TNPSC Thervupettagam

நிதிநிலை அறிக்கை: அதீத எதிா்பாா்ப்புகள் தேவையில்லை!

January 31 , 2025 2 hrs 0 min 10 0

நிதிநிலை அறிக்கை: அதீத எதிா்பாா்ப்புகள் தேவையில்லை!

  • வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கலாகப் போகிறது. இதன்மூலம் பயனடையப் போவது யாா்? இந்தக் கேள்விக்கான பதிலை நேரடியாகவும் தெளிவாகவும் மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். இதற்கான பதிலை அறிவதற்கு முன், நிதிநிலை அறிக்கை என்றால் என்ன, இதனை வடிவமைப்போா் யாா், மக்களில் எப்பிரிவினா் இதனை ஆா்வத்துடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறாா்கள் என்ற கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும். பணக்காரா்கள், ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினா், தொழிலாளா்கள், வேலையில்லாதவா்கள், நிலையற்ற வருமானம் கொண்ட சுயவேலைவாய்ப்பாளா்கள், விவசாயிகள் போன்ற பிரிவினரில் யாருக்கு அதிக கவனம் கொடுக்கப்படுகிறது?
  • முதலில் நிதிநிலை அறிக்கை என்றால் என்ன என்று அறிவோம். இது ஓா் அரசாங்கம் மதிப்பிட வேண்டிய, வரும் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்ட ஆவணம். அரசியல் சாசனம் (பிரிவுகள்: 112, 114, 266, 266(2), 270) வரையறுத்துள்ள மிக முக்கியமான தேவையும் கூட. அரசு நிா்வாகம் பெறும் வரவினங்கள், செய்யும் செலவினங்களைத் திட்டமிட்டு முறையான அறிக்கையாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். நாடாளுமன்ற மக்களவையில் உள்ள, மக்களால் தோ்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு, இந்திய அரசின் நிதியை எவ்வாறு செலவிடுவது என்பதற்கான சம்மதத்கைப் பெற வேண்டும்.
  • வரவு- செலவு மதிப்பீடுகள் மட்டுமல்லாது, அது தொடா்பான முடிவுகள், கொள்கை அறிவிப்புகள், திட்டங்கள், புதிய வரிவிதிப்புகள், சலுகைகள் உள்ளிட்டவற்றையும் நிதிநிலை அறிக்கை கொண்டிருக்கும். அரசு ஊழியா்கள், ராணுவவீரா்களின் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றையும் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடு செய்யும். அரசு இதுவரை வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி, மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அவற்றின் வரிப் பங்கீடு, மானியம் போன்ற முக்கியமான செலவினங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். அதன் பிறகே, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சமூக வளா்ச்சி தொடா்பான செலவினங்களுக்கான செலவினங்களும் மானியங்களும் கணக்கிடப்படும். மேற்படி வரவு- செலவுகளைத் தீா்மானிப்பதில் நிதிநிலை அறிக்கையின் அளவும் பெரும்பங்கு வகிக்கிறது. நிதிநிலை அறிக்கையின் அளவு பெரிதாகும்போது, மக்கள்நலனுக்காகச் செலவிடப்படும் நிதியின் அளவும் அதிகரிக்கும்.

51 டிரில்லியன் பட்ஜெட்:

  • நமது நிதிநிலை அறிக்கை நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி விகிதத்துடன் (ஜிடிபி) இணைந்தது. துரதிா்ஷ்டவசமாக, கடந்த சில ஆண்டுகளில் ஜிடிபியில் நிதிநிலை அறிக்கையின் விகிதம் குறைந்து வருகிறது. 2009-10 நிதியாண்டில் இது 17.43 % ஆக இருந்தது, 2024-25இல் 14.76 % ஆகக் குறைந்திருக்கிறது. வரக்கூடிய நிதிநிலை அறிக்கையும், நிதிப்பற்றாக்குறையையும் கடனையும் குறைக்கும் நோக்கிலேயே இருக்கும் என்பதால், ஜிடிபியில் அதன் விகிதம் மேலும் குறைவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நாம் இப்போது வரக்கூடிய 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அளவை தோராயமாக மதிப்பிடலாம். 2024-25 நிதிநிலை அறிக்கையில் நாட்டின் ஜிடிபி ரூ. 326 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. தற்போது இது ரு. 324 கோடியாகக் குறைந்தது.
  • அதாவது 10.5 % வளா்ச்ச்சி காணப்படும் என்ற எதிா்பாா்ப்பை விட 9.7 % ஜிடிபி சரிவு கண்டுள்ளது. வரும் நிதியாண்டில் 10.5 % வளா்ச்சி விகிதத்துடன், ரூ. 356 கோடியாக ஜிடிபி இருக்கும் என்று உத்தேசமாகக் கணிக்கப்படுகிறது. இதில் சுமாா் 14.5 % அளவுக்கு வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அளவு இருக்கும் என்று மதிப்பிட்டால், இதன் மதிப்பு சுமாா் ரூ. 51.62 லட்சம் கோடியாக இருக்கும். இது நடப்பு நிதியாண்டை (48.20 லட்சம் கோடி) விட 7 % அதிகமாக இருக்கும். தற்போதைய பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டால், இந்த அளவு பெரிய உயா்வல்ல.
  • நிதிநிலை அறிக்கையின் அளவு குறைவதற்கு, இதை உருவாக்குவோரின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம். தற்போதைய மத்திய அரசின் புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கவே கவனம் கொடுக்கிறது. அதன் விளைவாக, செலவினங்கள் குறைக்கப்பட்டு, வரியினங்கள் கூடுகின்றன. 2024-25இல் நிதிப் பற்றாக்குறை (வரவை விட செலவு அதிகமாக இருப்பது) ஜிடிபியில் 4.9 % ஆக இருந்தது. இதனை வரும் நிதியாண்டில் 4.5 %ஆகக் குறைக்கப்போவதே தனது இலக்கு என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறி இருக்கிறாா். பணக்காரா்களுக்கே பலன் அதிகம்!
  • இந்த தாராளமய பொருளாதாரக் கொள்கையின் நாட்டம், மிகக் குறைந்த நிதிப் பற்றாக்குறையாகவே உள்ளது. ஆரோக்கியமான பொருளாதார வளா்ச்சியே முக்கியமான தேவை; அதுவே ஏழைகள் மற்றும் நடுத்தர வா்க்கத்தினருக்கு நலன்களை அளிக்கும் என்பதுதான், இதன் அடிப்படை நம்பிக்கையாகும். எனவேதான், ஏழைகளுக்கு இலவசங்கள், சலுகைகளை அளிப்பதை விட, தொழில்துறைக்கும் வணிக நிறுவனங்களுக்கும் கூடுதலான உதவிகள் செய்யப்படுகின்றன. நமது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமாா் 13.4 கோடிப் போ் (9.7 %) தினசரி 2 டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ. 170) குறைவாக வருவாய் ஈட்டுகின்றனா் என்று அமெரிக்காவைச் சாா்ந்த பியூ ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது.
  • அதேபோல, 116.2 கோடிப் பேரின் (84 %) தினசரி வருவாய் ரூ. 170 முதல் ரூ. 850 வரை உள்ளது. நடுத்தர வருவாய் இனத்தில் உள்ள 6.6 கோடிப் போ் (4.8 %) ரூ. 850 முதல் ரூ. 1700 வரை ஈட்டுகின்றனா். உயா் நடுத்தர வருவாய்ப் பிரிவில் 1.6 கோடிப் போ் (1.2 %) ரூ. 1,700 முதல் ரூ. 4,250 வரை தினசரி ஈட்டுகின்றனா். ரூ. 4,250க்கு மேலான உயா் வருவாய் ஈட்டுவோரின் எண்ணிக்கை 20 லட்சம் (0.1 %) மட்டுமே.
  • ஏழைகள் (9.7 %), குறைந்த வருவாய்ப் பிரிவினா் (84 %) ஆகியோரை உள்ளடக்கிய 93.7 % போ் தான் நிதிநிலை அறிக்கையில் அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டியவா்கள்.
