பங்குகள் மீதான வருமான வரியை குறைக்கும் வழிகள்
- அடுத்த இரண்டு மாதத்தில் நடப்பு நிதி ஆண்டு (2024-25) முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சமயத்தில் பங்குச் சந்தையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முதலீடு செய்துள்ளவர்கள் சில முக்கிய முடிவுகளை எடுத்து அவற்றை சரிவர நிறைவேற்றுவது அவர்களுக்கு நல்லது. பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் அவர்களின் நீண்டகால மூலதன ஆதாயத்தையும், குறுகிய கால மூலதன ஆதாயத்தையும் கணக்கிட்டு எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்வது அவசியம்.
- இதைத்தவிர கம்பெனிகள் வழங்கிய டிவிடெண்டுகள் முழுவதும் வருமான வரிக்கு உட்பட்டதே. அதையும் மொத்த வருமானத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கம்பெனிகள் ரூ.5,000-க்கு மேல் வழங்கும் டிவிடெண்ட்களுக்கு குறிப்பிட்ட அளவில் வரி பிடித்தம் செய்திருப்பார்கள். அதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
- நீண்டகால மூலதன ஆதாயம் (Long Term Capital Gains) என்பது ஒரு வருடத்துக்கும் மேலாக வைத்திருக்கும் பங்குகள் அல்லது பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளின் விற்பனையில் கிடைக்கும் லாபம் என வரையறுக்கப்படுகிறது. இந்த வரையரைக்குள் வராத மூலதன ஆதாயம் குறுகிய கால மூலதன ஆதாயமாக (Short Term Capital Gains) கணக்கிடப்படும். பங்குகள் மற்றும் பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகள் மீதான குறுகிய கால மூலதன வரி தற்போது 20 சதவீதம் ஆகும். அத்துடன் கூடுதல் கட்டணம் (surcharge) மற்றும் செஸ் (Cess) உண்டு.
- பங்குகள் மற்றும் பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 12.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அத்துடன் கூடுதல் கட்டணம் (surcharge) செஸ் (Cess) உண்டு. ஒரு நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் வரை உள்ள நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு முழு வரி விலக்கு உண்டு. அதற்கு மேல் உள்ள தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள் பயன் பெறும் வழிகள்
- நீண்ட கால மூலதன ஆதாய வரியில் கொடுக்கப்பட்டுள்ள விலக்கான ரூ.1.25 லட்சத்தை முழுமையாக பயன்படுத்தலாம். இதுவரை இந்த அளவு லாபத்தை பெறவில்லை என்றால், அதற்கு உகந்த சில பங்குகளை விற்று இந்த விலக்கை பெறலாம். சில பங்குகளை விற்பதற்கு சரியான நேரம் அல்ல என்று நினைத்தாலும், அவற்றை விற்று அதே பங்குகளை உடனடியாக திரும்ப வாங்கலாம். இதனால் வரிவிலக்கும் கிடைக்கும். அதே பங்குகளில் முதலீட்டையும் தொடர முடியும்.
- சில பங்குகளை வாங்கி ஒரு வருடத்துக்கு மேலும் நஷ்டத்தில் இருக்கலாம். இதுபோன்ற பங்குகளை விற்றால், அந்த நஷ்டத்தை வேறு பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த நீண்ட கால மூலதன லாபத்துடன் ஆஃப்-செட் செய்ய முடியும்.
- ஒருவேளை அதிக அளவு நீண்ட கால மூலதன நஷ்டம் இருந்தால் அதை பின் வரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும் (Carry over). இதுபோன்ற நஷ்டங்களை அடுத்து வரும் எட்டு ஆண்டுகளில் லாபத்துடன் ஆஃப்-செட் செய்ய வழி உண்டு. எனவே ஒரு வருடத்துக்கு மேலாக உங்களிடம் உள்ள பங்குகள் நஷ்டத்தில் இருந்தால் அவற்றை விற்று நடப்பு ஆண்டுக்கான லாபத்துடன் ஆஃப்-செட் செய்வதுடன் அதிக நஷ்டங்களை அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
- முதலீட்டாளர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வரி ஏய்ப்பு என்பது ஒரு குற்றம். ஆனால் சட்டத்துக்கு உட்பட்டு முதலீட்டாளர்கள் வரியைக் குறைத்துக் கொள்வது அனுமதிக்கப்பட்ட ஒன்று ஆகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 01 – 2025)