பாறு கழுகு பாதுகாப்பு: தேவை தொடர் நடவடிக்கை
- ‘நிமெசுலைடு’ (Nimesulide) மருந்தைக் கால்நடைப் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்வதாக மத்திய அரசின் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரிய பறவைகள் ஆக்கப்பட்டுவிட்ட பாறு கழுகுகளின் அழிவுக்கு இந்த மருந்து காரணமாக இருக்கிறது. இந்த நடவடிக்கையைப் போல இன்னும் பல நடவடிக்கைகள் தேவைப் படுகின்றன:
- இனி புதிய மருந்துகள் கால்நடைப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன், அம்மருந்து களால் வேறு உயிரினங்களுக்குப் பின்விளைவுகள் நேருமா என்பதை இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (Indian Veterinary Research Institute) ஆராய்ந்து பரிந்துரைத்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.
- முதல்கட்டமாக பிலூநிக்சின், கார்புரோபென் ஆகிய மருந்துகள் தடைசெய்யப்பட வேண்டும்.
- மனிதர்களுக்கு ஒரு மி.லி முதல் 3 மி.லி வரை வலிநிவாரணி மருந்து போதுமானது. மனிதப் பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்படும் கீட்டோபுரோபேன், அசிக்லோபினாக், நிமெசுலைடு ஆகியவை கால்நடைகளுக்கு மடைமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க 3 மி.லி. அளவுக்கு மேல் மேற்கண்ட மருந்துகள் தயாரிக்கப்படுவதை முற்றாக நிறுத்த வேண்டும்.
- தடை குறித்துக் கால்நடை மருத்துவர்களுக்குச் சுற்றறிக்கை, மருந்துக் கடைக்காரர்களுக்கும் கால்நடை மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். பாறு கழுகுகள் வலம் வரும் பகுதியில் இதை முதல்கட்டமாக மேற்கொள்ள வேண்டும்.
- மருந்துக் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து தரப்படுவதைத் தடுக்க வேண்டும். ஒவ்வொரு மருந்துக் கடையிலும் வலிநிவாரண மருந்துகள் விற்கப்பட்ட விபரம் (பரிந்துரைத்தவர் பெயர், வாங்கியவர் பெயர், காரணம்) போன்ற குறிப்புகள் பேணப்பட்டு மாதந்தோறும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- தற்போது இணைய வழியிலும் மருந்துகளை எளிதாகப் பெறமுடியும் என்பதால், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
- மருந்துக் கடைகளில் அடிக்கடி கண்காணிப்புச் சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட மருந்துகள் கிடைக்காவண்ணம் உறுதிசெய்ய வேண்டும்.
- பாறு கழுகுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் ஊக்கி கலக்கப்படாமல் வீக்கத்தை மட்டுப்படுத்தும் மருந்துகளுக்கு (Non-steroidal anti-inflammatory drugs NSAIDs) மாற்றாகச் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மருத்துவமுறைகளைப் பயன்படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும்.
- பாதுகாப்பான மாற்று மருந்துகளை மட்டுமே அரசு மருந்தகங்களுக்கு வாங்க வேண்டும். அம்மருந்துகள் தள்ளுபடி விலையில் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 02 – 2025)