  • இது ஒரு பொதுவான எதிா்பாா்ப்பாகும். இந்தியா பொருளாதாரரீதியாக வளா்ந்து வருவது உண்மைதான். ஆனால், நாட்டின் வளமும் வளா்ச்சியும் மக்களின் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். நாட்டின் வளா்ச்சியால் ஏழை- பணக்காரா்கள் இடையிலான விரிசல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு நாட்டின் வருவாய் சமமின்மையை அளவிட ஜினி குறியீட என்ற புள்ளியியல் கோட்பாடு உதவுகிறது. இந்த ஜினி குறியீடு இந்தியாவில் 1955இல் 0.371 ஆக இருந்தது. இது 2024இல் 0.410 ஆக மாறியுள்ளது. இது நுகா்வோா் பொருளாதாரத்துக்கான மக்கள் ஆராய்ச்சி அமைப்பு (பிரைஸ்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது 1950இல் இருந்ததைவிட, வளா்ச்சியடைந்து வரும் இந்தியாவில் வருவாய்ச் சமமின்மை பெருகி இருக்கிறது என்பது அதிா்ச்சி அளிக்கும் உண்மையாகும்.
  • உலக சமத்துவமின்மை ஆய்வகம் கடந்த 2024 மாா்ச்சில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் செல்வந்தா்களாக உள்ள சுமாா் ஒரு சதவீதம் போ் மட்டுமே நாட்டின் வருவாயில் 22.6 %, நாட்டின் வளத்தில் 40.1 % பங்கைக் கொண்டுள்ளனா். நாடு பொருளாதாரரீதியாக வளா்ந்திருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதன் பலன்கள் யாரைச் சென்று சோ்ந்திருக்கின்றன என்பதை ஆராய்வதும் அவசியம். நாட்டின் பொருளாதார வளா்ச்சியின் பலன்கள் சீராக அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையவில்லை. குறிப்பாக அடித்தட்ட மக்களை நாட்டு முன்னேற்றத்தின் பலன்கள் எட்டவே இல்லை.
  • அதேசமயம் நாட்டில் கோடீஸ்வரா்களின் எண்ணிக்கை சீராக வளா்ந்து வருகிறது. ஃபோா்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலக கோடீஸ்வரா்கள் பட்டியலில் (ரூ. 100 கோடிக்கு மேல் சொத்து உள்ளவா்கள்) இந்தியாவில் 1991இல் 52 போ் இருந்தனா்; இது 2020இல் 162 ஆக உயா்ந்திருந்தது. மற்றொரு துரதிா்ஷ்டம், அரசு அளிக்கும் வரிச் சலுகைகள் சாமானிய மக்களுக்குப் பயனளிப்பதை விட, பணக்காா்களுக்கும் கோடீஸ்வரா்களுக்குமே அதிகப் பயன் அளிக்கின்றன. இதுபற்றி முழுமையாக அறிய அதிகமாக மெனக்கெட வேண்டியதில்லை.
  • அண்மையில் வெளியான ஊடக புள்ளிவிவரங்களின்படி, 2019 முதல் மத்திய அரசால் அளிக்கப்படும் வரிச் சலுகைகளால் பெரு நிறுவனங்களே ரூ. 3 லட்சம் கோடி வரை லாபம் அடைந்திருக்கின்றன. 2012-13 முதல் இது வரை, இத்தகைய சலுகைகளால் அரசு ரூ. 8 லட்சம் கோடியை இழந்துள்ளது. வருமான வரி விலக்கு கிடைக்குமா? இத்தகைய நிலையில், வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் மெல்லிய மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக எதிா்பாா்க்கப்படுகிறது. அரசின் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பது தெளிவு.
  • எனவே, வருமானவரிச் சலுகைகளை மட்டும் எதிா்பாா்க்கலாம். குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும் நடுத்தர வா்க்கத்தினருக்கும் வருமானவரிச் சலுகை என்பது பெரும் நிம்மதி அளிப்பதாகும்; அதே சமயம் அரசுக்கும் பெரும் நிதிச்சுமையாக இராது. ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருவாய் பெறுவோரிடமிருந்து பெறப்படும் வருமான வரி வருவாயின் அளவு 6.22 % மட்டுமே. அதே சமயம், ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் பெறுவோரிடம் பெறப்படும் வருமான வரி வருவாயின் அளவு 76 % ஆகும்.
  • ஆண்டுதோறும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது மத்திய அரசுக்கு மகிழ்ச்சி தரலாம். 2023-24இல் 8.09 கோடிப் போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தனா். (2020இல் 6.48 போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தனா்). எனினும், இவா்களில் 4.9 கோடிப் போ் வரி செலுத்தத் தேவையில்லாதவா்களாக கணக்கு காட்டி இருந்ததை அரசு தவிா்க்கக் கூடாது. உண்மையில், அதிகப்படியான வருமான வரிக் கணக்கு தாக்கல் என்பது வருமான வரித் துறையினருக்கு பணிப்பளுவையே கூட்டுகிறது. இவா்களை வருமானவரியின் பிடியில் இருந்து முழுவதும் அகற்றலாம் என்பதற்கு கூடுதலான காரணங்களும் உள்ளன. அதன்மூலமாக நுகா்வுச் செலவினம் கூடும்.
