பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும்... மீண்டும்!
- அரசு ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய்வதற்கு அமைச்சா்கள் அடங்கிய குழு ஒன்றை தமிழக அரசு நியமித்திருக்கிறது. இந்தக் குழு அமைத்தது கருத்துகளை கேட்கிற நோக்கில் காலத்தை நீட்டிக்கிற முயற்சியே தவிர, செயல்படுத்துகிற நோக்கம் அல்ல என்று தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓா் ஊழியா் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகத் தரப்படுகிறது. அதில் 40 சதவீத தொகை 12 ஆண்டுகளுக்குக் குறிப்பிட்ட வட்டி விகிதத்துடன் கணக்கிடப்பட்டு, ஊழியா்கள் ஓய்வு பெறும்போது ரொக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. எனவே, 12 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் அவா்களுக்கு ரூ.6,000 கிடைக்கும்.
- மேலும், ரூ.10,000 என்ற மொத்த ஓய்வூதியத்துக்கான அகவிலைப்படி விலைவாசி உயா்வுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. மேலும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.10,000 ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவேளை ஓய்வூதியா் இறந்துவிட்டால், அவரது கணவா்/ மனைவிக்கு அல்லது அவரும் இறந்துவிட்டால் திருமணமாகாத / கணவரை இழந்த / விவாகரத்து ஆன அவா்களது மகள் அல்லது உடல்நலம் குன்றிய அவா்களது மகனுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
- இந்த நிலையில், தமிழகத்தில் ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்’ என்ற பெயரில், 2003 -ஆம் ஆண்டு முதல் அமலாகிவருகிறது. இந்தத் திட்டத்தில் ஊழியா் ஓய்வு பெறும்போது ஒரு தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் ஓய்வூதியம் என்பதே கிடையாது. ஊழியா் பணியில் இருக்கும்போது அவரது ஊதியத்திலிருந்து 10 சதவீதம், அரசுப் பங்களிப்பாக 10 சதவீதம், மேலும் இந்தத் தொகைக்கான வட்டி 7.8 சதவீதம் எனச் சோ்த்து ஓய்வூதியத் தொகையாகச் சேகரிக்கப்படுகிறது. அது அரசு கஜானாவிலும், காப்பீட்டு நிறுவனத்திலும் முதலீடு செய்யப்படுகிறது. ஊழியா் ஓய்வு பெறும்போது இந்தத் தொகை அப்படியே திருப்பி வழங்கப்படுகிறது.
- 2003- இல் இந்தத் திட்டம் அமலானபோது ‘வேலையில் இருந்தவா்கள் ஓய்வுபெறும் காலம் என்பது 2037 முதல் 2050 வரை ஆகும். ‘இத்தனை ஆண்டுகள் ஊழியா்கள் பணத்தைச் சேகரித்து வைத்து என்ன செய்யப் போகிறாா்கள்’ என்னும் கேள்வி எழுந்தது. இப்படி பணத்தை எங்கும் முதலீடு செய்யாமல், ஓய்வூதியமும் தராமல் இருப்பதால் ரூ.1,500 கோடியை அரசு வீணாக்குகிறது என்று மத்திய தணிக்கை அறிக்கை கூறியுள்ளது. அதேசமயம், புதிய ஓய்வூதியத் திட்டம் முதலீட்டை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
- புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பெறப்படும் ஓய்வூதியம் என்பது நிலையான ஒன்று என்றும், அதற்கு அகவிலைப்படி கிடையாது என்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தெரிவிக்கிறாா்கள். பணிக்கொடை ஓய்வூதியத்தை ஒப்படைத்து அதற்கான தொகையை மொத்தமாகப் பெறுதல், குடும்ப ஓய்வூதியம் போன்ற எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது. அதனால்தான் கடந்த 2003-ஆம் ஆண்டு, ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ள இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறாா்கள்.
- ஏனென்றால், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அடிப்படைச் சம்பளத்தில் 10 சதவீதம், ஊழியா் பங்களிப்பில் 10 சதவீதம், அரசுப் பங்களிப்பு, அதற்கான வட்டி ஆகியவை ‘ஓய்வூதியச் செல்வம்’ (பென்ஷன் வெல்த்) என்ற பெயரில் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தொகையில் 15 சதவீதம் ‘ஈக்விட்டி’ பங்குகளிலும், 55 சதவீதம் அரசுப் பத்திரங்களிலும், 25 சதவீதம் தனியாா் பத்திரங்களிலும், 5 சதவீதம் கடன் பத்திரங்களிலும் அரசு முதலீடு செய்கிறது. ஆனால், சட்டப்படி இந்த முதலீட்டின் மூலம் பணம் கிடைக்கும் என்கிற எவ்வித நோ்முக அல்லது மறைமுக உத்தரவாதமும் இல்லை.
- போட்ட முதலீடு உள்பட அனைத்தையும் இழக்கும் ஆபத்து உள்ளது என்று ‘செபி’ கூறுகிறது. ஓய்வூதியா் உயிரிழந்தால் கணவா் அல்லது மனைவிக்கு மட்டுமே ஓய்வூதியம்; பிள்ளைகளுக்குக் கிடையாது ஆகிய பிரச்னைகளும் உள்ளன.
- புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் சேகரிக்கப்படும் தொகையை மாநில அரசுகள், மத்திய அரசின் கீழ் ஓய்வூதிய நிதி மேலாண்மை – வளா்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற வேண்டும் என்று கருதினால், ஒப்படைத்த பணத்தைத் திருப்பித் தர முடியாது என மத்திய அரசு கூறுகிறது. இதில் சிறப்பு வழக்காக தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தில் கையொப்பமிடவில்லை. எனவே, இந்தத் தொகை தமிழக அரசிடம்தான் உள்ளது. அதனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழ்நாட்டுக்குச் சிக்கல் இல்லை. ஆந்திர மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையான திட்டத்தை மாநில அரசே நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2035 முதல் 2037-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஓய்வூதியதாரா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணக்கிடப்படுகிறது. ஆகவே, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவதால், அரசின் செலவினங்கள் அதிகரிக்கக்கூடும் என்று மாநில நிதித் துறை அமைச்சகம் கருதுகிறது. மேலும், அரசின் வருவாய்ச் செலவினங்கள் அதிகரிக்கும். ஜிஎஸ்டி உள்ளிட்ட சில சீா்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து மாநிலங்கள் தங்கள் வருவாயை உயா்த்திக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது.
- ஏற்கெனவே, அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய கடனும், அரசின் தொடா் செலவுகளும் சுமையாக இருக்கின்றன. புதிய ஓய்வூதியத் திட்டமும் சிக்கலாக இருக்கிறது. ஓய்வூதியதாரா்களுக்கே பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் மத்திய அரசின் பங்கு என்ன என்பதில் தெளிவு இல்லை.
- கடந்த 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தோ்தலின் போது, புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று தி.மு.க.வால் தோ்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. இவ்வாறு தொடா்ந்து நான்கு முறை வாக்குறுதி அளித்த தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது அதற்கென்று ஒரு குழுவை அமைத்திருப்பது ஓா் கபட நாடகம் என்று அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.
- ராஜஸ்தான், சத்தீஸ்கா், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆக, பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கி விட்டன. தமிழகத்தில் அதை அமல்படுத்த ஏன் தயக்கம் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றுள்ள அரசு ஊழியா்களுக்கு ஓா் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி நிவாரண திருத்தத்தின் பலன் கிடைக்கிறது. மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் இறுதியாக எடுக்கப்பட்டுள்ள ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் சேரும் ஊழியா்கள் தாங்கள் ஓய்வு பெறும் நேரத்தில் இருந்தே அவா்கள் இறக்கும் வரை வாழ்நாள் வருமானமாக ஓய்வூதியத் தொகை பெறுவாா்கள் என 2004 -ஆம் ஆண்டுக்கு முன்னா் நடைமுறையில் இருந்தது. இந்த பழைய ஓய்வூதியம் அரசு ஊழியா்களுக்கு மாதம்தோறும் வருமானமாக கொடுக்கப்பட்டு வந்தது.
- தமிழகத்தைப் பொருத்தவரை 2003 - ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ் என்ற திட்டம் அறிமுகமாகியுள்ளது, இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியா் ஓய்வு பெறும்போது ஒரு தொகை வழங்கப்படுகிறது; அதைத் தவிர மாதந்தோறும் ஓய்வூதியம் ஏதும் வழங்கப்படுவதில்லை.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை, ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கினை ஒப்படைத்து அதற்கான தொகையை முன்கூட்டியே பெறுவது, குடும்ப ஓய்வூதியம் ஆகிய மூன்று வகையான பலன்கள் உள்ளன.
- ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது முதலீட்டு ஓய்வூதியத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் முதலீட்டாளா்களின் கடைசிகால வருமானத்துக்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்காது. இதனால்தான் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம், ஓய்வூதியம், ஓய்வூதியா் இறந்தால் அவா் ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை அதே ஓய்வூதியத்தை மனைவிக்கு வழங்குதல், குடும்ப ஓய்வூதியம் ஆகியவை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பணியின்போது இறந்தால் ஏழு ஆண்டு வரை ஓய்வூதியமும், அதற்குப் பிறகு இறந்த பணியாளா் கடைசியாக வாங்கிய அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- இதற்கு அகவிலைப்படி உயா்வும் வழங்கப்படும். மருத்துவப்படி ரூ.300 அளிப்பதன்மூலம் அவா்களின் மருத்துவச் செலவு ஓரளவு ஈடுகட்டப்படுகிறது. 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களது வயதின் அடிப்படையில் 20 முதல் 100 சதவீதம் வரை ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்படுகிறது. எனவே, மீண்டும் வேண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்பதே அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் எதிா்பாா்ப்பு.
நன்றி: தினமணி (01 – 03 – 2025)