நெரிசல் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வழிகள்
- உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் நடந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் பலத்த காயமடைந்தனர். ஆன்மிக நிகழ்வுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய உத்தரப் பிரதேச அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. கும்பமேளா விபத்து குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொடரும் உயிரிழப்புகள்:
- உலகம் முழுவதும் ஆன்மிகம், இசை, விளையாட்டு போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் கூட்ட நெரிசல்களால் உயிரிழப்புகள் நேரிட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. 1896இல் மாஸ்கோவில் இரண்டாம் ஜார் நிக்கோலஸின் முடிசூட்டு விழாவில் 1,389 பேர் உயிரிழந்தனர்.
- 1903இல் சிகாகோவில் திரையரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 600 பேரும், 1954இல், அலகாபாத் (தற்போதைய பிரயாக்ராஜ்) கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 800க்கும் மேற்பட்ட பக்தர்களும் உயிரிழந்தனர். 1964இல் பெரு நாட்டின் லிமாவில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியின்போது 330 பேரும், 2015இல் சௌதி அரேபியாவின் மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 2,400 பேரும் உயிரிழந்தனர்.
- அறிவியல் காட்டும் வழி: வளர்ந்த நாடுகளிலும் கூட்ட நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாத நிலையிலேயே உள்ளன. எனினும், லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் ஏற்படும் நெரிசலைச் சரியான அறிவியல் வழிகாட்டுதல்கள் மூலம் தவிர்க்க முடியும் என்கிறார் ஓக்லஹாமா பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர் டிரேசி ஹ்ரெஸ்கோ பேர்ல் (Tracy Hresko Pearl).
- ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும்போது ஏற்படும் கூட்ட நெரிசல் ஆபத்தானது; அச்சம் தரக் கூடியது. அதேநேரத்தில், அறிவியல் ரீதியாக இந்தக் கூட்ட நெரிசல் நிகழ்வுகளை அணுகினால் - பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகளை எளிதில் தடுப்பதற்கான வழிமுறைகள் புலப்படும்.
- ஒரு குறிப்பிட்ட இடத்தில், மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுகையில் அங்கு கூட்டத்தின் அடர்த்தி அதிகமாகிறது. இதன் காரணமாக விபத்து ஏற்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு சதுர மீட்டர் பரப்பில் 5 பேர் கூடும்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது; இந்த எண்ணிக்கை 6 - 7 என அதிகரிக்கும்போது அங்கு உயிரிழப்பும் காயமும் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரிப்பதாக அறிவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
- ஒரு சிறிய இடத்தில் அதிகப்படியான கூட்டம் கூடும்போது, கூட்டத்தின் அடர்த்தி அதிகரித்து ஆபத்தான சூழலில் முடிகிறது: உத்தரப் பிரதேச மகா கும்பமேளாவிலும், தடுப்புகளுக்குப் பின்னால் மக்கள் கூட்டம் அதிகரித்து விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பேராசிரியர் டிரேசி ஹ்ரெஸ்கோ பேர்ல் சுட்டிக்காட்டுகிறார்.
வணிக நோக்கம்:
- மக்கள் பெருவாரியாகக் கூடும் நிகழ்வை நடத்துகின்ற ஏற்பாட்டாளர்களும், அதிகாரிகளும் சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை; உலகம் முழுவதும் இதே நிலை தொடர்வதாகக் கூறும் டிரேசி, பார்வையாளர்களை அதிகம் அனுமதிக்கும் பின்னணியில் வணிக நோக்கமே முதன்மைக் காரணமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
- கூட்ட நெரிசல் விபத்துகளில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி போடும் போக்கும் நிலவுகிறது. ஒரு தனிநபரால் தன்னைச் சுற்றிக் கூடும் கூட்டத்தின் எண்ணிக்கையைக் கணிக்க முடிவதில்லை; அச்சூழலில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. இவ்வாறான சூழலில், கூட்டத்தின் மீது நாம் பழிபோட முடியாது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
தேசியப் பேரிடர் மேலாண்மை:
- கூட்ட நெரிசல் விபத்துகளுக்குப் பல காரணங்கள் உள்ளன. முறையான கட்டமைப்பு வசதி இன்மை, மோசமான பாதுகாப்புத் தடுப்புகள், குறைந்த வெளிச்சம், குறுகிய நுழைவுவாயில் / வெளியேறும் பாதை போன்றவை இதில் முதன்மையானவை. 2014இல் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், பொது இடங்களில் கூடும் கூட்டத்தை நிர்வகிப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
- ‘கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கூட்டத்தைக் கட்டுப்பாடோடு வைத்திருப்பது முதன்மையானது. மதக் கூட்டம் அல்லது பொது நிகழ்வுகளில் எதிர்பார்த்த கூட்டத்தைவிட அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களை அனுமதிக்கும்போது, கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதில் தவறு ஏற்படுகிறது. இவ்வாறான சூழலில், பார்வையாளர்கள் மனதில் உருவாகும் பயம் அல்லது மிகை உற்சாகம் விபத்துகளுக்கு வழிவகுக்கிறது’ எனத் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.
எப்படித் தடுக்கலாம்?
- ஒரு நிகழ்வில் அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடுவார்கள் என்றால், அந்த நிகழ்வைப் பாதுகாப்பாக நடத்த முறையான திட்டமிடலும் ஒத்திகைகளும் அவசியம். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சிகளை ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும்போது, விபத்து ஏற்படுவதற்கான பதற்றமான சூழலைக் குறைக்கலாம். கூட்டத்தினர் எளிமையாக வெளியேறும் வகையில் அதிக நுழைவாயில்களைத் திறக்கலாம்.
- ஒரே நேரத்தில் அனைவரையும் அனுமதிப்பதற்குப் பதிலாக வெவ்வேறு நேரத்தில் பிரித்துப் பிரித்து அனுமதிக்கலாம்; இதன் மூலம் ஒரே நேரத்தில் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடும் பதற்றமான சூழல் தவிர்க்கப்படும். மக்கள் பயணிக்கும் இடங்களில் ஞெகிழிக் குப்பையும், தேவையற்ற தடைகளும் அகற்றப்பட வேண்டும். கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, 100 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து அனுமதிக்கலாம். புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலினால் ஏற்படும் விபத்தைத் தவிர்க்க வளர்ந்த நாடுகளில் இம்முறையே பின்பற்றப்படுகிறது.
- விபத்தைத் தவிர்க்க, கூட்டத்தின் அடர்த்தியைச் சரியான அளவில் வைத்திருக்க வேண்டும். கூட்டத்தின் அடர்த்தியைக் கண்காணிக்க சிசிடிவி, ட்ரோன்கள், செயற்கைக்கோள் ஒளிப்படங்கள், சென்சார்களைப் பயன்படுத்தலாம். இவை விபத்து ஏற்படும் பதற்றமான இடங்களைக் கணிக்க உதவும். செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் மூலம் விபத்து ஏற்படுவதற்குச் சாத்தியமுள்ள இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம். ஒலிநாடா, ஒலிபெருக்கி மூலம் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை ஓரிடத்துக்கு வருவோருக்கு வழங்குவதன் மூலம் ஒரே இடத்தில் கூட்டம் சேர்வது தவிர்க்கப்படும்.
- மத வழிபாட்டு நிகழ்வுகளில் முறையான உள்கட்டமைப்பு வசதிகளையும்; பார்வையாளர்கள் செல்லும் பாதைகளில் ஓய்வு எடுப்பதற்கான இடம், உணவு, தண்ணீர், சுகாதார வசதிகள் போன்றவற்றையும் ஏற்படுத்துவது தேவையற்ற அச்சத்தை நீக்கும். குறிப்பாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மேம்பட்ட பயிற்சிகளை அதிகாரிகள், ஊழியர்களுக்கு மத்திய / மாநில அரசுகள் வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் இம்மாதிரியான விபத்துகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 02 – 2025)