TNPSC Thervupettagam

நிதிப் பகிர்வு: மாநிலங்களின் உரிமைக் குரல் மதிக்கப்பட வேண்டும்!

November 25 , 2024 6 hrs 0 min 7 0
  • 2026 - 31 காலக்கட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்கிற அடிப்படையில், நிதி ஆணையமும் மத்திய அரசும் இந்தக் கோரிக்கைக்குச் செவிசாய்க்க வேண்டியது அவசியம். இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசுகளும் வரிகள் விதித்து வருவாயைப் பெருக்குகின்றன.
  • இதில், மத்திய அரசு வசூலிக்கும் வரி வருவாய், நிதி ஆணையத்தின் பரிந்துரையின் மூலம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 280 சொல்கிறது. மத்திய அரசின் வரி வருவாயை ஒவ்வொரு மாநிலத்துக்கும் எந்த அளவுகோலில் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்பதை நிதி ஆணையம் ஆய்வுசெய்யும். தற்போது 16ஆவது நிதி ஆணையக் குழு, அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் நிதிப் பகிர்வு தொடர்பாக மாநிலங்களிடம் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
  • தமிழ்நாடு அரசுடன் சென்னையில் அக்குழு ஆலோசனை நடத்தியபோதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 50% நிதியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை விடுத்தார். 15ஆவது நிதி ஆணையக் காலத்தில் (2021-2026) மாநிலங்களுக்கு 41% பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்றாலும் 33.16% மட்டுமே வழங்கப்படுவதாக நிதி ஆணையக் குழுவிடம் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
  • தமிழ்நாட்டுக்கு 50% நிதியைப் பகிர்ந்தளிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அதற்கான தரவுகளையும் தமிழக நிதித் துறை நிதி ஆணையக் குழு திருப்தி அடையும் வகையில் வழங்கியது பாராட்டுக்குரியது. மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மாநில அரசும் நிதி ஒதுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நகரமயமாக்கல், முதியோர் எண்ணிக்கை, பேரிடர்கள் ஆகியவற்றுக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றை முன்வைத்து நிதி உயர்வு வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருப்பதைப் புறந்தள்ள முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல குஜராத் உள்பட 11 மாநிலங்களும் 50% நிதிப் பகிர்வுக்குக் கோரிக்கைவிடுத்திருக்கின்றன. ஆனால், நிதிப் பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
  • மத்திய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருப்பதை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உறுதிப்படுத்துகிறது. ஆனால், 9ஆவது நிதி ஆணையக் காலத்தில் 7.931% எனவும், 12ஆவது நிதி ஆணையக் காலத்தில் 5.305% எனவும் இருந்த தமிழ்நாட்டுக்கான நிதிப் பகிர்வு, தற்போது 4.079% என்கிற அளவில் சுருங்கிவிட்டது.
  • தமிழ்நாடு மத்திய அரசுக்குச் செலுத்தும் ரூ.1இல் 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது என்று திமுக அரசு பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. மத்திய அரசு மேல்வரி, கூடுதல் வரி ஆகியவற்றை வசூலித்தாலும், அவற்றை நிதிப் பகிர்வு செய்வதில்லை. அதையும் நிதிப் பகிர்வு செய்வதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதி ஆணையக் குழு வழங்க வேண்டும்.
  • வளர்ச்சி அடைந்த மாநிலங்களிலிருந்து திரட்டப்படும் வரி வருவாயை வளர்ச்சி அடையாத மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில், வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பாதிக்கப்படும் வகையில் அது அமையக் கூடாது. அதற்கேற்ப 16ஆவது நிதி ஆணையக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories