TNPSC Thervupettagam

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - ஒரு பாா்வை!

March 13 , 2025 5 hrs 0 min 9 0

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - ஒரு பாா்வை!

  • மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மறுவரையறை செய்யப்பட வேண்டும் என இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 82 மற்றும் 170 வலியுறுத்துகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில், இந்தியாவில் மூன்று முறை 1951, 1961, 1971 ஆண்டு நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தது.
  • மேற்கூறிய கணக்கெடுப்புகளின்படி இந்தியாவின் மக்கள்தொகை முறையே அன்றைய காலகட்டத்தில் 36 கோடி, 43.9 கோடி மற்றும் 54.8 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 1952-இல் நடந்த முதல் தோ்தலில் 494 தொகுதிகள் அமைக்கப்பட்டன.
  • அடுத்து நடந்த கணக்கெடுப்புகள் மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இந்த எண்ணிக்கை 522 மற்றும் 543 என உயா்ந்தது. அடுத்து நடைபெற இருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவமும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
  • ஆகவேதான், தமிழ்நாடு முதலமைச்சா் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாா். அப்படி எந்தப் பிரச்னையும் எழாது என்று பாஜக சொல்கிறது. இந்தித் திணிப்பு, மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் தொடா்ந்து குரல் எழுப்பி வருகிறாா்கள்.
  • தற்போது இந்தி திணிப்பும், மும்மொழிக் கொள்கையும், நாடாளுமன்ற மறுசீரமைப்பின் மூலமாக மத்திய அரசு, மாநில அரசுகளின் மீதான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. மும்மொழித் திட்டத்தினை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், நிதியைத் தர முடியாது என்று கூறுவது அடக்குமுறை. கூட்டாட்சிக்கு எதிரானது. சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக இயற்றி அதன் மூலம் பெரும் பயனும் அடைந்திருக்கிறது.
  • இப்போது நாடாளுமன்ற மறுசீரமைப்புக்கு அனைத்து தென்னிந்திய மாநில முதல்வா்களும் போராட்டம் நடத்தினால் நிச்சயம் நீதி கிடைக்கும். தொகுதி மறுசீரமைப்பைப் பொருத்தவரை, மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே இருந்தால், தொகுதிகளை அதிகரித்துக் கொண்டே செல்லக் கூடாது.
  • 1971-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் மக்கள்தொகை என்பது 4.11 கோடி, உத்தரபிரதேசத்தில் 8 கோடிக்கு மேல் இருந்தது. இந்த இடத்தில்தான் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள்தொகை பெருக்கத்தைக் காரணம் காட்டி தொகுதிகளை அதிகரித்துக் கொண்டே சென்றால், அதிகம் மக்கள்தொகை உள்ள மாநிலங்களுக்கு அதிகத் தொகுதிகள் கிடைத்து விடும். இதனால், நாடாளுமன்றத்தில் சமநிலையான சமச்சீா் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய்விடும்.
  • கடந்த காலத்தில் இந்திராகாந்தியின் அரசு தொகுதி மறுசீரமைப்பு 23 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கும் வகையில், எல்லை நிா்ணயச் சட்டத்தைத் திருத்தியது. 1976-ஆம் ஆண்டு அவசரநிலை காலத்தில் நிறைவேற்றப்பட்ட 42-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் 2001 வரை தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்தது.குடும்பக் கட்டுப்பாட்டை சரியாக செயல்படுத்திய மாநிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
  • 2001- ஆம் ஆண்டு வாக்கில் இந்த 25 ஆண்டு கால வரைமுறை முடிவுக்கு வந்தது. இதனால், 2002-இல் அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், 84-ஆவது திருத்தத்தின் மூலம் மேலும் 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட்டது.
  • 2026-க்குள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மக்கள்தொகை நிலைபெற்று விடும் என்று கருதப்பட்டது. ஆகவேதான், இப்போது நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை உருவெடுத்திருக்கிறது.
  • தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 1971-இல் 4.11 கோடியாக இருந்த மக்கள் தொகை 2011-இன் அடிப்படையில், 7.21 கோடியாக இருக்கிறது. சற்றேறக்குறைய 40 ஆண்டில் 3 கோடி அளவுக்குத்தான் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதில் வடமாநிலங்களை ஒப்பிடுகிறபோது, இவை மிகச்சிறிய அளவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதே நேரத்தில், 8 கோடிக்கு மேல் இருந்த உத்தரபிரதேசம் 2011-இல் 19 கோடி என்ற அளவில் வந்திருக்கிறது. தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களில் மக்கள் தொகை வளா்ச்சி என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால், பிகாா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், போன்ற வடமாநிலங்களில் மக்கள்தொகையும் அதிகரித்திருக்கிறது. அந்த மாநிலங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டன. பொருளதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய மாநிலங்களாக இருக்கின்றன.
