TNPSC Thervupettagam

நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?

March 15 , 2025 1 hrs 0 min 5 0
  • சிகரெட், பீடி, மது... இவற்றுக்கு மட்டும்தான் இதயத்தோடு தொடர்பு இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம் உடல் எடைக்கும் இதயத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. பெற்றோரிடம் பொதுவான ஒரு குணம் உண்டு. குழந்தைகள் ஒல்லியாக இருந்தால், “டானிக் எழுதிக் கொடுங்க, டாக்டர். சீக்கிரம் உடம்பு வைக்கணும்” என்று டாக்டர்களிடம் ஓடிவருவார்கள்.
  • “நோய் எதுவும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் போதும்; குண்டாக இருக்க வேண்டும் என்பதில்லை” என்று டாக்டர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஊடக விளம்பரங்களில் வரும் குழந்தை களைப் போன்று தங்கள் குழந்தைகளும் குண்டு குண்டாக இருந்தால்தான் அழகு, ஆரோக்கியம்!
  • அதே பெற்றோர், குழந்தை பருவ வயதுக்கு வந்த பிறகு ஒல்லியாகிவிட வேண்டும் என்பார்கள். “என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான், டாக்டர். எப்பவும் எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கான். ஏதாவது மருந்து கொடுத்து உடம்பைக் குறைங்க” என்று மறுபடி டாக்டரிடம் வருவார்கள்.
  • அதிலும் பெண் குழந்தையாக இருந்தால் இந்தப் பரபரப்பு அதிகமாகிவிடும். குழந்தை குண்டாக இருப்பதால் வரக்கூடிய திருமணத் தடை, கேலி, கிண்டல் போன்ற சமூகக் கவலைகள் பெற்றோருக்கு அதிகரித்துவிடும். அதேநேரம், உடல் எடை அதிக மானால் சமூகக் கவலைகளைத் தாண்டி மருத்துவரீதியாகக் கவலைப் படுவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

மறந்துபோகும் திசுக்கொழுப்பு:

  • மை இல்லாமல் பேனாவால் எழுத முடியாது. அது மாதிரிதான், கொழுப்பு இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அதேநேரம், வெள்ளைத்தாளில் பேனாமை கொட்டிவிட்டால் பார்க்கச் சகிக்காது. அது மாதிரிதான், கொழுப்பின் அளவு கூடினாலும் அது தரும் ஆரோக்கிய ஆபத்துகளைத் தடுக்க முடியாது. கொழுப்பு என்றதும் வயிற்றுக் கொழுப்புதான் நம் நினைவுக்கு வருகிறது.
  • உள்ளுறுப்பு களில் உறவாடிக்கொண் டிருக்கும் உறுப்புக் கொழுப்பு அல்லது திசுக் கொழுப்பை (Visceral fat) மறந்து விடுகிறோம். குறிப்பாக, இரைப்பை, குடல், கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளைச் சுற்றித் தேவையில்லாமல் படர்ந்திருக்கிற திசுக்கொழுப்பும் நமக்கு எதிரிதான் என்ப தைப் புரிந்துகொள்ளத் தவறு கிறோம்.

கொழுப்பைச் சுமப்பவர் யார்?

  • உடலில் கொழுப்பு கூடுகட்டு வதைப் பொறுத்து நம் உடல் அமைப்பை ‘Apple, pear, inverted triangle, ruler, hour-glass’ என ஐந்து வகையாகப் பிரிக்கிறது நவீன மருத்துவம். இவற்றில் நான் காவது வகையினர்தான் (Ruler) சரியான உடல் அமைப்பைப் பெற்றவர்கள்; தலையிலிருந்து பாதம்வரை அளவெடுத்து வடித்த சிலை மாதிரி இருப்ப வர்கள். அதாவது, தேவை இல்லாமல் கொழுப்பைச் சுமக்காதவர்கள். மற்றவர்கள் எல் லாரும் ஏதோ ஒரு வகையில் உடலில் கொழுப்பைச் சுமப்பவர்கள்தான் (Obesity). இவர்களில்கூடக் கொழுப்பை வயிற்றில் சுமக்கிறார்களா, இடுப்பில் சுமக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.
  • ஏனெனில், இடுப்பில் கொழுப்பு சேருகிறவர்களுக்குத்தான் இதய நோய்க்கும் சர்க்கரை நோய்க்கும் அதிகச் சாத்தியம் இருப்பதாகச் சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ‘இடுப்பின் அளவு அதிகரித் தால் வாழும் நாள் குறைந்துவிடும்’ (Increase in waist line will decrease the life line) என்கின்றன இந்த ஆய்வுகள். இதனால்தான் இப்போ தெல்லாம் “வயிற்றில் சேரும் கொழுப்பை மட்டும் பார்க்காதீர்கள்; உங்கள் இடுப்பின் அளவையும் கவனி யுங்கள்” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

உங்கள் எடை சரியா?

