TNPSC Thervupettagam

நிதிநிலை அறிக்கை: சமச்சீராக ஏன் இல்லை?

July 29 , 2024 11 hrs 0 min 23 0
  • உலக அளவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்​தா​லும், பல இடங்களில் வளர்ச்சி நீடித்த வளர்ச்சியாக இல்லாமல் இருக்​கிறது. அரசியல் நிச்சயமற்ற தன்மை, பன்னாட்டு உறவுகளில் நீடிக்​கும் சிக்கல், கப்பல் போக்கு​வரத்​தில் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலைவாசி உயர்வு உலக அளவில் முக்கியப் பிரச்​சினையாக இருக்​கிறது.
  • ஆனால், இந்தியா​வில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ள​தாகவும், வரும் நாள்களில் இது தொடரும் என்றும் மத்தி​ய நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்​திருக்​கின்ற இந்த வேளையில்​தான், நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2024-25) தாக்கல் ஆகியிருக்​கிறது. அதே வேளையில், இந்தியா​வின் பணவீக்க விகிதம் 4% ஆக இருக்​கிறது.

பட்ஜெட் என்ன சொல்கிறது?

  • இந்த பட்ஜெட்டில் இளைஞர்​கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் உருவாக்​கப்​பட்டிருக்​கின்றன என்கிற நிலை இருந்​தா​லும், இந்தியக் கூட்டாட்​சித் தத்து​வத்​தின் அடிப்​படை​யில், பல்வேறு மாநிலங்​களுக்​குப் போதிய நிதி ஒதுக்​கப்​பட​வில்லை என்ற குரல்கள் நாலா பக்கமும் ஒலிக்​கின்றன.
  • தமிழ்​நாட்டுக்​குப் பேரிடர் மேலாண்மை நிதி மறுக்​கப்​பட்டிருக்​கிறது. ‘தமிழ்நாடு’ பெயரை​யும், திருக்​குறளை​யும் பாஜகவினர் பயன்படுத்​துவது வழக்கமான ஒன்றாக இருந்​தா​லும், இங்கு கிடைத்த தேர்தல் தோல்வியால், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்னும் பெயரை உச்சரிக்​கக்கூட பாஜக மறுத்​து​விட்டது. மொத்தத்​தில், மோடி அரசைக் காப்பாற்றிக்​கொள்​வதற்கான பட்ஜெட்டாகவே இது பார்க்​கப்​படு​கிறது.
  • புதிய வருமான வரித் திட்டத்​தைத் தேர்ந்​தெடுப்​பவர்​களுக்கு நிலையான கழிவுத்தொகை ரூ.50ஆயிரத்​தில் இருந்து ரூ.75ஆயிரமாக உயர்த்​தப்​பட்டுள்ளது. புதிய வருமானவரித் திட்டத்​தில் ரூ.3 லட்சம் வரை சம்பளம் பெற்றால் வரி இல்லை. ரூ.3 முதல் ரூ.7 லட்சம் வரை 5% வரி; 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை 10% வரி; 10 முதல் 12 லட்சம் வரை 15% வரி, 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20% வரி, 15 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்​களுக்கு 30% வரி என அறிவிக்​கப்​பட்டுள்ளது.
  • பழைய வருமானவரித் திட்டத்​தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய வரி முறையைப் பின்பற்​று​பவர்​களுக்கான வருமான வரி விகிதத்தையே இது காட்டு​கிறது. ரூ.4 கோடி வருமானதா​ரர்​கள், ஓய்வூதி​யர்​களுக்​குப் பலன் தரக்கூடிய அறிவிப்​பும் வெளியிடப்​பட்டிருக்​கிறது. 30% வரை வரி விதிக்​கப்​படுகிற புதிய வருமான வரி முறையைத் தேர்வுசெய்​பவர்​களுக்கு மட்டுமே இது பொருந்துகிறது.
  • 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்​களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்​கும் திறன்​பயிற்சி வழங்குதல் - வாய்ப்புகளை உருவாக்​கு​வதற்கான ரூ.2 லட்சம் கோடி மதிப்​பிலான 5 திட்டங்​களைப் பிரதமர் தொகுப்​புத் திட்டத்​தின் கீழ் முன்னெடுத்​திருப்ப​து எவ்வாறு செயல்​பாடாக மாறப் போகிறது என்ப​தைப் பொறுத்​துதான் வரவேற்பு கிடைக்​கும்.
  • வேலைவாய்ப்​புத் திறன் பயிற்சி, குறு-சிறு-நடுத்​தரத் தொழில்​நிறு​வனங்கள் மற்றும் நடுத்தர வகுப்​பினர் நலனில் கூடுதல் கவனம் செலுத்​தப்​பட்டிருக்க வேண்டும். வேளாண்மை, அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்​கப்​பட்டிருக்​கிறது.
  • எந்தத் தட்பவெப்​பநிலை​யிலும் தாக்குப்​பிடிக்​கக்​கூடிய 32 தோட்டக்​கலைகளில் 109 வகையான அதிக மகசூல் பெறும் பயிர்கள் அறிமுகப்​படுத்​தப்​படுவதோடு, தானியம் - எண்ணெய் வித்து​க்​களின் உற்பத்தி - சேமிப்பு​க்கு அதிக முக்கியத்​துவம் அளிக்​கப்​பட்டிருக்​கிறது. நாட்டின் கிழக்​குப் பகுதி மாநிலங்​களில் விவசாய வளர்ச்​சிக்கா​கவும், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உற்பத்​தியை அதிகரிக்​கவும் நடவடிக்கை மேற்கொள்​ளப்​பட்டிருக்​கிறது.
  • ஹைதரா​பாத், பெங்களூரு பாதுகாப்​புத் தளவாடத் தொழில்​வழித் தடத் திட்டம் அமைக்​கப்பட இருக்​கிறது. இதுபோன்று பிஹாரில் விமான நிலையங்​கள், மருத்​துவக் கல்லூரிகள் அமைக்கக் கூடுதல் நிதி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்​தின் கீழ், இந்த ஆண்டு ஒரு கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்​கப்​பட்டிருக்​கிறது. ஆந்திரம், பிஹார் ஆகிய இரண்டு மாநிலங்​களுக்கு அதிக நிதி ஒதுக்​கப்​பட்டிருப்ப​து பேசுபொருளாக இருக்​கிறது.

சர்ச்சைக்குரிய அம்சங்கள்:

  • ஆந்திரத்​தின் தெலுங்கு தேசம் கட்சி, பிஹாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை மத்தி​யில் பாஜக ஆட்சி அமைப்​ப​தற்கு ஆதரவளித்​திருப்ப​தை அடுத்து, அந்த மாநிலங்​களுக்கு அளிக்​கப்​பட்டுள்ள முக்கியத்​துவம் மற்ற மாநிலங்​களிட​மிருந்து எதிர்ப்பு​க்​குரல் எழுப்பக் காரணமாக அமைந்​திருக்​கிறது. ஆந்திரத்​தின் வளர்ச்​சிக்கான திட்டங்​களுக்கான சிறப்பு நிதி என்பது சந்திரபாபு நாயுடுவின் கோரிக்​கையாக இருந்தது. பிஹாருக்கான சிறப்பு அந்தஸ்து என்பது நிதீஷ்குமாரின் வேண்டுகோளாக இருந்தது.
  • பிஹாருக்​குப் பேரிடர் நிவாரணமாக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்​பட்டிருப்​பதோடு வெள்ள பாதிப்பு​களைத் தடுப்​பது, விவசாயப் பாசனத்​திற்​கெனப் பல்வேறு திட்டங்​களும் அறிவிக்​கப்​பட்டிருக்​கின்றன. அத்துடன் கயா, புத்த கயா உள்ளிட்ட புராதனச் சின்னங்​கள், கோயில்களை மேம்படுத்தச் சிறப்பு நிதி, நாளந்தா பல்கலைக்கழக மேம்பாடு, சுற்றுலாத் துறை மேம்பாடு உள்ளிட்ட திட்டங்​களுக்​கும் கூடுதல் நிதி வழங்கப்​பட்டிருக்​கிறது. அதேவேளை​யில், பிஹாருக்​குச் சிறப்பு அந்தஸ்து தரப்பட​வில்லை. ஆகவே, சிறப்பு உதவிகள் அளிக்​கப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் சொல்கிறார்.
  • இதேபோல் ஆந்திரத்​தில் புதிய தலைநகரத்தை உருவாக்​குதல் - உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்​பட்டுள்ளது. ஆந்திரத்​தில் போலவரம் திட்டம், நதிநீர், சாலை வசதி உள்ளிட்ட திட்டங்​களுக்​குக் கூடுதல் நிதி ஒதுக்​கப்​பட்டிருக்​கிறது.
  • தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்​களால் ஆந்திரத்து​க்கு ஒரு புதிய விடியல் கிடைத்​திருக்​கிறது. ஆனால், மற்ற மாநிலங்​களுக்கு நிலைமை வெவ்வேறாக இருக்​கிறது. குறிப்​பாக, பிற தென் மாநில மக்கள் வேதனையையும், வருத்​தத்​தையும் தெரிவித்து வருகிறார்​கள். தமிழ்நாடு புறக்​கணிக்​கப்​படு​கிறது. இது இந்தி​யா​வுக்கான சமச்சீரான நிதிநிலை அறிக்​கையாக இல்லாமல், சில மாநிலங்​களின் வளர்ச்​சிக்கான திட்டங்​களைத் தீட்டி​யிருப்​ப​தாகவே அறிய முடிகிறது.
  • சமச்சீரான வளர்ச்சி என்பது ஒரே விதமான வளர்ச்​சி​யையும், ஒன்றிரண்டு மாநிலங்​களின் வளர்ச்சி என்பது வீக்கத்​தையுமே காட்டு​கின்றன என்ப​தையும் மத்தி​ய அரசு உணர வேண்டும். தமிழ்​நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் - புயல் பாதிப்பு​களுக்கு எவ்வித நிதி ஆதார​மும் ஒதுக்​கப்​பட​வில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்​து​வமனை, சென்னை உள்ளிட்ட நகரங்​களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்​களுக்கு முக்கியத்​துவம் தரப்பட​வில்லை.
  • இந்தியா​வில் 20 கோடி மக்கள் ஏழையாக உள்ளனர். 80 கோடி மக்கள் நியாய​விலைக் கடைகளில் கிடைக்​கும் பொருள்களை நம்பி வாழ்க்கையை நடத்து​கிறார்​கள். இவர்கள் வாழ்க்​கைக்கான உத்தர​வாதம் என்ன? மக்களின் நலன் சார்ந்த திட்டங்களே காலம் கடந்து நிற்குமே தவிர, ஜிடிபி போன்ற புள்ளிவிவரங்கள் மக்களுக்கு நேரடிப் பயன்த​ராது.

பாரபட்சமான அணுகுமுறை:

  • இந்த பட்ஜெட் மூலம் பாஜக தன் ஆட்சி​யைக் காப்பாற்றிக்​கொள்​வதற்கான பாரபட்​சமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று குற்றம்​சாட்டத் தோன்றுகிறது. ஏனென்​றால், தமிழ்​நாட்டின் வளர்ச்​சிக்காகச் சிறப்​புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்​கப்​படாதது மத்தி​ய அரசின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது. கார்ப்​பரேட் முதலா​ளி​களுக்கான வரிச்​சலுகைகள் வழங்கப்​பட்டிருப்ப​து ஏழை, எளிய மக்களின் மீதான நம்பிக்​கைப் பார்வையைக் குறைத்திருக்கிறது.
  • உயர் கல்விக்கான மாணவர் உதவி ரூ.499 கோடியாக உயர்ந்துள்ளது. கூடுதலாக ஆராய்ச்​சிக் கண்டு​பிடிப்பு - தொழில்​பயிற்சி​களுக்கான நிதி உதவிக்கு முன்னுரிமை வழங்கப்​பட்டிருக்​கிறது. ஆராய்ச்​சிக்காக ரூ.162 கோடியில் இருந்து ரூ.355 கோடியாகவும், தேசிய தொழில்​பயிற்​சித் திட்டத்​தில் ரூ.460 கோடியில் இருந்து ரூ.600 கோடியாகவும் உயர்த்​தப்​பட்டுள்ளது.
  • 2023-24 முந்தைய ஆண்டு வரவு - செலவுத் திட்ட மதிப்​பீட்டில் இருந்து 6.8% அதிகரிக்​கப்​பட்டிருக்​கிறது. இந்த பட்ஜெட்டில், நம் முதலீடுகளைப் பொறுத்​தும், நாம் தேர்வு செய்யும் வரிமுறையைப் பொறுத்​துமே நாம் பணக்காரர் ஆவோமா, ஏழையாகவே இருப்போமா என்ப​தெல்​லாம் தீர்மானிக்​கப்​படும்.
  • பட்டியல் சாதி, பழங்குடியின, பிற்படுத்​தப்​பட்டோர், சிறுபான்​மையினருக்கு எந்தத் திட்டமும் வழங்கப்​பட​வில்லை. மத்தி​ய பட்ஜெட்டில் பெண்களுக்கான பொருளாதாரத் திறனை மேம்படுத்த சிறப்​புத் திட்டங்கள் முன்மொழியப்​பட​வில்லை. விளிம்​புநிலை மக்கள், அடித்​தட்டு மக்களுக்கான திட்டங்கள் தீட்டப்​பட​வில்லை. நிலைமை இவ்வாறாக இருக்க, பாரபட்​சமாக நிதி ஒதுக்​கப்​பட்டதன் மூலம் கூட்டாட்​சித் தத்​து​வத்து​க்கு வேட்டு வைப்​ப​தைப் போலல்ல​வா அமைந்திருக்​கிறது!
  • மிக முக்​கியமாக, தமிழ்​நாடு, பஞ்​சாப், கேரளம், டெல்லி, தெலங்​கானா, கர்​நாடகம் ஆகிய மாநிலங்​களுக்கு நிதி வழங்​கப்​படாததன்​ மூலம்​ எவ்​வகை​யான அரசி​யலைப்​ பிரதமர்​ மோடி முன்​னிறுத்​த விரு​ம்​பு​கிறார்​?

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories