பிரிட்டன் சிறார் இலக்கியச் சூறாவளி
- லூ யி கரோல், ஆர்.எல்.ஸ்டீவன்சன், பியாட்ரிக்ஸ் பாட்டர், எனிட் பிளைடன், ரோல் தால், ஜே.கே. ரௌலிங், ஜூலியா டொனால்ட்சன் என உலகக் குழந்தைகளை தங்கள் பால் ஈர்த்த பிரிட்டிஷ் சிறார் எழுத்து மரபின் புதிய குழந்தை டேவிட் வாலியம்ஸ் (David Walliams).
- ஒரு கணக்கீட்டின்படி அவருடைய 50-க்கும் மேற்பட்ட நூல்கள் மொத்தமாக 5 கோடிக்கு மேல் விற்றுள்ளன, 55-க்கும் மேற்பட்ட மொழிகளில் அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2000-க்குப் பின்பு எழுதத் தொடங்கியவர்களில் மிக அதிகமாக விற்ற சிறார் புத்தகங்களை எழுதிய பெருமைக்குரியவர் வாலியம்ஸ். இவ்வளவுக்கும் அவருடைய முதல் சிறார் நூல் 2008இல்தான் வெளியானது. அதுவரை ஒரு நகைச்சுவை கலைஞராக, நடிகராக மட்டுமே அவர் அறியப்பட்டிருந்தார். அந்த வகையில் எழுத்தாளராக தற்போது அடைந்துள்ள உலகப் புகழை அவர் பெருமிதமாகக் கருதுகிறார்.
- பிரிட்டனின் புகழ்பெற்ற சிறார் எழுத்தாளர் ரோல் தாலுடன் வாலியம்ஸ் ஒப்பிடப்படுகிறார். இதற்குக் காரணம் ரோல் தாலின் எழுத்தில் இருந்த குழந்தைகளை எளிதில் ஈர்க்கும் தன்மையையும் வேடிக்கை-நகைச்சுவைத் தன்மையையும் வாலியம்ஸ் சில வகைகளில் பிரதிபலிப்பதால்தான். வாலியம்ஸுக்கும் ரோல் தாலுக்கும் இடையே உள்ள மற்றொரு தொடர்பு, ரோல் தால் நூல்கள் புகழ்பெற ஒரு காரணமாக இருந்த ஓவியர் க்வின்டின் பிளேக், வாலியம்ஸின் முதல் 2 புத்தகங்களுக்கு வரைந்ததுதான். பிளேக்கின் ஓவியப் பாணியிலேயே வரையும் டோனி ராஸ், வாலியம்ஸின் மற்ற நூல்களுக்கு வரைந்துவருகிறார்.
வாசிப்பும் விருப்பமும்:
- பெண்கள் அணியும் நீண்ட உடையான டிரெஸ்ஸை ஒரு சிறுவன் அணிந்து பள்ளிக்குச் சென்றால் என்ன நடக்கும், அவனுடைய நண்பர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதே ‘தி பாய் இன் தி டிரெஸ்’ எனும் அவருடைய முதல் சிறார் நாவல். இந்தக் கதையில் வரும் அந்தச் சிறுவன் கதாபாத்திரத்துக்கு உத்வேகமாக இருந்தது வேறு யாருமல்ல, சிறு வயது டேவிட் வாலியம்ஸேதான்.
- அந்தப் புத்தகம் தந்த வெற்றியின் மூலம் முக்கியமான விஷயங்களை நகைச்சுவை சேர்த்துக் குழந்தைகளிடம் கடத்தலாம் என நினைத்திருக்கிறார். வறுமை, வீடு இல்லாமல் இருப்பது, செல்வந்தர்க் குழந்தைகளின் தனிமை, நெருங்கியவரின் இறப்பு, மறதி நோய் எனப் பல விஷயங்களை தன் சிறார் நாவல்கள் மூலம் வாலிம்ஸ் பேசியுள்ளார்
- ‘‘டேவிட் காப்பர்ஃபீல்ட், ஆலிவர் ட்விஸ்ட், வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் போன்றவற்றை ஒருவர் படிப்பது நிச்சயம் புத்திசாலித்தனமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், யாரும் எடுத்தவுடனே அந்த நூல்களைப் படிக்கத் தொடங்க மாட்டார்கள். எனவே, ஒரு குழந்தையை வாசிக்க வைக்க, அவர்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயங்களை தொடக்கத்தில் வாசிக்கத் தருவது முக்கியமானது என நான் நினைக்கிறேன்’’ என்கிறார்.
- அடுத்த தலைமுறை வாசிக்க விரும்புவதில்லை என்கிற அங்கலாய்ப்புகளை அதிகமாகவே கேட்கிறோம். அது பெருமளவு உண்மை. எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் ஹாரி பாட்டர் நாவல் வரிசையின் வசீகரம் மூலம் பெருங்கூட்டத்தை வாசிப்பை நோக்கித் திருப்பியவர் ஜே.கே.ரௌலிங். அதேபோல் டேவிட் வாலியம்ஸின் ‘மிஸ்டர் ஸ்டிங்க்’, ‘கேங்ஸ்டா கிரானி’, ‘பில்லியனர் பாய்’ உள்ளிட்ட நூல்கள் பெருமளவு விற்பனையாகி, தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெற்றிபெற்றுள்ளன.
இந்தியக் குழந்தைகளுடன்...:
- இந்தியா வந்த டேவிட் வாலியம்ஸ், சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, தலைநகர் டெல்லி, ஜெய்ப்பூர் எனக் கடந்த மாதம் இறுதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக பொங்கல் திருவிழாவை ஒட்டி சென்னையில் நடைபெற்ற தி இந்து இலக்கியத் திருவிழாவில் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளும் பெற்றோருமாக அரங்கமும் நிரம்பிவழிய, பலரும் நின்றுகொண்டே அவருடைய நிகழ்த்துதலை கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
- இந்திய நடைமுறையைப் பின்பற்றி எளிய கால்சட்டை-முழுக்கைச்சட்டையை அணிந்திருந்த அவர் நுழைந்தபோது அரங்கம் அதிர்ந்தது. இவ்வளவுக்கும் டேவிட் வாலியம்ஸ் திரை நட்சத்திரமோ, விளையாட்டுப் பிரபலமோ கிடையாது.
- அவருடைய நிகழ்ச்சி நடைபெற்ற கால அளவு அரை மணி நேரத்துக்கும் சற்றே அதிகம். ஆனால், அவ்வளவு குறுகிய நேரத்தில் டேவிட் வாலியம்ஸ் தந்த அனுபவம் ஒரு எழுத்தாளரிடமிருந்து பொதுவாக யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அடிப்படையில் ஒரு நகைச்சுவை நிகழ்த்துக் கலைஞராகவும் நடிகருமான வாலியம்ஸ் தன் திறமைகள் அனைத்தையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார். தான் எழுதிய கதாபாத்திரங்கள் சிலவற்றின் வசனத்தை பாவனையுடன் வாலியம்ஸ் வாசித்துக்காட்டியது வரவேற்பைப் பெற்றது.
- அத்துடன் தன் புகழ்பெற்ற நூல்கள் உருவான விதம், தான் சித்தரித்த சில சுவாரசியமான கதாபாத்திரங்கள், அவற்றுக்கு உத்வேகமாக இருந்த நபர்கள்-சம்பவங்கள், தன் நூலின் சில பத்திகள், தன் வாழ்க்கையின் பழைய படங்கள், சிறார் வாசகர்களின் எதிர்வினை-பதில்கள் என அவருடைய நிகழ்ச்சி சிரிப்பலைகள், ஆச்சரியம், புதுமைகளால் நிரம்பியிருந்தது. ‘‘ஆலிஸின் அற்புத உலகம் உலகின் மிகச் சிறந்த சிறார் நூல். காரணம் அதுதான் முதல் சிறார் இலக்கியமாகப் பரிணமித்தது என்றும் தனக்குப் பிடித்த எழுத்தாளர் ரோல் தால், அவர் எழுதிய ‘சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி’, ‘பி.எஃப்.ஜி.’ ஆகியவை தனக்குப் பிடிக்கும் என்றும் கூறினார். எப்போதுமே சுயமாக சிந்தித்து எழுதுங்கள். எல்லோரிடமும் கதைகள் குவிந்துகிடக்கும். அதை நாம்தான் தேடிப் போக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
- நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது, இதில் பங்கேற்பதற்காகவே சேலத்திலிருந்து வந்திருந்த தீவிர வாசகரும் ஆசிரியருமான ஒரு நண்பர் கேட்டார், தமிழ் எழுத்தாளர்கள் என்றைக்கு இதுபோல் மக்களை அணுகப் போகிறார்கள் என்று? இதை ஒட்டியும் டேவிட் வாலியம்ஸ் தன்னை முன்வைத்துக்கொண்ட விதம் குறித்தும் யோசித்தபோது சில விஷயங்கள் முக்கியமாகப் பட்டன. அந்த நிகழ்ச்சியில் வாலியம்ஸ் தன்னைத் தானே நிறைய பகடி செய்துகொண்டார்.
- அது மட்டுமல்லாமல் குழந்தைகளிடம் இருந்து தனக்கு வந்த சில கடிதங்களை பகிர்ந்துகொண்டார். அந்தக் கடிதங்களில் ‘அவருடைய புத்தகம் தனக்குப் பிடிக்கவில்லை, சலிப்பாக இருந்தது’ என்றும், ‘தனக்கு பிடித்த முதல் எழுத்தாளர் வாலியம்ஸ் அல்ல’ என்றும் சில குழந்தைகள் எழுதியிருந்ததையும் கவனப்படுத்தினார். நிச்சயமாக, நாம் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 02 – 2025)