TNPSC Thervupettagam

நீர்ப்பாசன வளர்ச்சியில் தமிழ்நாடு ஏன் பின்தங்கியுள்ளது?

August 30 , 2024 5 hrs 0 min 13 0

நீர்ப்பாசன வளர்ச்சியில் தமிழ்நாடு ஏன் பின்தங்கியுள்ளது?

  • இன்றைய சூழலில் நிரந்தர நீர்ப்​பாசனம் இல்லாமல் பயிர் சாகுபடி செய்வது கடினம். நிலத்தின் பயன்பாட்டுத் திறன், பயிர் சாகுபடிச் செறிவு ஆகியவற்றை அதிகரிப்பது மட்டுமல்​லாமல், பயிர்​களுக்குத் தேவையான இடுபொருள்​களின் உபயோகத்தை அதிகரித்து, பயிர்​களின் மகசூலை அதிகரிப்​ப​தற்கும் நீர்ப்​பாசனம் மிகவும் முக்கியம்.
  • நிலமற்ற விவசாயத் தொழிலா​ளர்​களின் கூலி விகிதம், வேலைவாய்ப்பை அதிகரித்து, கிராமப்புற வறுமையைக் குறைப்​ப​தற்கும் நீர்ப்​பாசனம் பெரிதும் உதவுகிறது. இந்தியாவின் நீர்ப்​பாசனப் பரப்பளவு தொடர்ந்து வளர்ச்​சிபெறும் அதே வேளையில், தமிழ்​நாட்டில் அதன் நிகர வளர்ச்சி முடங்கிக் கிடக்​கிறது. என்ன காரணம்​?

உண்மை நிலவரம்:

  • நீர்ப்​பாசனப் பரப்பளவில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக அறுபது - எழுபதுகளில் தமிழ்நாடு விளங்​கியது. 1960-61இல் இந்தியாவின் மொத்த நீர்ப்​பாசனப் பரப்பில் ஏறக்குறைய 11.56 சதவீதத்தைத் தமிழ்நாடு வைத்திருந்தது. ஆனால், நீர்ப்பாசன வளர்ச்​சிக்குத் தேவையான முதலீடு​களைச் செய்து முக்கி​யத்துவம் கொடுக்காத காரணத்​தால், தமிழ்​நாட்டின் பங்கு தொடர்ந்து குறைந்து, 2021-22இல் வெறும் 3.24%ஆக உள்ளது.
  • ஒப்பீட்டு அளவில் மட்டுமல்​லாமல், மொத்த நீர்ப்​பாசனப் பரப்பள​விலும் எந்த ஒரு வளர்ச்​சியும் பெறாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உதாரணமாக, 1960-61இல் 32.35 லட்சம் ஹெக்டேராக இருந்த தமிழ்​நாட்டின் நீர்ப்​பாசனப் பரப்பளவு, 2021-22இல் 38.94 லட்சம் ஹெக்டேராக மட்டுமே உயர்ந்​துள்ளது.
  • இதே காலக்​கட்​டத்​தில், கர்நாடகத்தில் நீர்ப்​பாசனப் பரப்பளவு வெறும் 9.77 லட்சம் ஹெக்டேரிலிருந்து 60.85 லட்சம் ஹெக்டேராக​வும், ஆந்திரத்தில் 34.72 லட்சம் ஹெக்டேரிலிருந்து 95.03 லட்சம் ஹெக்டேராகவும் அதிகரித்​துள்ளது. இந்தக் காலக்​கட்​டத்​தில், மொத்த நீர்ப்​பாசனப் பரப்பளவின் வளர்ச்சி விகிதத்தில் வளர்ச்சியே காணாத ஒரே மாநிலம் தமிழ்​நாடு​தான்!
  • பெரும்​பாலான வட மாநிலங்கள், கால்வாய் - நிலத்தடி நீர்ப்​பாசனத்தையே பெரும்​பாலும் நம்பி​யுள்ளன. ஆனால், தமிழ்​நாட்டில் குளம், கால்வாய், நிலத்​தடிநீர் ஆகிய மூன்று ஆதாரங்கள் மூலமாகவே நீர்ப்​பாசனம் பல காலமாக நடைபெற்று​வரு​கிறது. இதில் குளம், கால்வாய் மூலமாகச் செய்யப்​படும் பாசனப் பரப்பளவு கடுமை​யாகக் குறைந்​துள்ளது.
  • கடந்த 30 ஆண்டு​களுக்கும் மேலாக நீர்ப்​பாசனத்​துக்கு உயிர்​நாடியாக உள்ள நிலத்தடி நீர்ப்​பாசனப் பரப்பளவு 5.98 லட்சம் ஹெக்டேரிலிருந்து 18.31 லட்சம் ஹெக்டேராக வளர்ச்சி பெற்ற​போ​தி​லும், குளம் - கால்வாய் நீர்ப்​பாசனத்தில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்​சியால் நீர்ப்​பாசனப் பரப்பளவில் வளர்ச்சி ஏற்பட​வில்லை.
  • இதே காலக்​கட்​டத்தில் கர்நாடகம், ஆந்திர மாநிலங்​களும் குளத்துப் பாசனப் பரப்பில் வீழ்ச்​சியைச் சந்தித்தன. இருந்த​போ​தி​லும், கால்வாய் - நிலத்தடி நீர்ப்​பாசனப் பரப்பளவில் ஏற்பட்ட அதீத வளர்ச்​சியால் மொத்த நீர்ப்​பாசனப் பரப்பளவில் பெரிய வளர்ச்சியை இம்மாநிலங்கள் அடைந்​து​விட்டன.
  • மேலும், மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம் 2020இல் வெளியிட்​டுள்ள புள்ளி​விவரப்படி, தமிழ்​நாட்டில் மொத்த​முள்ள 1,166 வட்டங்​களில், 723 வட்டங்​களில் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்​சப்​படு​வ​தால், நிலத்தடி நீர் மூலம் கிடைக்கும் பாசனப் பரப்பளவின் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது.
  • தமிழ்​நாட்டின் விவசாயத் துறையில் பல விரும்பத்தகாத மாற்றங்கள் மேற்கண்ட அம்சங்கள் காரணமாக நடைபெற்றுள்ளன. ஒன்று, 1970-71இல் 61.69 லட்சம் ஹெக்டேராக இருந்த நிகர சாகுபடிப் பரப்பளவு, 2021-22இல் 49.09 லட்சம் ஹெக்டேராகக் குறைந்​து​விட்டது. வேறு எந்த மாநிலத்​திலும் இப்படி நிகழவில்லை.
  • இரண்டு, இக்காலக்​கட்​டத்​தில், தரிசுநிலப் பரப்பளவானது 15.38 லட்சம் ஹெக்டேரிலிருந்து 26.64 லட்சம் ஹெக்டேராக அதிகரித்​துள்ளது. ஒப்பீட்​டள​வில், தமிழ்​நாட்டில் ஏற்பட்​டுள்ள தரிசுநில அதிகரிப்பு (73.22%) மொத்த இந்தியாவில் (20.05%) ஏற்பட்​டுள்ள அதிகரிப்​பைவிட மிகவும் அதிகம்.
  • மூன்று, குறைந்த செலவில் பெறக்​கூடிய குளம், கால்வாய் நீர்ப்பாசன அளவு குறைவால், அதிகச் செலவு பிடிக்கும் நிலத்தடி நீரைக் கொண்டு பயிர் சாகுபடி செய்வ​தால், தமிழக விவசா​யிகளின் வருமானம் மற்ற மாநிலங்​களோடு ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. உதாரணமாக, தேசியப் புள்ளி​யியல் அலுவலகம் 2021இல் வெளியிட்​டுள்ள இந்திய வேளாண் குடும்​பங்கள் பற்றிய நிலை மதிப்பீடு 2018-19 அறிக்கை​யின்படி, பயிர் சாகுபடியில் வெறும் ரூ.2,129 மாத வருமானத்​துடன் தமிழ்நாடு 23ஆவது இடத்தில் உள்ளது.

செய்ய வேண்டியவை:

  • நீர்ப்​பாசனக் குறைவு உணவு உற்பத்​தியைக் குறைத்து, கிராமங்​களில் வேலையிழப்பை ஏற்படுத்தி, கிராம மக்கள் வேலை தேடி நகரங்​களுக்குச் செல்வதாக மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்​களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, காலநிலை மாற்றத்தால் உயர்ந்​து​வரும் நீர்த்​தேவை​களைக் கருத்தில் கொண்டு, நீர்ப்​பாசனப் பரப்பளவை அதிகரிக்கத் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி​யுள்ளது.
  • முதலா​வதாக, மத்திய நீர் வாரியத்தின் மதிப்​பீட்​டின்படி தமிழ்​நாட்டின் பயன்படுத்​தக்​கூடிய மொத்த நீர்ப்​பாசனப் பரப்பளவு 55.32 லட்சம் ஹெக்டேர். இதில் ஏறக்குறைய 30% பயன்படுத்​தப்​படாமல் உள்ளது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, நீர்ப்​பாசனப் பயன்பாட்டுத் திறமையை அதிகரிக்க வேண்டும்.
  • இரண்டாவதாக, தமிழ்​நாட்டில் மொத்த​முள்ள 41,127 குளங்​களில் நீர்க் கொள்ளளவு 347 டிஎம்சி; இது தமிழ்​நாட்டின் அனைத்து அணைகளின் மொத்த நீர்க்​கொள்​ளளவைவிட அதிகம். ஆனால், கடந்த 1960-61 முதல் 2021-22 வரையிலான காலக்​கட்​டத்தில் ஏறக்குறைய 5.26 லட்சம் குளத்துப் பாசனப் பரப்பளவு காணாமல் போய்விட்டது.
  • மழைக் குறைவே இதற்குக் காரணம் எனச் சொல்வதில் உண்மை​யில்லை. நீர் வளத்துக்கான மத்திய அரசின் நிலைக்​குழுவின் 16ஆவது அறிக்கை​யும், 2023இல் மத்திய நீர்வள அமைச்​சகத்தால் முதல் முறையாக வெளியிடப்​பட்​டுள்ள நீர்நிலைகள் பற்றிய முதல் மொத்தக் கணக்கெடுப்பும், அதிக ஆக்கிரமிப்பு​களாலும், சரியான பராமரிப்​பின்​மை​யாலும், குளத்துப் பாசனம் குறைந்​து​வரு​வ​தாகக் கூறுகின்றன. குளங்​களைப் பற்றிக் கவலை கொள்ளாத பொதுப்​பணித் துறையின் கட்டுப்​பாட்​டிலிருந்து குளங்களை எடுத்து, குளங்​களுக்கான தனி மேலாண்மை வாரியம் அமைத்து, அவற்றின் பாசனப் பரப்பளவை அதிகரிக்கத் திட்டங்கள் தேவை.

தேவை சொட்டுநீர்ப் பாசனம்:

  • தமிழ்​நாட்டின் தற்போதைய நிகர நீர்ப்​பாசனப் பரப்பளவான 29.25 லட்சம் ஹெக்டேரில், ஏறக்குறைய 63% நிலத்​தடிநீர் மூலம் பாசனம் பெறுகிறது. கடந்த 30 ஆண்டு​களாக, நிலத்தடி நீரின் பங்களிப்பு மொத்த நீர்ப்​பாசனப் பரப்பளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்​தால், நிலத்தடி நீர்ப்​பாசனப் பரப்பளவு கடுமை​யாகக் குறையக்​கூடும். இதைத் தடுப்​பதுடன், இப்பகு​தி​களில் தண்ணீர்த் தேவையைக் குறைக்கச் சொட்டு - தெளிப்பு நீர்ப்பாசன முறையையும் கட்டாயப்​படுத்த வேண்டும்.
  • விவசா​யிகளுக்குக் கொடுக்​கப்​படும் மின்சார நேர அளவை வரைமுறைப்​படுத்துவதோடு, 10 ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள பெரிய விவசா​யிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதை நிறுத்துவதன் மூலம், நிலத்தடி நீர்ச் சுரண்​டலைக் குறைக்க முடியும்.
  • பொதுவாக, கால்வாய்ப் பாசனத்தில் நீர்ப் பயன்பாட்டுத் திறன் மிகவும் குறைவு. நீர்க் கணக்கீட்டு முறையைக் கால்வாய்ப் பாசனத்தில் கொண்டு​வருவதன் மூலம், நீர்ப் பயன்பாட்டுத் திறனை அதிகரித்து, நீர்ப்​பாசனப் பரப்பளவை உயர்த்த முடியும். அதிக அணைகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரம் இதை உறுதிப்​படுத்​தி​யுள்ளது.
  • தமிழ்​நாட்டின் அனைத்துக் கால்வாய்ப் பாசனப் பகுதி​களி​லும், நீர்க் கணக்கீட்டு முறையை அமல்படுத்​தினால் பாசனப் பரப்பளவை அதிகரிக்க முடியும். நீர்ப்​பாசனத் துறையின் பொறுப்​புக்​கூறலை அதிகப்​படுத்து​வதற்கு, அரசுத் துறையைச் சாராத, நீர் மேலாண்மை குறித்து நன்கு அறிந்த அறிஞர்​களைக் கொண்டு நீர் ஒழுங்​குமுறை ஆணையம் அமைப்பது பலனளிக்​கும்.
  • நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் ஏற்படும் மண்ணரிப்​பால், அணைகளில் வண்டல் மண் படிந்து, நீர்க் கொள்ளளவு குறைந்து, பாசனப் பரப்பளவு குறைவதாக மத்திய நீர்வாரியம் 2020இல் வெளியிட்ட நீர்த்​தேக்​கங்​களின் வண்டல் மண் பற்றிய தொகுப்பு கூறியுள்ளது. புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கு​வதற்கான சாத்தி​யக்​ கூறுகள் குறைவாக உள்ள தமிழ்​நாட்டில் அணைகள் - பிற நீர் ஆதாரங்​களில் உள்ள வண்டல் மண்ணை அகற்ற சிறப்புக் கவனம் செலுத்​தப்பட வேண்டும்.
  • நீர்ப்பாசன வளர்ச்சி குறைந்​தால், அது விவசாயக் குடும்​பங்​களைப் பாதிக்​கும்; வேளாண் பொருள்​களின் உற்பத்தி குறைந்து, சந்தை விலை தாறுமாறாக உயர்ந்து, பணவீக்​கத்தை ஏற்படுத்​தி​விடும். கொள்கை வகுப்​பாளர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories