நாட்டுக்கே தன்னம்பிக்கை ஊட்டிய சுவாமி விவேகானந்தர்!
- அன்னுராணி உத்தர பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த ஈட்டி எறியும் வீராங்கனை. அவர் 2023-ம் ஆண்டில் நடந்த ஆசிய ஈட்டி எறியும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதை அன்னுராணி தனது பெற்றோருக்கோ, குருவுக்கோ சமர்ப்பிக்கவில்லை. சுவாமி விவேகானந்தருக்கு காணிக்கையாக்கினார்.
- கடந்த 123 ஆண்டுக்கு முன்பு மறைந்த ஒரு மகானுக்கு இன்று ஒருவர் தங்கப் பதக்கம் சமர்ப்பித்தார் என்றால், அவர் இன்றும் உயிரோடு விளங்குகிறார் என்றுதான் பொருள். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்தான் தன்னை செதுக்கின என்று அன்னுராணி உளமார நம்பினார். அதைவிட இளைஞர்களை சுவாமி விவேகானந்தர் பெரிதும் நம்பினார். இந்திய இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக அன்றும் இன்றும் வேண்டிய கருத்துகளை விவேகானந்தர் உரைத்ததும் தமிழகத்தில்தான்
- இன்று பிப்ரவரி 9, இதே தேதியில் 129 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவே கானந்தர் சென்னையில் 1897-ம் ஆண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெற்றார். அனைத்து விதமான மக்களும் அவரது கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். ஒரு சிறந்த மருத்துவர் போல் மனிதனின் நோய் எங்கே இருக்கிறது? அந்த நோய்க்கான மருந்து. நிரந்தர தீர்வு எங்கிருக்கிறது என்பதை சுவாமி கண்டறிந்து கூறினார்.
- இன்று நம் இளைஞர்கள் உலகில் எங்கும் வரவேற்கப்படுகின்றனர். ஆனால் ‘நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் இங்கு இடமில்லை என்று பல மேலை நாடுகளில் பலகை மாட்டப்பட்டிருந்த காலம் ஒன்று இருந்தது. அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில், விவேகானந்தர் உலக அரங்கில் நம் நாட்டின் கலாச்சார, பண்பாட்டு, ஆன்மிகப் பெருமைகளைப் பறை சாற்றினார்.
- விவேகானந்தரின் சிகாகோ பிரசங்கத்துக்கு பின்னரே இந்தியர்களை அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும் ஐரோப்பியர்களும் மதிக்க ஆரம்பித்தார்கள். அதைவிட முக்கியம், இந்தியர்களே இந்தியர்களை மதிக்க ஆரம்பித்தார்கள். ஒரு தனி மனிதனுக்குத் தன்னம்பிக்கை தருவதே கடிணம். ஆனால், சுவாமி விவேகானந்தரோ ஒரு நாட்டுக்கே தன்னம்பிக்கை தந்தார். அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பது சிரமம் என்றால், அவர்களையே நம்புவது எவ்வளவு பெரிய சவாலாக இருந்திருக்கும். சுவாமி நம்மை நம்பினார்.
- “போட்டி என்று வருமானால் நம் இளைஞர்கள் உலகில் உள்ள எந்த இளைஞரையும் வெல்வார்கள் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று” இவ்வாறு விவேகானந்தர் பிப்ரவரி 9-ம் தேதி காலை சென்னையில் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்தில் ‘நம் முன் உள்ள பணி என்ற தலைப்பில் இளைஞர்களை ஊக்கப்படுத்தினார். அந்நிய படையெடுப்பு மற்றும் நம் மக்களின் சிந்தனை தூக்கம் என்று பல காரணங்களால் இந்திய மக்களின் தன்னம்பிக்கை தகர்ந்திருந்தது.
- ஆனால், சுவாமி நம் மக்களின் திறமை களையும் கண்டார். குறைபாடுகளையும் கட்டிக் காட்டினார். அதோடு நாம் குண்டுசட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்க கூடாது. இந்தியர்கள் உலகப் பார்வை பெற வேண்டும். உலகத் தரத்தில் உயர வேண்டும் என்று முதன் முதலில் முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்தான்.
- நமது மக்களின் களின் குறைபாடுகளாக சுவாமி அன்றைய சொற்பொழிவில் காட்டியவை பல. அவற்றுள் சில...
- “நாட்டின் மிகச் சிறந்த மேதைகள் நூற்றாண்டுகளாக சமையலறை பற்றி யும். நான் உங்களைத் தொடலாமா? நீங்கள் என்னைத் தொடலாமா? அப்படி தொட்டுவிட்டால் என்ன பிராயச்சித்தம் என்பது பற்றியும் விவாதித்துக் கொண்டிருக் கிறார்கள் என்றால், அந்த இனத்துக்கு அதை விட பெரிய சீரழிவு வேறென்ன வேண்டும்?’
- “பரந்த மனப்பான்மை பெறுவது, பிற நாடுகளுக்குச் செல்வது. மற்றவர்களோடு கலப்பது. நம் கருத்துகளை உலகம் தழுவியதாக அமைப்பது - இவையே நம் லட்சியத்தின் எல்லை”.
- “ஆனால் எப்போதுமே நாம் நமது சாஸ்திரங்களின் திட்டங்களுக்கு மாறாக, நம்மை மேலும் மேலும் சிறுசிறு கூட் டமாக்கிக் கொள்வதற்கே முயன்று கொண்டிருக்கிறோம்; மற்றவர்களோடு பழகுவதில் இருந்து விலகி வருகிறோம். இதனால் பல அபாயங்கள் நேர்ந்துள்ளன. நாம்தான் உலகத்திலேயே சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே. அது அவற்றுள் மிக மோசமான ஒன்று”.
- “அறிவிலிகள் எதையாவது நினைத்துவிட்டுப் போகட்டும், நாம் வாழ்ந்து வருவதற்கான காரணம் நாம் வெளியுலகுக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். மதம், தத்துவம், ஞானம், ஆன்மிகம் இவையே உலகுக்கு இந்தியா வழங்கும் கொடை”.
- சுவாமி விவேகானந்தர் மேற்கூறிய கொடைகளை வழங்கியவர்களை ரிஷிகள் என்று நிர்ணயிக்கிறார்.
- “நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நீங்கள் உங்களை வீரர்கள் என்று நம்பினால் வீரர்கள் ஆவீர்கள், ரிஷிகள் என்று நம்பினால் நாளைக்கே ரிஷிகளாவீர்கள். உங்களை எதனாலும் தடுக்க முடியாது. ஒன்றுக்கு ஒன்று முரணானவை போன்றும் சண்டையிடுபவை போன் றும் தோன்றுகின்ற நமது மதப் பிரிவுகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு கோட்பாடு இருக்குமானால், அது, எல்லா பெருமையும் ஆற்றலும் தூய்மையும் ஆன்மாவில் ஏற்கெனவே இருக்கிறது என்பதுதான்”.
- “ஆன்மாவில் ஆற்றல் இருக்கிறது என்ற உண்மையை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த ஆன்ம சக்தி வெளிப் படாதிருக்கலாம். வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் அது நிச்சயம் இருக்கிறது”
- “இப்போது நம்மில் பெரும்பாலானோரும் எண்ணிக் கொண்டிருப்பது போல், நீங்கள் அரைப் பைத்தியங்கள் என்று நம்பாதீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியும், எல்லா ஆற்றலும் ஆன்மாவில் இருக்கிறது. எழுந்திருங்கள். உங்கள் உள்ளிருக்கும் தெய் வீகத்தை வெளிப்படுத்துங்கள்” இவ்வாறு சுவாமி விவேகானந்தர் நம் இந்தியர்களின் வளர்ச்சிக்காக அவர்களது அறிவு மற்றும் மனதின் விசாலத்துக்காகப் பல்வேறு கருத்துகளை கூறினார். இவை போன்ற சிந்தனைகளை நன்கு வாசித்த நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ரொமா ரோலாவின் விவேகானந்தர் பற்றிய பதிவை இந்த நன்னாளில் நினைவு கூர்வோம்:
- “விவேகானந்தர் ஆற்றலின் திரண்ட வடிவமாகத் திகழ்ந்தார். ‘செயல் வீரம்’ என்பதே மனித குலத்துக்கு அவரது செய்தியாக இருந்தது. அவரது அனைத்து பண்புகளிலும் சிகரமாக விளங்கியது அவரது அரச தோரணை. அரசனாகவே பிறந்தவர் அவர். இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி அவரது அருகில் வந்த யாரும் அவரை வணங்காமல் சென்றது கிடையாது”.
- “விவேகானந்தரை 2-ம் இடத்தில் ஒரு போதும் நினைத்துப் பார்க்க முடியாது. எங்கு சென்றாலும் அவர் முதல் இடத்திலேயே இருந்தார். “இவர் தலைவர், கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டு மனித குலத்துக்காக அனுப்பப்பட்டவர். ஆணையிடுவதற்கென்றே அதிகாரத்துடன் பிறந்தவர்” என்று யார் அவரைப் பார்த்தாலும், முதல் பார்வையிலேயே புரிந்து கொள்வார்கள்.
- “அந்த வீரரின் திருமேனியை சிதையில் வைத்தபோது அவருக்கு 40 வயது கூட ஆகவில்லை. அன்று சிதையில் ஓங்கி எழுந்த அந்தச் செந்நாக்குகள் இதுவரை அணையவில்லை. இன்றும் எரிந்து கொண்டிருக்கின்றன. அந்தச் சிதை சாம்பலில் இருந்து, அழியா பறவையான ஃபீனிக்ஸ் போல், புதிய இந்தியா எழுந்து வந்தது. தனது ஒருமைப்பாட்டில் அது நம்பிக்கை கொண்டிருந்தது. பண்டைய வேத முனிவர்களின் சிந்தனையில் எழுந்து, காலம் காலமாக வந்து கொண்டிருக்கின்ற மாட்சிமை மிக்கச் செய்தி அதன் ஆதாரமாக இருந்தது. விவேகானந்தரிடம் இருந்து எழுந்த இந்தப் புதிய செய்திக்காக உலகமே அவருக்குக் கடன்பட்டுள்ளது.”
- ஆம், இன்றைய முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியா, சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளின் திரண்ட வடிவம் என்பது சிறந்தவர்களின் கருத்து. இந்தியா உயர்ந்தால் உலகம் உயர்வது திண்ணம்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 02 – 2025)