிறான். ஆனால், புறச்சூழல் அதற்கு எதிராக இருக்கிறது. ‘கௌதமன்’ என்ற பெயர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌதம புத்தரையும் அவரது சமயத்தையும் சுட்டி நிற்கிறது. புத்தரின் வரலாற்றையும் இவன் சுமக்க வேண்டியுள்ளது. தமிழவன், புத்தரின் வாழ்க்கையை நிகழ்கால கௌதமனுடன் பொருத்தித் தொன்மக் கதைக்கு நேரெதிராக எழுதியிருக்கிறார்.
- புத்தர் தனக்குப் புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். இந்தக் கதையின் நாயகன் தன் நிகழ்கால அடையாளத்தை அழிக்க நினைக்கிறான். தன் சான்றிதழில் இருந்து சாதிப் பெயரை நீக்க அரசு அலுவலகங்களுடன் போராடுகிறான். இவனது கோரிக்கை வெவ்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. சாதியை அழித்தல் அவ்வளவு எளிதானது அல்ல என்பதை அரசு இயந்திரங்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. இவனை எதிர்கொள்ளும் அந்த அரசு அலுவலரே அப்படி முயன்று தோற்றவராக இருக்கிறார். இந்த யதார்த்தத்தைக் கௌதமனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘நீ பிறப்பிலிருந்து தப்பப்பார்க்கிறாய்’ என்கிறார்கள். இவனது கண்களில் இருந்து வெளிப்படும் கருணையை ஒருவரும் புரிந்துகொள்ள தயாரில்லை.
- இவன் புத்தரைப் போன்ற நிறத்தைப் பெற்றிருக்கவில்லை; புத்தரைப் போன்று மென்மையாக இல்லை. எனவே, கௌதமன் என்கிற பெயரே அவனுக்குப் புத்தருக்குரிய பெருமைகளைப் பெற்றுத் தந்துவிடாது என்ற அமைப்பியல் கோட்பாட்டை தமிழவன் இந்த இடத்தில் பொருத்திப் பார்த்திருக்கிறார். கௌதமன் தன்னுடைய நிஜ அடையாளத்தை அழித்துக் கொண்டாலும் அது இன்னொரு அடையாளத்திற்கு இயல்பாகவே இட்டுச்செல்லத்தானே செய்யும்! ஒருவரின் அடையாளத்தைத் தீர்மானிப்பதில் அவரது பிறப்பு நவீனக் காலத்திலும் முக்கியப் பங்காற்றுவதையும் சாதியை ஒழிப்பதில் பௌத்தம் தோல்வி அடைந்ததையும் பிரதி நுட்பமாகக் கவனப்படுத்தியிருக்கிறது.
- யசோதை என்ற தொன்மமும் இக்கதையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. யசோதைக்குக் கௌதமன் என்ற பெயர் அணுக்கமாகவும் இருக்கிறது; அதேநேரத்தில் ஒரு நெருக்கடியையும் உருவாக்குகிறது. எதிர்பாராத ஒரு நாளில் யசோதையின் வீட்டில் ஓர் இரவைக் கழிக்கிறான் கௌதமன். கௌதமனை விரைவில் வீட்டைவிட்டு வெளியேறும்படி யசோதையே கூறுகிறாள். ஏனெனில், யசோதையின் துயரங்களை ஒருநாளும் கௌதமனால் தீர்க்க முடியாது என்ற யதார்த்தத்தை யசோதை புரிந்துகொள்கிறாள். இக்கதையின் யசோதை அரண்மனை வசதிகளை அனுபவித்தவள் இல்லை. கறுப்பு நிறம்; இளமை போய்விட்ட தோற்றம்; இருபத்து நான்கு வயது கடந்தும் திருமணமாகாதவள். பன்றிகள் புழங்கும் காரை பெயர்ந்த வாடகை வீட்டில் வசிக்கிறாள். அரசு அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறாள். தொன்மக் கதையின் படி யசோதைக்கும் சித்தார்த்தனுக்கும் பதினாறு வயதில் திருமணம் நடைபெறுகிறது. இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள். சாக்கிய வம்சத்தைச் சார்ந்த சித்தார்த்தனும் கோலிய வம்சத்தைச் சார்ந்த யசோதையும் உறவினர்கள்.
- சுத்தோதனரின் தங்கை மகள்தான் யசோதை. பேரழகியாக யசோதை காட்டப்படுகிறாள். சித்தார்த்தன் ஞானமும் வீரமும் ஒருங்கே பெற்ற கபிலவஸ்துவின் இளவரசன். மூன்று பருவங்களிலும் சுகமாக வசிப்பதற்கு வெவ்வேறு வசதிகள்கொண்ட மூன்று மாளிகைகளைச் சித்தார்த்தனுக்குக் கட்டிக் கொடுக்கிறார் சுத்தோதனர். ஆனால், தமிழவன் சித்திரிக்கும் கௌதமனும் யசோதையும் சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்கள். ஓர் எளிய வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள். குழந்தை பிறந்த ஏழாம் நாளில் சித்தார்த்தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறான். இக்கதையின் யசோதை ‘எப்போது புறப்படுவாய்?’ என்று கௌதமனைக் கேட்கிறாள். இங்கேயே தங்கி விடுவானோ என்ற பயமும் இவளுக்கு இருக்கிறது.
- தொன்மக்கதையில் யசோதையின் இடம் கௌதம புத்தருக்கு இணை யானதாகவே இருந்திருக்கிறது. சித்தார்த்தன் இதனைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. சித்தார்த்தனின் பிரிவுக்குப் பிறகு யசோதையும் ஒரு துறவியைப் போன்றுதான் வாழ்ந்திருக்கிறாள். சித்தார்த்தனின் ஒருவேளை உணவு முறையையும் தவ வாழ்க்கையையும் இவளும் பின்பற்றியிருக்கிறாள். அரண்மனைக்குப் பின்னால் ஒரு எளிய குடில் அமைத்து ஒரு பௌத்தத் துறவியாகவே இருந்திருக்கிறாள். மேலும், சித்தார்த்தன் விட்டுச்சென்ற லௌகீகக் கடமைகளையும் யசோதை சிறப்பாகவே செய்திருக்கிறாள். சுத்தோதனருக்கு நல்ல மருமகளாகவும் ராகுலனுக்கு நல்ல தாயாகவும் அவள் கடமையாற்றியிருக்கிறாள். சித்தார்த்தனுக்கு இந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை.
- கண்டு கொள்ளப்படாத யசோதையின் வாழ்க்கையை நவீன இலக்கியங்களே மீள் வாசிப்புக்கு உட்படுத்தி வருகின்றன. சோமா ஜயக்கொடி எழுதிய ‘சித்தார்த்த யசோதரா’ என்ற சிங்கள நாவலும் வோல்கா எழுதிய ‘யசோதரை’ என்ற தெலுங்கு நாவலும் மறைக்கப்பட்ட யசோதையின் கதையை அவள் கூற்றிலிருந்து பேசியிருக்கின்றன. அதில் வோல்காவின் நாவல் பெண்ணியக் கோட்பாட்டை முன்வைத்து எழுதப்பட்டிருக்கிறது. தமிழவன் பிரதியிலும் யசோதையின் பார்வையிலிருந்து உரையாட இடமிருக்கிறது.
- போதிமரத்தைப் பௌத்தத்தின் குறியீடாகத் தமிழவன் பயன்படுத்தியுள்ளார்.
- ஆனால் பிரதியில் பௌத்தத்திற்கான புரிதல் மிகக் குறைவாகவே வெளிப்பட்டுள்ளன. போதிமரம், கௌதமன், யசோதை போன்ற பெயர்களைக் கொண்டுதான் வாசகன் பிரதியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். போதிமரம் என்ற பௌத்த தொன்மக் குறியீட்டை யசோதாவின் அரவணைப்பாக மாற்றி வாசிக்க இப்பிரதி முயல்வதாக ஆய்வாளர் ஜமாலன் குறிப்பிடுகிறார். கௌதம புத்தரின் தொன்மக் கதையை இக்கதையுடன் பொருத்தி வாசிக்கும்போது பிரதி பல்வேறு தளங்களில் நெகிழ்ந்து விரிகிறது. புத்தரின் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கே இச்சிறுகதை பல திறப்புகளை உருவாக்கும்; இல்லையெனில் கௌதமன், யசோதை என்ற இரு கதாபாத்திரத்தின் இருநாள் நிகழ்வுகளாகப் பிரதி தன்னைச் சுருக்கிக் கொள்ளும். இச்சிறுகதையின் அர்த்தத்தைப் பெருக்குவதும் சுருக்குவதும் வாசிப்பவர்களது அரசியல்தான் தீர்மானிக்கும். ஏனெனில், தமிழவன் ஒருபோதும் தம் புனைவுகளுக்கான அர்த்தத்தின்மீது உரிமை கோருவதில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 02 – 2025)