  • மருத்துவத்துறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் உயரத்துக்கு இருக்க வேண்டிய சராசரி எடை அளவு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு கணக்கு இருக்கிறது: ஆண்களுக்கு: உயரம் செ.மீட்ட ரில் மைனஸ் 100. பெண்களுக்கு: உயரம் செ.மீட்டரில் மைனஸ் 105. உதாரணமாக, நீங்கள் ஆணாக இருந்தால், உங்கள் உயரம் 157 செ.மீ. என்றால், அதிலிருந்து 100ஐக் கழியுங்கள். 57 கிலோ கிராம் என்பது உங்கள் சராசரி உடல் எடை. இதில் 20% எடை அதிகமாக இருந்தால் அதை ‘உடல் பருமன்’ என்கிறோம்.

எது உடல் பருமன்?

  • ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை சரியாக இருக்கிறதா என்று தெரிவிப்பதற்கு மூன்றெழுத்துச் சமன்பாடு ஒன்றும் இருக்கிறது. அது தான் ‘பிஎம்ஐ’ (BMI - Body Mass Index). அதாவது, உடல் திண்மக் குறியீடு. பிஎம்ஐ = உடல் எடை (கிலோ கிராமில்) / உயரம் 2 (மீட்டரில்). உலக சுகாதார நிறுவனத்தின் புதிய வழிகாட்டுதலின்படி, இந்தியர்களுக்கு ‘பிஎம்ஐ’ அளவு 23-24.9க்குள் இருந் தால், அது அதிக உடல் எடை (Over weight); 25க்கும் அதிகமாக இருந் தால், அது உடல் பருமன் (Obesity). ஆனால், உடல் பருமனை இப்படிக் கணிப்பது துல்லியமானதா என்பது இப்போது விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

ஏன்? என்ன காரணம்?

  • ஒருவருடைய ‘பிஎம்ஐ’ அளவானது, அவருடைய தசை எடை எவ்வளவு, திசுக்கொழுப்பு எவ்வளவு என்பதைத் தெரிவிப்ப தில்லை. உதாரணமாக, எடை தூக்கும் வீரருக்கு அதிக எடை இருந்தால், அதற்கு அவரது கட்டுக்கோப்பான தசைகள் காரணமாகலாம்; திசுக்கொழுப்பு காரணமாகச் சாத்திய மில்லை. இன்னொன்று, ‘பிஎம்ஐ’ அளவு சரியாகவே இருக்கிறவர்களுக்கும் திசுக்கொழுப்பு கூடுதலாக இருக்கச் சாத்தியம் இருக் கிறது.ஒருவர் உடலில் 10% திசுக்கொழுப்பு இருப்பது இயல்பு.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) 2023இல் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒல்லியாகவும் இருந்து, ‘பிஎம்ஐ’ ஆரோக்கிய வரம்புக்குள் இருந்த பலருக்கும் திசுக்கொழுப்பு 20%க்கும் கூடுதலாக இருப்பது தெரிந்தது. இப்படி இருப்ப வர்களுக்கு ‘டோஃபி’ (TOFI) என்று தனிப்பெயர் உண்டு. அதாவது, Thin Outside and Fat Inside. இப்படி ஒல்லியாக இருப்பவர்கள், தங்கள் ‘பிஎம்ஐ’ அளவு சரியாக இருந்தாலும், உடல் பருமன் உள்ளவர்கள்போலவே இதய ஆரோக்கியம் காப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறது அந்த ஆராய்ச்சி.

கவனம் கோரும் ஒல்லி உடம்பு:

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவை உறுதிப்படுத்தும் விதமாக என்னிடம் வந்தவர் 50 வயதுள்ள மந்திர மூர்த்தி. அவர் ஒல்லி யாக இருப்பதால் உடலில் திசுக்கொழுப்பு சேரவும், இதயப் பிரச்சினைகள் ஏற்படவும் தனக்குச் சாத்தியம் இல்லை என்று நம்பினார். அதனால், அவரது வயதுக்குத் தேவையான உடல் பரிசோதனை எதையும் செய்துகொள்ளவில்லை. ஒரு நாள், நடு நெஞ்சில் வலிக்கிறது என்று என்னிடம் வந்தார் மந்திரமூர்த்தி. ‘இசிஜி’ எடுத்துப் பார்த்தேன். மாரடைப்பு பாதிப்பு அதில் தெரிந்தது. மற்ற பரிசோதனைகளையும் பார்க்கச் சொன்னேன். அவருக்கு ‘பிஎம்ஐ’ அளவு 22.
  • இது இயல்பான அளவுதான். ஆனால், இடுப்புச் சுற்றளவு அதிகமாக இருந்தது. ரத்தப் பரிசோதனைகளில் அவருக்குச் சர்க்கரை நோய் இருந்தது; கெட்ட கொலஸ்டிரால் (LDL) கூடியிருந்தது; நல்ல கொலஸ்டிரால் (HDL) குறைவாக இருந்தது. ரத்த அழுத்தமும் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. ஆக மொத்தத்தில், ஒல்லி யாக இருந்த மந்திரமூர்த்தி தன்னுடைய உடலைக் கவனிக்கத் தவறியதால், உடலுக்குள் பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை உணரத் தவறிவிட்டார். இதன் விளைவால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
  • சரியான நேரத்தில் கிடைத்த சிகிச்சையில் அவர் உயிர் பிழைத்தார். “ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கொழுப்புத்தன்மை இருக்கும்; கொலஸ்டிரால் கூடும்; சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை வரக்கூடும்; இதயம் பழுதாகிற சாத்தியமும் உண்டு” என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மந்திரமூர்த்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.

சரியான இடுப்புச் சுற்றளவு:

  • உடல் பருமனை நிர்ணயிப்பதில் ‘பிஎம்ஐ’ பிரச்சினை ஆனதால், இப்போது இடுப்புச் சுற்றளவைக் (Waist circumference) கணிப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த அளவுக் கும் வயிற்றுக் கொழுப்பு, உறுப்புக் கொழுப்பின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
  • ஆகவே, இனிமேல் ‘பிஎம்ஐ’ அளவோடு இடுப்புச் சுற்றளவையும் கவனிப்பது அவசியமாகிறது. ஆண்களுக்குச் சரியான இடுப்புச் சுற்றளவு 90 செ.மீ. பெண்களுக்கு இந்த அளவு 80 செ.மீ. இந்த அளவைத் தாண்டுபவர்களையும் உடல் பருமன் உள்ளவர்களாகவே கருத வேண்டும். இன்னும் சொன்னால், இவர்கள் இதய பாதிப்பு, சர்க்கரைநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

இன்னும் 3 அளவுகள்!

  • ‘பிஆர்ஐ’ (BRI – Body Roundness Index): உங்கள் உயரம், எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவற்றை, இணையத்தில் இதற் கென உள்ள கால்குலேட்டரில் பதிவேற்றினால், ‘பிஆர்ஐ’ அளவைக் காண் பிக்கும். இது 4.45 - 5.46க்குள் இருக்க வேண்டும். இது 10ஐத் தாண்டினால் உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய பாதிப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்குச் சாத்தியம் உண்டு.
  • ‘பிசிஏ’ (BCA – Body Composition Analysis): எடை பார்க்கும் இயந்திரம் போன்று இருக்கும் இந்த இயந்திரத்தின் மீது நீங்கள் ஏறி நின்றால், உங்கள் உடலுக்குள் இருக்கும் உறுப்புக் கொழுப்பு, தசைக் கொழுப்பு, வயிற்றுக் கொழுப்பு எனத் தனித்தனியாகத் திசுக் கொழுப்பின் அளவைச் சொல்லிவிடும்.
  • வயிற்றுப் பகுதி எம்ஆர்ஐ (MRI) பரிசோதனை யிலும் வயிற்றுக் கொழுப்பின் அளவை அறியலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories