பாய்ஸ் கம்பெனியின் தயாரிப்புகள்!
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாடகம் மிக முக்கியப் பொழுதுபோக்கு இயக்கமாக வளர்ந்து நின்றது. ஊர்தோறும் நாடக அரங்குகள் கட்டப்பட்டன. இருப்பினும் வயதில் மூத்த நடிகர்களின் தான்தோன்றித் தனத்தால் நாடகக் கலையின் உரையாடல் ‘வெட்டிப் பேச்சு’ என்கிற நிலைக்குத் தரமிறங்கியது.
- அதற்குக் காரணமாக அமைந்தது ‘ஸ்பெஷல் நாடக வகை’. கம்பெனி நாடகத்திலிருந்து பிறந்த ஆடம்பர மான பொழுதுபோக்கு இது. டிக்கெட் விலையும் அதிகம். ராஜபார்ட் வேடங் கள், நாரதர் வேடம் ஆகியவற்றில் நல்ல பயிற்சியுடன் புகழ்பெற்று விளங்கிய பெரிய நடிகர்கள் வெவ்வேறு நாடகக் கம்பெனிகளின் அடையாளமாக விளங்கினர்.
- அவர்களை அழைத்து வந்து, குறிப்பிட்ட வேடத்தை மட்டும் நடிக்க வைப்பதுதான் ‘ஸ்பெஷல் நாடகம்’. இப்படி அதிகச் சன்மானத்துக்காகத் தங்கள் கம்பெனியைத் தாண்டி வரும் நடிகர்கள், ஒரே சீராக விளங்கி வந்த நாடக உரையாடலைத் தங்கள் இஷ்டத்துக்குப் பேசலானார்கள். இதை நாடக ரசிகர்கள் சிரித்தும் வியந்தும் ரசித்தனர். இந்தப் போக்கு காரணமாக, நாடகக் கதாபாத்திரத்துக்குக் கிடைக்க வேண்டிய அழுத்தம் குறைந்துபோய், நடிகரின் புத்திசாலித்தனமாக மட்டும் நாடக உரையாடல் நீர்த்துப்போனது.
தனிமனிதத் தாக்குதல்!
- ‘நடிகர்கள் நாடகக் கதைக்குப் புறம்பாக, வசனங்களை இப்படித் துணுக்குத் தோரணங்களாகப் பேசத் தொடங்கியது பற்றி, சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிய பாலர் நாடக சபையில் சிறு வயதிலேயே சேர்ந்து பயிற்சிபெற்ற டி.கே.சண்முகம் தனது பால்யத்தில் பார்த்த ஸ்பெஷல் நாடகக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறார்: “ஸ்பெஷல் நாடக மேடையில் வாய்ப்பேச்சு மிக்கப் பெரிய நடிகரிடம் பேசத் தெரியாத அப்பாவி நடிகர் எவராவது சிக்கிக்கொண்டால் அவர் கதை கந்தல்தான்.
- பேசத் தெரிந்த நடிகர் அவரைத் தாறுமாறான கேள்விகள் கேட்டுத் திக்குமுக்காட வைத்துச் சபையோரின் கைதட்டலைப் பெறுவார். நடிகர்கள் இருவரும் பேசத் தெரிந்தவர்களாக இருந்து விட்டால் சில சமயங்களில் போட்டி வலுத்துவிடும். நீண்ட நேரம் வாதம் நடைபெறும். நடிகர்கள் கதையை விட்டு வெகு தூரம் விலகிப் போய் உலவிக் கொண்டி ருப்பார்கள்! சொந்த விவகாரங்கள் எல்லாம் அம்பலத்துக்கு வரும்.
- எடுத்துக்காட்டாக, “பூத்தொடுப்பது போல் பேசுகிறீரே?” என்று பெண் வேடம் பூண்ட நடிகர் பேச்சைத் தொடங்குவார். அந்தப் பேச்சின் மூலம் ஆண் வேட நடிகர் பூ வியாபாரம் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதைக் குத்திக் காட்டுவார். இதற்குச் சபையில் கைதட்டல் கிடைக்கும். ஆண் வேடதாரியும் சளைக்காமல், “அழகே.. உன் பேச்சு சன்னம் வைத்து இழைப்பதுபோல் இருக்கிறதே!” என்று கூறி, பெண் வேடதாரி தச்சர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை நினைவுபடுத்துவார்.
- உடனே சபையில் இவருக்கும் கைதட்டல்! இந்தச் சொற்போர் வலுத்து, இறுதியில் சபையோர் சிலர் எழுந்து, ‘கதையைத் தவிர மற்ற சொந்தச் சமாச்சாரங்கள் எல்லாம் பேஷாகப் பேசுகிறீர்’ என்று ரசித்தவர்களே தடம் மாறிப் போன அவர்களைக் கதைக்குள் இழுத்துக்கொண்டு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் உண்டு’.
உலக அரங்கில் தமிழ் நாடகம்:
- இந்த ‘ஸ்பெஷல் நாடக’ப் போக்கு, அதுவல்லாத கம்பெனி நாடகங் களையும் நோயாகத் தொற்றியதைக் கண்டு மனம் நொந்தார் சங்கரதாஸ் சுவாமிகள். இந்த வீழ்ச்சியைச் சரி செய்ய என்ன செய்யலாம் என்று அவர் யோசித்தபோது தோன்றியதுதான், ‘நாடக ஆசிரியரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சிறுவர்களை வைத்தே முழு நாடகத்தையும் நடத்துவது’ என்கிற திட்டம். உடனடியாக அவர் ‘சமரச சன்மார்க்க நாடக சபை’ என்கிற முதல் ‘பாய்ஸ் கம்பெனியை 1910இல் தொடங்கினார்.
- தமிழ் நாடக வரலாற்றிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தச் சபையில் பத்து வயது சிறார்களாகச் சேர்ந்து பின்னாளில் நாடக உலகில் பெரும் பாடக நட்சத்திரங்களாகப் புகழ்பெற்றவர்கள்தான் மதுரை மாரியப்ப சுவாமிகள், எஸ்.ஜி.கிட்டப்பா ஆகிய இருவரும். சிறார் நடிகர்களின் உடையாத இளங்குரலும் தரமான வசன உச்சரிப்பும் பயின்ற வசனங் களையும் பாடல்களையும் மீறி தன்முனைப்பாக எதையும் செய்யாமல் கதாபாத்திரங்களில் கரைந்து போனதும் ‘சமரச சன்மார்க்க நாடக சபை’யின் நாடகங்கள் புகழ்பெற்று ஆதரவு பெருகக் காரணமாயிற்று. இதனால் தமிழகத்தில் பல பாய்ஸ் நாடகக் கம்பெனிகள் தோன்றின.
- தன்னுடைய சபைச் சிறார்களுக்கு நாடகத்தைப் பயிற்றுவிப்பதுடன் நின்றுவிடாமல், மதுரை ஸ்ரீ பால மீனாரஞ்சனி சங்கீத சபாவில் பயின்ற நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு நாடகப் பாடங்களைப் பயிற்றுவித்தார் சங்கரதாஸ் சுவாமிகள். பின்னாளில் மதுரை ஸ்ரீ பால மீனாரஞ்சனி சங்கீத சபா இரண்டாகப் பிரிந்து, சங்கரதாஸ் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு மதுரை தத்துவ ஸ்ரீ மீனலோசினி வித்துவபால சபா என்றும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி எனவும் புதிய சிறுவர் நாடகக் குழுக்கள் கிளை பிரிந்தன.
- சங்கரதாஸ் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்ட தத்துவ ஸ்ரீ மீனலோசினி வித்துவபால சபாவிலிருந்து பிரிந்து, டி.கே.எஸ். சகோ தரர்கள் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த நாடக சபா தொடங்கினார்கள். இக்குழு தமிழ் நாடக வரலாற்றில் தமிழகம் முழுவதும் பயணித்தது. பல்வேறு நாடுகளுக்கும் சென்று தமிழ் நாடகத்தின் மேம்பட்ட உயரத்தை உலகுக்குப் பறைசாற்றியது.
வீழ்ச்சியை வளர்ச்சியாக்கினார்!
- சலனப் படக்காலத்தில் தொடங்கி பேசும்பட யுகம் வரைத் திரை வெளி யில் புகழ்பெற்ற எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன், காளி என்.ரத்தினம், பி.யு.சின்னப்பா, கே.பி.காமாட்சி, கே.பி.கேசவன், எம்.கே.ராதா, பக்கிரிசாமி பிள்ளை, எம்.ஜி.தண்ட பாணி, டி.ஆர்.பி.ராவ் உள்படப் பல நடிகர்கள் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் தயாரிப்புகள்தான்.
- அதேபோல், 1937இல் தொடங்கி 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடித்த கே.சாரங்கபாணி (நடிகர் தியாகுவின் தாத்தா), பேசும்படக் காலத்தின் தொடக்கக் காலக் கதாநாயகர்களாகப் பல படங்களில் நடித்த நவாப் ராஜமாணிக்கம், பி.டி.சம்பந்தம், எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன், டி.பி.பொன்னுசாமி, டி.பாலசுப்பிர மணியம், கலகக் கலைஞன் எனப் பெயர்பெற்ற எம்.ஆர்.ராதா, ஏ.எம்.மருதப்பா, எஸ்.வி. வெங்கட்ராமன், டி.கே.கோவிந்தன், சிதம்பரம் ஜெயராமன் முதலிய நடிகர்கள் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையில் பயிற்சிபெற்றவர்கள் தான்.
- ‘பாய்ஸ் கம்பெனி’களில் சேர்ந்து பயிற்சிபெற்ற சிறார் நடிகர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமிழ் நாடகம் தானாகவே சீர்திருத்தம் அடைந்தது. வீழ்ச்சி வளர்ச்சியாக மாறியது. அதற்கான விதையை ஊன்றி, உரையாடல்களையும் பாடல்களையும் எழுதிப் பயிற்சியைத் தந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவருடைய மாணவர்களே சமூக நாடகங்களை மேடையேற்றினார்கள். அந்த நாடகங்களே தமிழ் சினிமாவைப் புராணப் பட ஆதிக்கத்திலிருந்து வெளியே இழுத்துப் போட முயன்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 02 – 2025)