பள்ளி மாணவிகள் பாதுகாப்பு: முறையான கண்காணிப்பு அவசியம்
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான ஆலோசனைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளுக்காக மாணவிகளை வெளியூருக்கு அழைத்துச் சென்ற இடத்தில், அவர்களை மது அருந்த வற்புறுத்தியதாகவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தனியார் பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
- இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. பயிற்சியாளர் ஒருவர் தனியார் பள்ளி மாணவிகளை என்.சி.சி. முகாமுக்கு அழைத்துச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டார். மாணவிகளின் புகாரைப் பெற்ற சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதனை மூடி மறைக்க முயன்றது, இவ்விரு சம்பவங்களுக்கு இடையிலான பொதுவான அம்சம்.
- அலுவல்பூர்வமாகப் பள்ளிக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளில் சிலர், பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான இரண்டு நிகழ்வுகள் சில மாத இடைவெளியில் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கிருஷ்ணகிரி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தபோதே அனைத்துப் பள்ளிகளிலும் மாணவியரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தால், தூத்துக்குடி சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்.
- தூத்துக்குடி சம்பவத்துக்குப் பிறகு, விழித்துக்கொண்ட பள்ளிக் கல்வித் துறை மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான காத்திரமான சில நடவடிக்கைகளை எடுக்க முன்வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.
- இந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கு மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலம் போக்சோ சட்டம் குறித்துப் பயிற்சியும் விழிப்புணர்வும் அளிக்கப்படும். இந்தக் குழு மாதம் ஒருமுறை கூட வேண்டும்; மாணவிகளிடமிருந்து ஏதேனும் பாலியல் அத்துமீறல் புகார் பெறப்பட்டிருந்தால், அது குறித்து உரிய விசாரணை நடத்தப்படுவதையும் நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதிசெய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மாணவ, மாணவிகளைப் பள்ளி வளாகத்துக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது, பெற்றோரிடமும் மாவட்டக் கல்வி அலுவலரிடமும் எழுத்துபூர்வமாக ஒப்புதல் பெற வேண்டும். 10 மாணவிகளுக்கு ஓர் ஆசிரியை, 10 மாணவர்களுக்கு ஒரு ஆண் ஆசிரியர் உடன் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 10க்கும் குறைவான மாணவிகள் இருந்தாலும் ஆசிரியையின் துணை இல்லாமல் ஆண் ஆசிரியர்கள் அழைத்துச் செல்லக் கூடாது என்று உத்தரவிடுவது குறித்து அரசு பரிசீலிப்பது அவசியம்.
- மாவட்டக் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளச் செல்லும்போது மேற்கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் தொடர்பாகப் புகார் அளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும்கூடப் போதிய விழிப்புணர்வு இல்லை. புகார் அளிக்க மாணவிகள் அஞ்சும் சூழலும் உள்ளது. இந்நிலையில், அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவுகள் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதைத் தடுக்க உதவும் என்று நம்பலாம். அதே நேரம், பள்ளி நிர்வாகங்களின் முழுமையான ஒத்துழைப்பும் அதிகாரிகளின் முறையான கண்காணிப்பும் இல்லாமல் இப்படியான அவலங்களைத் தடுக்க முடியாது. அரசு இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 11 – 2024)