நியாயமான எதிர்ப்பு!
- நிகழ் காரீஃப் பருவத்தில் (2024-25) தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நெல் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல் கொள்முதலை, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் மத்திய அரசின் அங்கமான தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் மேற்கொள்ள அனுமதி அளிப்பது, தனியார் பெருநிறுவனங்கள் புகுந்துவிட வழிவகுக்கும் என்பதுதான் விவசாயிகளின் எதிர்ப்புக்குக் காரணம்.
- தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி உற்பத்திக்குத் தேவையான சுமார் 37.5 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை, மத்திய அரசின் உணவுக் கழகத்தின் சார்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆண்டுதோறும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறது. அவ்வாறு கொள்முதல் செய்யும் நெல்லை வாணிபக் கழகத்துக்கு சொந்தமான நவீன அரிசி ஆலைகள் மற்றும் தனியார் ஆலைகள் மூலம் அரிசியாக்கி கிடங்குகளில் சேமித்து வைத்துக் கொண்டு மத்திய அரசின் தமிழக ஒதுக்கீட்டுக்கான கணக்கில் நேர் செய்து பயன்படுத்தி வருகிறது.
- இந்த அனுமதியின்மூலம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்தில் பதிவுபெற்ற தனி நபர்களின் பெருநிறுவனங்கள் கொள்முதலை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். எதிர்காலத்தில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும் என்பது விவசாயிகளின் அச்சம். தமிழக அரசு, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையோடு (குவிண்டாலுக்கு சாதாரண ரகம்-ரூ.2,300, சன்ன ரகம்-ரூ.2,320) கூடுதலாக அளித்து வரும் ஊக்கத் தொகை யையும் (சாதாரண ரகம்-ரூ. 105, சன்ன ரகம்- ரூ. 130) நிறுத்திவி டும் வாய்ப்பும் இருக்கிறது.
- தமிழகம் முழுவதும் நெல் அறுவடைக் காலங்களில் தேவைக்கேற்ப சுமார் 2,500-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். இந்த நிலையங்களுக்குத் தேவையான நபர்கள், உலர் களம், எடை இயந்திரம், ஈரப்பதத்தை அளவிடும் கருவி உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கிறது. நெல் கொள்முதலுக்கான நிதியையும் அரசே வழங்குகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணமானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
- புதிய திட்டத்தின்படி, தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்தின் மூலம் கொள்முதல் நிலையங்களுக்குள் நுழையும் தனியார் நிறுவனங்கள் எவ்வித முதலீடும் இல்லாமல் மாநில அரசின் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் பயன்படுத்தி பெருமளவு நெல்லை கொள்முதல் செய்வர். அரசுக்கு அளிக்க வேண்டியதை அளித்துவிட்டு எஞ்சியவற்றை அவர்களது கிடங்குகளில் சேமித்து வைத்துக் கொண்டு சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு விற்று பெருத்த ஆதாயம் தேட இந்த திட்டம் வழிவகுக்கக்கூடும்.
- ஈரப்பதத்தின் அளவு, வயல்வெளிகளிலிருந்து கொள்முதல் நிலையங்களுக்கான போக்குவரத்து செலவு, கொள்முதல் நிலையங்களில் விரைவாக கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்பது, கூடுதல் எடை, வியாபாரிகளுக்கு முன்னுரிமை, காத்துக்கிடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் செல்ல முடியாத விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
- கடந்த காரீஃப் ஆண்டில் (2023-2024) அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் (2022-2023) 44.22 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் கொள்முதல் குறைவுக்கு காரணம், விவசாயிகள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்னைகள்தான்.
- விவசாயிகள் நாடுதழுவிய அளவில் இரண்டு முறை ஆண்டுக்கணக்கில் போராட்டம் நடத்தியும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு இன்னமும் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை முடிந்தபாடில்லை. இந்த சூழ்நிலையில், இப்போதுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களும் தனியார்வசம் சென்றுவிட்டால் அவர்கள் தங்களுக்குள் சிண்டிகேட் ஏற்படுத்தி விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்பட்டால் அது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
- எனவே, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தனியார் பெருநிறுவனங்கள் புகுந்துவிட வழிவகுக்கும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணைய கொள்முதலைக் கைவிட வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமே தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யவும், கொள்முதல் நிலையங்களில் நிலவும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்துவதுடன், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் ஆவன செய்ய வேண்டும்.
- அரசின் நேரடி கொள்முதல் முறையில் முறைகேடுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதிகாரிகளின் லஞ்சம், ஈரப்பதம் அதிகமான, தரம் குறைந்த நெல்லை கொள்முதல் செய்வது உள்ளிட்டவை நிலவுகின்றன. அவை களையப்பட வேண்டும். ஆனால், அதற்கான தீர்வு தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணைய கொள்முதல் அல்ல!
நன்றி: தினமணி (18 – 02 – 2025)