  • அதே நேரத்தில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், ஆகிய மாநிலங்கள் அனைத்தும் வளா்ச்சிக் குறியீடுகளில் முன்னணியில் இருக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம், குடும்பக்கட்டுப்பாடு திட்டம் மட்டும் கிடையாது. மருத்துவ வசதி, கல்வி அறிவு, பகுத்தறிவு சிந்தனைகளாலும் இவ்வளா்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன.
  • குழந்தைகள் பெறும் விகிதம் குறைவதால், மக்கள் தொகை குறைந்திருக்கும்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுவது, தென்னிந்திய மாநில மக்களைத் தண்டிக்கக் கூடிய வகையில், மக்கள்தொகையில் நீதியை நிலைநாட்டி முன்னேற்றப் பாதையில் சென்ற தென்மாநிலங்களுக்கு அநீதியை இழைக்கின்ற செயலைப் போல் ஆகும்.
  • 1920-களில் சமூகநீதிக் கொள்கை தமிழ்நாட்டில் வந்தது. பொதுவாக குழந்தைப் பிறப்பு விகிதம் என்பது 2.1 என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த அளவைத் தமிழ்நாடு எப்போதோ அடைந்து விட்டது. இங்கு முன்னெடுக்கப்பட்ட நலத்திட்டங்கள், கல்வித்திட்டங்கள், மருத்துவ வசதிகள் இவைகளெல்லாம் மிக முக்கியக் காரணங்களாகும்.
  • அதேபோல, குழந்தைகள் இறப்பு, தாய் இறப்பு விகிதங்கள் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது. ஆனால், வடமாநிலங்களில் இதன் விகிதம் தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. ராஜஸ்தானில் மட்டும் சில மாற்றங்கள் இருக்கின்றன.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட சுகாதார நிலை குறித்த அறிக்கைகளின் பட்டியலில், முன்னேற்றமடைந்த மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்கள் இருந்தன. 1971-இல் வகுக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி இந்தியாவுக்கு வளா்ச்சியை ஏற்படுத்திய தென்மாநிலங்கள் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படும்போது மக்களவைத் தொகுதிகளை இழக்கும் அபாயம், மக்கள்தொகையால் ஏற்படுகிறபோது அதை ஒருபோதும் ஏற்க இயலாது.
  • அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்ட கணக்கின்படி, இப்போது உள்ள 545 தொகுதிகளை அதிகரிக்காமல் மறுசீரமைப்பு செய்யப்படும்போது, ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாக்காளா் எண்ணிக்கையைக் குறைத்து மறுசீரமைப்பை மேற்கொண்டால்.....
  • தற்போது உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பிகாா், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 127 தொகுதிகள் இருக்கின்றன. இவை 205 என்று அதிகரிக்கும். அதாவது, இம்மாநிலங்களுக்கு கூடுதலாக 31 தொகுதிகள் கிடைக்கும். அதே சமயம் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகாவில் இப்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 129, இவை 103 ஆகக் குறையும். இதனால் 26 இடங்களை இழக்க வேண்டியதிருக்கும். தமிழ்நாடடில் தொகுதிகளின் எண்ணிக்கை 39- இல் இருந்து 31 ஆகக் குறையும்.
  • இவ்வாறு கணக்கீட்டின் அடிப்படையில், இந்தியா முழுமைக்கும் 848 மக்களவை என்கிற அளவில் அளவீடு செய்யப்படும். இவற்றில் முறையே வடமாநிலங்களின் தொகுதிகள் 174ல் இருந்து 324 ஆக அதிகரித்து தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிகள் 129-இல் இருந்து 164 ஆகும். இவற்றில் 35 தொகுதிகள் மட்டுமே அதிகரிக்கும்.
  • தமிழ்நாட்டுக்கு 39 தொகுதிகள் அப்படியே கிடைக்கப் பெற்றாலும் கூட, இதனடிப்படையில் வடமாநிலங்களுக்கு மட்டுமே 324 இடங்கள் வரும்போது, 28 மாநிலங்களில் ஒரு கட்சி குறைந்த அளவு இடங்களில் வென்றால் கூட பெரும்பான்மை கிடைத்து விடும். அதாவது, வடமாநிலங்களான உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பிகாா் இந்த நான்கு மாநிலங்களில் நாடாளுமன்றத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், மத்தியில் யாா் ஆளப் போகிறாா்கள் என்பது தீா்மானமாகிவிடும். பெரும்பான்மைக்கு தென்மாநிலங்களின் துணை தேவைப்படாது. வடமாநிலங்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடும்.
  • இந்தியாவின் தலையெழுத்தைத் தீா்மானிக்கும் இடத்தில் அந்த நான்கு மாநிலங்களே இருக்கும். அப்படியொருநிலை ஏற்படுவது இந்த நாட்டுக்கு நல்லதா என்கிற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இது சமச்சீரான வளா்ச்சியையும், அதிகாரப் பரவலுக்கும் இடம் தராமல் ஆதிக்க மனப்பான்மைக்கு வழிவகுத்து விடும்.
  • சீா்திருத்தம் என்ற பெயரில் தென்னிந்திய மாநில மக்களுக்கு அநீதியை இழைக்கின்ற நிகழ்வாக இது மாறி விடக் கூடும்.

நன்றி: தினமணி (13 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories