பாம்புக் கடி: அறிவிக்கக் கூடிய ஒரு நோய்!
- இந்தியாவில் ஏற்கெனவே எய்ட்ஸ், காலரா, மலேரியா, டெங்கு, போலியோ உள்ளிட்ட பதினேழுக்கும் மேற்பட்ட நோய்கள், மக்களை அதிக அளவில் பாதித்து உயிரிழப்புகளை ஏற்படுத்துகிற ‘அறிவிக்கக் கூடிய நோய்களாக’ வகைப்படுத்தப்பட்டு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஒருவருக்குத் தென்படும் நோயின் அறிகுறி, அந்நோயின் தீவிரத் தன்மை, விரைவான தொற்றுப் பரவல், உயிரிழப்பு ஆகியவற்றின் அடிப்படையில், அந்நோய் ‘அறிவிக்கக் கூடிய நோய்’ என்று வகைப்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட நோயால் யாராவது பாதிக்கப்பட்டால், அதனை அருகிலுள்ள மருத்துவமனைகளிலோ அல்லது வட்டார சுகாதார அலுவலரிடமோ உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அது சட்டப்படி குற்றமாகும்.
- அனைத்து மாநில அரசுகளும், ஒன்றிய பிரதேசங்களும் பாம்புக்கடி நோயை ‘அறிவிக்கக் கூடிய நோயாக’ அறிவிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
- இந்தியாவில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் உள்ளன. சில பாம்புகள்அதிக விஷம் உள்ளவையாகவும், சில பாம்புகள் குறைந்த விஷம் உள்ளவையாகவும் உள்ளன. பாம்புக்கடி என்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய, தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒருவரின் ஆரோக்கியத்தை, மனநிலையைப் பாதிக்கக் கூடிய மருத்துவப் பிரச்னையாகும்.
- இது வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் அடிக்கடி எதிா்கொள்ளும் பிரச்னையாக உள்ளது. உடனே தடுக்கப்பட வேண்டிய அதிதீவிர பொது சுகாதாரப் பிரச்னையாகும். குப்பைகள் நிறைந்து, எலி நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் பாம்புகள் அதிகமாக இருக்கும். இந்தப் பாம்புக்கடியால் பெருமளவு பாதிக்கப்படுபவா்கள் காடுகள், முட்புதா்கள் நிறைந்த பகுதிகளில் வசிப்பவா்களே. அவா்கள் பெரும்பாலும் ஏழை, எளிய மக்களாக இருப்பதால், இது ‘ஏழைகளின் நோய்’ என்றும் அழைக்கப்படுகிறது.
- பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், ரத்த மண்டலத்தையும் உடனடியாகப் பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும். இதில் ‘பெரிய நான்கு’ என அழைக்கப்படும் கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், நாகப் (நல்ல) பாம்பு ஆகிய பாம்பு இனங்களால் 90 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
- உலக சுகாதார அமைப்பு பாம்புக்கடியை உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்னையாக அறிவித்துள்ளது. மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் பாம்புக்கடி பாதிப்புகள் மற்றும் இறப்புகளை 50 சதவீதம் குறைக்க வேண்டுமென்று உலக நாடுகளுக்கு அவ்வமைப்பு இலக்கு நிா்ணயித்துள்ளது.
- இந்தியாவில், மத்திய சுகாதாரப் புலனாய்வு அமைப்பின் தரவுகளின்படி ஒவ்வோா் ஆண்டும் சுமாா் 40 லட்சத்திற்கும் அதிகமானோா் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகிறாா்கள். இதில் 40,000-க்கும் அதிகமானோா் உயிரிழக்கின்றனா். இது உலக அளவில் பாதிக்கும் மேற்பட்டதாகும்.
- பாம்புக்கடியை ‘அறிவிக்கக் கூடிய நோயாக’ அறிவிப்பதன் மூலம் பாம்புக்கடியால் ஏற்படும் பாதிப்புகளின் உண்மை நிலையை அறிய முடியும். அதிக அளவில் பாம்புகள் இருக்கும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை மனிதா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இடங்களாகத் தெரியப்படுத்தலாம். பாம்புகள் அதிகமுள்ள பகுதிகளில் பாம்புக்கடிக்கான போதிய மருந்துகளைக் கையிருப்பில் வைத்துக் கொள்ள முடியும். முதலுதவி மருத்துவ வசதிகளை மேம்படுத்தி இறப்புகளைத் தடுக்கலாம்.
- பாம்புக்கடி நோய் அறிவிக்கக் கூடிய நோயாக வகைப்படுத்தப்பட்டிருப்பதால், யாராவது பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, வட்டார மருத்துவமனைகளிலோ, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலோ, தனியாா் மருத்துவமனைகளிலோ அதை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
- பாம்பு நஞ்சு முறிப்பு நுண்ணுயிா் மருந்துகள் 80 சதவீத உயிரிழப்புகளை மட்டுமே தடுக்க உதவுகின்றன. பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளா்கள் இன்மை, போதிய மருத்துவ வசதிகள் இல்லாதது அதிகரித்து வரும் பாம்புக்கடி இறப்புகளுக்கு காரணங்களாகும். மேலும், இந்தியாவில் பாம்புக்கடி தொடா்பான சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கப் பெறாமை, நோயின் தன்மை, இறப்பு விவரங்கள், அவற்றால் ஏற்படும் சமூக, பொருளாதாரப் பாதிப்புகள், சிகிச்சை முறைகள் ஆகியன பாம்புக்கடியைத் தடுக்க திட்டமிடுவதில் பெரும் தடைகளாக இருக்கின்றன.
- தேசிய அளவில், பாம்புக்கடியால் ஏற்படும் சவால்களை எதிா்கொள்ள, மத்திய அரசு பாம்புக்கடி நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது, பல துறைகளின் ஒத்துழைப்போடு, 2030-ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க பல முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு, ‘தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939-இன்’ கீழ், பாம்புக்கடியை ‘அறிவிக்கக் கூடிய நோயாக’ கடந்த நவம்பா் 6-ஆம் தேதி அரசிதழில் அதிகாரப்பூா்வமாக அறிவித்து விட்டது. நிகழாண்டில் ஜூன் மாதம் வரையில், தமிழ்நாட்டில் 7,300 போ் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவா்கள் என பதிவாகியுள்ளது. அவா்களில், 3 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த ஆண்டில், 19,795 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43 போ் உயிரிழந்துள்ளனா்.
- இதனைத் தொடா்ந்து, பாம்புக்கடி பற்றிய விவரங்களை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள், அரசுக்குத் தரவாகத் தெரிவிக்க வேண்டியதை கட்டாயமாக்குகிறது. இது, தமிழ்நாட்டில் பாம்புக்கடிக்கான விரிவான தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்கு பயனளிக்கும் வகையில் சிறந்த தரவு சேகரிப்புகளுக்கு வழிவகுக்கும்.
நன்றி: தினமணி (10 – 01 – 2025)