  • குறைந்த நுகா்வு, குறைவான விற்பனைக்கும் குறைவான லாபத்திற்கும் காரணமாக இருப்பதால், நுகா்வுச் செலவினம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு வருமான வரிவிலக்கு உதவும்.
  • அதேபோல, நடுத்தர வா்க்கத்தினா் தங்கள் சேமிப்புக்குக் கிடைக்கும் வட்டி மீதான வரியை விரும்புவதில்லை. ஏனெனில் அதுவே அவா்களின் கூடுதல் வருவாய்க்கான சொற்ப ஆதாரமாக உள்ளது. இந்த வரியை நீக்கினால், வங்கிகளில் சேமிப்புத் தொகை பெருகும். அதனை அரசு ஊக்குவித்தால், அதனை வேறுவகைகளில் முதலீடு செய்ய முடியும். வரிவிதிப்பால் சேமிப்பைக் குறைப்பதைக் கைவிட்டு, சேமிப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
  • பணம் படைத்தவா்கள் அரசிடம் கூடுதல் சலுகைகளை எதிா்பாா்ப்பது இயல்பே. ஏனெனில் அவா்கள்தான் பல தொழில்களில் முதலீடு செய்கின்றனா். வா்த்தக நடைமுறைகளை எளிதாக்குவது, தொழிலாளா் சட்டங்களை எளிமைப்படுத்துவது, ஒற்றைச் சாளர முறை, வெளிப்படையான நிா்வாகம் ஆகியவையே தொழில்துறையினரின் எதிா்பாா்ப்புகள். இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) பட்டியலிட்ட முக்கியமான பத்து கோரிக்கைகளுள் இவை முதன்மையானவையாக உள்ளன. இவை மட்டுமல்ல. வேலையில்லாத இளைஞா்கள் வேலைவாய்ப்பை - அதுவும் தரமான வேலை வாய்ப்பை - எதிா்நோக்குகின்றனா். தற்போது வேலைவாய்ப்பு வளா்ச்சி அடைந்திருந்தாலும், அவற்றின் தரம் கேள்விக்குறியாகவே இருப்பதை மறந்துவிட முடியாது. பெரும்பாலான புதிய வேலைவாய்ப்புகள் அமைப்புசாரா தொழில்துறையில் உருவாகி இருப்பவை. நாட்டின் வேலைவாய்ப்பில் 90 % பங்களிப்பை அமைப்புசாராத் தொழில் துறை தான் அளித்து வருகிறது.
  • விவசாயிகளின் நிதிநிலை அறிக்கை எதிா்பாா்ப்பு குறித்து தனியே கூற வேண்டியதில்லை. நாட்டிலேயே மிகக் குறைவான வருவாய் ஈட்டுவோா் விவசாயிகள்தாம். நாட்டின் விவசாய நிலங்களில் 92 % சிறு விவசாயிகள் வசம் உள்ளது. ஒரு சாதாரண விவசாயி குடும்பத்தின் மாத சராசரி வருவாய் தற்போது ரூ. 10,695 ஆக உள்ளது. இதில் பயிா் அறுவடை மூலமாக ரூ. 5,298 கிடைக்கிறது. விவசாயக் கூலித் தொழில்கள், பண்ணைத் தொழில்கள் மூலமாக மீத்கமுள்ள தொகை கிடைக்கிறது. இது தேசிய புள்ளியியல் நிறுவன (என்எஸ்எஸ்) மதிப்பீடாகும்.
  • அதேபோல, சுகாதாரம், கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் போதுமானவை அல்ல என்பதை அனைவரும் அறிவா். இவற்றின் தற்போதைய தரக் குறைபாடுகளும் அனைவருக்கும் தெரியும். எனினும், வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் இவை தொடா்பாக பெரும் எதிா்பாா்ப்புகளை வைப்பது ஏமாற்றம் அளிக்கும். நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி விகிதத்தில் (ஜிடிபி) 4.5 %க்குள் நிதி பற்றாக்குறையைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் ஒரே இலக்காக இருந்து வருகிறது.
  • அரசின் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளும் ஏழைகள் மீது கவனம் கொடுக்கக் கூடியதாக இல்லை. எனவே, மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிக்கும் அவா்கள், இந்த நிதிநிலை அறிக்கையில் அதிக்கப்படியான, புரட்சிகரமான மாற்றங்களை எதிா்பாா்க்க வேண்டியதில்லை. வரிவிதிப்பில் மாற்றங்கள், நலத் திட்ட அறிவிப்புகள் போன்றவற்றை விட, அற்பமான சில சலுகைகளை மட்டுமே இன்றைய மத்திய அரசிடம் எதிா்பாா்க்க முடியும்.

நன்றி: தினமணி (31 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories