பழத்தை வைத்து இணைய மோசடி!
- இணையவழிக் குற்றங்களில் முதலீடு தொடர்பாக மக்கள் ஏமாறும் போக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ‘சதுரங்க வேட்டை’ படத்தில் இடம்பெற்ற வசனம் இந்த இடத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும். “ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால், முதலில் ஆசையைத் தூண்ட வேண்டும்” என்கிற அந்த வசனம்தான் இணையவழிக் குற்றவாளிகளின் தாரக மந்திரம். அந்த வகையில் சில மாதங்களாக தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியிருக்கிறது ஓர் இணைய மோசடி விவகாரம்.
- பழங்களின் மீது முதலீடு செய்து உங்களால் லாபம் சம்பாதிக்க முடியுமா? இதையே ஒரு மோசடியாக அரங்கேற்றியிருக்கிறார்கள். ஜெர்மனியிலிருந்து செயல் படுவதாக அறிவித்துக்கொள்ளும் ஒரு நிறுவனம், இப்படி ஒரு முதலீட்டு ஆசையைத் தூண்டி பலரையும் முதலீடு செய்ய வைத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் இணையம் வழியாகவோ அல்லது அந்த இணையத்தில் உள்ள செயலியைப் பதிவிறக்கம் செய்தோ கைபேசி எண்ணைப் பதிவுசெய்து அதில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
- அதிலுள்ள பழங்களை வாங்க வேண்டும். அதுதான் முதலீடு. இதில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எவ்வளவு முதலீடு செய்கிறோமோ, அதற்கேற்றாற்போல் தினமும் ஒரு தொகைக் கிடைக்கும். அத்தொகையை எடுக்க வேண்டுமெனில் வங்கி விவரங்களையும் பதிவுசெய்ய வேண்டும்.
வலை விரிக்கும் பிசினஸ்:
- உதாரணமாக ரூ.5,200 முதலீடு செய்து வாழைப்பழம், ஆப்பிள், ஸ்டிராபெர்ரி, ஆரஞ்சு எனப் பிரித்து வாங்கிக் கொள்ளலாம். முதலீடு செய்ததற்கு அடுத்த நாள் முதல் ரூ.300 வரவு வைக்கப்படும். வங்கிக் கணக்கைப் பதிவுசெய்தவர், அத்தொகையை தனக்கு மாற்றிக்கொண்டால், ஒரு நாளில் வந்துவிடும்.
- இப்படி முதலீடு செய்து லாபம் பார்த்தவர்கள் வாய் வழியாக சொல்லிச்சொல்லியே, குறைந்த தொகைதானே என்று ஏராளமானோர் முதலீடு செய்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால், நான்கு பேரும் ரூ.5200 செலுத்தி லாபம் பார்த்திருக்கிறார்கள். இன்னும் சிலரோ அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கடன் வாங்கியெல்லாம் இதில் லட்சக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். கடந்த
- நான்கைந்து மாதங்களாகப் பழங்கள் மீது முதலீடு செய்தவர்களுக்குக் கொஞ்சம் லாபம் கிடைத்திருக்கிறது. பிறகு முதலீடு செய்தவர்களுக்குச்சற்றுத் தாமதமாகப் பணம் வரத் தொடங்கியிருக்கிறது. பின்னர் அப்படியே நின்றுவிட்டது. முதலீடு செய்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி. ஆனாலும், அந்நிறுவனம் விடவில்லை. வரி செலுத்துவதில் பிரச்சினை இருக்கிறது, வரி செலுத்தினால், நிலுவையில் உள்ள தொகை கிடைக்கும் என்று மீண்டும் அந்நிறுவனம் தூண்டில் போட்டிருக்கிறது.
- அதற்கென ஒவ்வொரு தொகையிலும் வரி கூப்பன் என்கிற பெயரில் அதையும் விற்றிருக்கிறது. எப்படியோ பணம் வந்தால் சரி என்று கூப்பனை வாங்கியவர்களுக்கும் ஏமாற்றமே. நிலுவைத்தொகை எதுவும் வரவில்லை. ஒரு கட்டத்தில் அந்த இணையதளமும் செயலியும் செயல்படவே இல்லை. இதில் குறைந்த தொகையை முதலீடு செய்தவர்கள் அப்படியே அமைதியாகிவிட்டார்கள். அதிக முதலீடு செய்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
- சிறு வயதில் ‘பேராசை பெரும் நஷ்டம்’ என்கிற கதையைப் படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுதான் இங்கு நடந்திருக்கிறது. ரூ.5200 முதலீடு செய்தால், தினமும் எப்படி ரூ.300 தர முடியும்? ரூ.100 முதலீடு செய்தால் ரூ.2 கிடைக்கும் என்றால், அது நம்பும்படியானது. ஆனால், ரூ.50 கிடைக்கும் என்றால், அது எப்படிச் சாத்தியமாகும் என்கிற கேள்வி எழ வேண்டும்.
- ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பேராசையுள்ள பலருக்கும் அதுபோன்ற கேள்விகள் எழுவதில்லை. பொதுவாக முதலீட்டைப் பொறுத்தவரை பலருடைய நஷ்டம்தான் இன்னொரு வருடைய லாபம். இந்த இணையவழி வர்த்தகத்தில் முதலில் முதலீடு செய்தவர்கள் நன்றாகவே லாபம் பார்த்திருப்பார்கள்.
- அவர்களுடைய வாய்வழி விளம்பரம் மூலம் மற்றவர்களும் இதில் முதலீடு செய்வார்கள் அல்லவா? அவர்கள் கதிதான் அதோகதி. இவர்கள்தான் மோசம் போயிருப்பார்கள். எனவே, முகம் தெரியாத, இடம் தெரியாத, முன்பின் எதுவும் அறிந்திராத இணையம் அல்லது செயலி வழியாக முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பாக எந்த நிலையிலும் இணையவழியில் ஈர்க்கும்படியான முதலீட்டுப் பலன்கள் சொல்லப்பட்டால் முதலில் சந்தேகப்பட வேண்டும். ஏனெனில் அது உங்களுக்கு விரிக்கப்பட்ட வலைதான்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 01 – 2025)