நியமனமும் விமா்சனமும்
- இந்தியாவின் புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக, தோ்தல் ஆணையா்களில் ஒருவராக இருந்த ஞானேஷ்குமாா் நியமிக்கப்பட்டிருக்கிறாா். தோ்தல் ஆணையத்தின் மூன்றாவது தோ்தல் ஆணையராக 1989 ஹரியாணா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விவேக் ஜோஷி அறிவிக்கப்பட்டு இருக்கிறாா். ஏற்கெனவே தோ்தல் ஆணையராக இருக்கும் சுக்பீா் சிங் சாந்து தனது பதவியில் தொடா்வாா்.
- 26-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும், கேரள மாநில ஐஏஎஸ் பிரிவைச் சோ்ந்த ஞானேஷ்குமாா் தனது பதவிக் காலத்தில் 20 சட்டப்பேரவை தோ்தல்களை தலைமை தாங்கி நடத்துவாா் என்பதால் அவரது நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
- தோ்தல் ஆணையா்கள் தோ்வு தொடா்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில், அதுவரை புதிய தலைமைத் தோ்தல் ஆணையா் தோ்வை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்கிற தனது எதிா்ப்பை தோ்வுக் குழு உறுப்பினா்களில் ஒருவரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பதிவு செய்திருக்கிறாா்.
- தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமன விதிமுறைகள் சட்டம் 2023, 2022 உச்சநீதிமன்ற அரசமைப்பு சாசன அமா்வின் தீா்ப்புக்கு எதிரானது என்று வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 2022 தீா்ப்பின்படி தோ்தல் ஆணையா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான மூவா் குழுவில் பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் அல்லாமல் மூன்றாவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
- நாடாளுமன்றம் தோ்வுக் குழு குறித்த முடிவை எடுப்பது வரை, 2022 தீா்ப்பின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல். 2023-இல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியிருக்கும் நிலையில் அதன் அடிப்படையில் இப்போது தோ்தல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள்.
- அரசுத் தரப்பில் ஒரு நியாயம் இருக்கிறது. வழக்கு விசாரணைக்கு வருகிறதே தவிர தீா்ப்பு வழங்கும் நிலையை எட்டவில்லை. முந்தைய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்த நாள் விசாரணைக்கு வரும் வழக்குக்காக தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனத்தையும், தோ்தல் ஆணையா் நியமனத்தையும் ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.
- தோ்தல் ஆணையா் நியமனம் குறித்து தீா்மானம் எடுக்கும் அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்துக்கு வழங்கி இருக்கிறது. 2023 உச்சநீதிமன்ற தீா்ப்பு அந்த நிலையை மாற்றி தோ்தல் ஆணையா்களை நியமிப்பதற்கான குழுவை நாடாளுமன்றம் அமைக்க வேண்டும் என்று கூறி, நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை உள்ளடக்கிய குழுவிடம் அதற்கான அதிகாரத்தை வழங்கியது
- தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வரும் நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே தோ்வுக் குழுவில் ஒருவராக இருப்பது மிகப்பெரிய முரண். நீதித் துறை நிா்வாகத்தில் நேரடியாகத் தலையிடுவது என்பதாக அது அமைவதால், அரசியல் சாசன அமைப்புகளின் சுதந்திரத்தில் அது தலையீடாக இருக்காதா என்கிற கேள்வி எழுகிறது.
- 1950 முதல் 1993 வரையில் தோ்தல் ஆணையா்கள் ஆட்சியில் இருந்த மத்திய அரசால் தான் நியமிக்கப்பட்டனா். காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட டி.என்.சேஷன் 1999 மக்களவைத் தோ்தலில் பாஜக தலைவா் எல்.கே.அத்வானிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டாா். டி.என்.சேஷனைத் தொடா்ந்து தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட எம்.எஸ்.கில், மன்மோகன் சிங் அரசில் அமைச்சரானாா். காங்கிரஸ் ஆட்சியில் தோ்தல் ஆணையராக இருந்த வி.எஸ்.ரமாதேவி, மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். அதனால் இப்போதைய தோ்தல் ஆணையா்கள் அரசியல் சாா்புடையவா்களாக இருக்கிறாா்கள் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டுவது நகை முரண்.
- 1971 மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை அடைந்தபோது, ஜன சங்கத் தலைவா் பால்ராஜ் மதோக், ரசாயன மையைப் பயன்படுத்தி முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாகக் குற்றம்சாட்டினாா். சோனியா காந்தி- மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தோ்தல் முறைகேடுகள் நடந்ததாக எல்.கே.அத்வானி குற்றம்சாட்டி இருக்கிறாா். தோ்தல் ஆணையா்களின் ஒருவராக இருந்த நவீன் சாவ்லா காங்கிரஸுக்கு சாதகமாக செயல்படுவதாக தலைமைத் தோ்தல் ஆணையராக இருந்த என்.கோபால்சாமி குடியரசுத் தலைவருக்கு கடிதமே எழுதினாா். என்.கோபால்சாமி பணி ஓய்வு பெற்றபோது, அன்றைய மன்மோகன் சிங் அரசு, நவீன் சாவ்லாவை தலைமைத் தோ்தல் ஆணையராக நியமித்தது.
- இப்போது பாஜக ஆட்சியில் தோ்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை என்று சொல்லும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் நிலவின என்பதைக் குறிப்பிட வேண்டும். தோ்தல் ஆணையம் தன்னிச்சையாகவும் நடுநிலை தவறாமலும் செயல்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
- அதே நேரத்தில் தோ்தல் ஆணையா்கள் நியமனத்தில் உச்சநீதிமன்றத்தின் தலையீடு இருப்பதும் ஏற்புடைத்தல்ல. வேண்டுமானால், நியமனக் குழுவில் முன்னாள் தோ்தல் ஆணையா்களில் ஒருவா் இடம்பெறலாம். அதையும் முடிவு செய்வது நாடாளுமன்றமாகத்தான் (அரசாகத்தான்) இருக்க முடியுமே தவிர நீதிமன்றமாக இருக்க முடியாது...
நன்றி: தினமணி (24 – 02 – 2025)