TNPSC Thervupettagam

பலூன் போல விரியும் ஆழ்கடல் நுண்ணுயிரி

January 13 , 2025 16 hrs 0 min 12 0
  • ஆழ்கடலில் பைட்டோபிளாங்க்டன் என்னும் ஒற்றை செல் நுண்ணுயிரி கடலில் நீண்ட தொலைவு மேல்நோக்கி பயணம் செய்யக்கூடியது. ஆனால், மீனுக்கு இருக்கக்கூடிய துடுப்புபோன்ற உறுப்பு இதற்கு கிடையாது. பிறகு எப்படி நீந்துகிறது? ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிரியல் பொறியாளர் மனு பிரகாஷ் தலைமையிலான குழு இதற்கான வியப்பளிக்கும் விடையைக் கண்டறிந்துவிட்டது.
  • கடல் வாழ் உயிரிகளின் கழிவுகள் கடலின் அடியாழம் நோக்கிச் செல்லும். எனவே கடலின் ஆழமான பகுதிகளில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் குவிந்துள்ளன. சில வகை பைட்டோபிளாங்க்டன்கள் கடலின் ஆழத்தில் உள்ள ஊட்டச்சத்து மிக்கப் பொருட்களை நுகர்ந்து வாழுகின்றன. சராசரியாக ஒரு லிட்டர் கடல் நீரில் 1000 கோடி முதல் 1௦,000 கோடி பிளாங்க்டன்கள் இருக்கும். ஆனால், கடல் மடியில் போதிய அளவு சூரிய ஒளி பாய முடியாது. ஒளிச்சேர்க்கை மூலம்தான் ஆற்றலைத் தயாரிக்க முடியும் என்பதால் இந்த வகை நுண்ணுயிரிகள் கடலின் அடியிலிருந்து மேல் நோக்கி வருவது அவசியமாகிறது.

சூரியனை தேடி 7 நாட்கள்!

  • பைரோசிஸ்டிஸ் நோக்டிலூகா வகை பைட்டோபிளாங்க்டன் (pyrocystis noctiluca phytoplankton) 0.2 மில்லி மீட்டர் நீளம் கொண்டது. பொதுவாகக் கடலடியில் 125 மீட்டர் ஆழத்தில் அங்கு உள்ள ஊட்டங்களை இது நுகர்ந்து வாழும்.
  • சிறிய விலங்குகள் ஜூப்ளாங்க்டன் போன்ற உயிரிகள் தினந்தோறும் கடலின் அடியில் சென்று ஊட்டங்களைப் பெற்று கடலின் மேற்புறத்துக்கு நீந்தி வரும். அதுவே பைரோசிஸ்டிஸ் நோக்டிலூகா ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் உற்பத்தி செய்ய அவற்றின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கடலின் மேல் நோக்கிப் பயணம் செய்யும். கடலின் மேல் பரப்பிலிருந்து 50 மீட்டர் ஆழம் வரை போதிய சூரிய ஒளி ஊடுருவும் என்பதால் அதுவரை மட்டுமே மேல் நோக்கி நீந்தும். 125 மீட்டர் ஆழத்திலிருந்து ஐம்பது மீட்டர் ஆழம் வரை நீந்திச் செல்ல அதற்கு ஏழு நாட்கள் எடுக்கும்.

அதிசய நுண்ணுயிரி:

  • சூரிய ஒளியைப் பெற்று ஆற்றலை உருவாக்கியதும் செல் கீழ் நோக்கிச் செல்லும். ஊட்டம் செறிவான அடி ஆழம்வரை சென்றதும் செல் பிரித்தல் வழியே ஒருசொல் உயிரி பிரிந்து இரண்டு மகவு செல்களாக மாறும். அடுத்த தலைமுறை மகவு செல் கடலின் ஆழத்தில் மறுபடி விரிந்து பெரிதாகி மேல் நோக்கி நீந்தும். மறுபடி ஒளிச்சேர்க்கை செய்து ஆற்றலைப் பெரும். ஆற்றலைப் பெற்ற பின்னர் மறுபடியும் கீழ்நோக்கிச் செல்லும். அங்கே அடுத்த தலைமுறை உருவாகும்.
  • இயல்பில் பைரோசிஸ்டிஸ் நோக்டிலூகா கடல்நீரைவிட 5–10% அடர்த்தியானது. எனவே நீரில் எறிந்த கல்போல சரசர என்று கீழே சென்றுவிடும். இதில் ஏதும் மர்மம் இல்லை. ஆனால் கீழ் சென்ற நுண்ணுயிரி மேலே எப்படி நீந்தி வருகிறது?
  • உடலினுள் கடல் நீரை நிரப்பி வெறும் 10 நிமிடங்களில் தமது இயல்பைவிட ஆறு மடங்கு ஊதிப்பெருத்த வடிவை அடைவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல் போலச் செயல்படும் இந்த நுண்ணுயிரி சுரக்கும் அக்வாபோரின் புரதங்கள் உடலின் உள்ளே புகும் கடல் நீரிலிருந்து உப்பை வடிகட்டி நன்னீரை மட்டும் உள்ளே தக்கிவைத்துக் கொள்கிறது. எனவே அந்த உயிரியின் உடல் அடர்த்தி கடல்நீரின் அடர்த்தியைவிடக் குறைகிறது. எனவே துடுப்பு இல்லாமலேயே நுண்ணுயிரி கடல் பரப்பு நோக்கி மேலே பயணம் செய்ய முடிகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories