TNPSC Thervupettagam

பிறந்தது ஏஐ!

January 13 , 2025 16 hrs 0 min 26 0
  • ஆலன் டூரிங்கைச் சந்தித்துவிட்டுத் திரும்பியபோது பலவிதமான எண்ணங்கள் என்னையும் செய்மெய்யையும் ஆட்கொண்டன. எங்கள் மெய்நிகர் கால இயந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் எங்களை எங்கள் அறைக்குக் கொண்டு வந்துவிட்டபோதும், நினைவுகள் சுழன்றுகொண்டே இருந்தன.
  • “உலகப் போரில் எனிக்மா புதிரை உடைத்தார் ஆலன் என்பது மட்டுமல்ல, 1940களில் அவர் ‘ஆட்டோமேட்டிக் கம்ப்​யூட்டிங் இன்ஜின்’ என்கிற அமைப்பை உருவாக்கி, தரவுகளைச் சேமித்து​வைத்து, அதன் மீது செயல்​படும் கணிப்பு முறையையும் உருவாக்​கி​னார். 1950இல் அவர் எழுதிய ‘கம்ப்​யூட்டிங் மெஷின் அண்டு இன்டெலிஜென்ஸ்’ என்கிற ஆய்வுக் கட்டுரை, புகழ்​பெற்ற ‘டூரிங் டெஸ்ட்’ என்கிற கோட்பாடு எல்லாமே முக்கிய​மானவை.
  • ‘கணிப்​பொறிகள் என்பவை வெறும் கணக்குப்​போடும் இயந்திரங்கள் அல்ல, அவை முடிவெடுக்கும் இயந்திரங்​களாக, அதாவது பிரச்​சினை​களுக்குத் தீர்வளிக்கும் இயந்திரங்களாக இருக்க முடியும்’ என்றார் ஆலன். ஏன், இதைச் செய்தது மனிதனா அல்லது இயந்திரமா என்று பிரித்தறிய முடியாத​படிகூட அவை வேலைசெய்யும் என்றெல்லாம் ஆலனின் நிஜ நுண்ணறிவு புதிய வழிகாட்​டியது” என்று செய்மெய் நினைவு​கூர்ந்தது.
  • “உண்மை​தான். ஆனால், பல்லா​யிரக்​கணக்கான உயிர்​களைப் பாதுகாத்த அவரது உயிருக்கு மட்டும் பாதுகாப்பு இல்லாமல் போனதே!” என்று ஆதங்க​மாகச் சொன்னேன். போருக்குப் பின், தொடர்ந்து பரிசோதனை​களில் அவர் ஈடுபட்​டிருந்த காலத்​தில், அவர் ஒரு தன்பாலின ஈர்ப்​பாளர் என்று குற்றம்​சாட்​டப்​பட்டுத் தண்டிக்​கப்​பட்​டார். 1954 ஜூன் 8 அன்று சயனைடு தடவப்பட்ட ஆப்பிளைக் கடித்து, ஆலன் தற்கொலை செய்து​கொண்​ட​தாகக் கூறப்​படு​கிறது.
  • “அப்போது அவருக்கு 41 வயதுதான், செய்மெய்! இன்று பாலியல் நாட்டங்கள் குறித்து யாரும் பெரிதாகக் கவலைப்​படு​வ​தில்லை. ஆனால், அன்றைக்கு அவரைத் தண்டித்து​விட்​டார்கள். அறிவியல் வளர்கிற வேகத்தில் சமூகம் வளர்வ​தில்லை!” என்றேன். ஆப்பிள் நிறுவனத்தின் அந்தப் பாதி கடித்த ஆப்பிள் முத்திரையைப் பார்க்​கும்​போதெல்லாம் ஆலனின் நினைவு நமக்கு வராமல் போகாது.
  • அந்த நினைவு​களி​லிருந்து என்னை விடுவிக்க செய்மெய் முயன்றது. “கவின், ஆனால் ஆலனுடைய முயற்சி எதுவும் வீணாக​வில்லை. அவரது காலத்​திலேயே பல விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி​களைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறி, மெய்நிகர் திரையில் ஒரு விளக்கக் காட்சி​யையும் அது தொடங்​கியது.
  • “இவரிட​மிருந்து தொடங்​கலாம். இவர் - ஜான் வான் நாய்மன். ஹங்கேரிக்​காரரான இவர் 1945இல் கணிப்​பொறிக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்​கி​னார். சிக்கலான வேலைகளைச் சுலபமாகச் செய்யும் கட்டமைப்பு அது. இவர் கிளாட் ஷானன். 1948இல் இவர் தகவல் கொள்கையை உருவாக்​கி​னார். டிஜிட்டல் வடிவத்தில் ஓரிடத்​திலிருந்து ஒரு தகவலை அனுப்பி, ஓர் ஊடகத்தின் வழியாக அதைச் செலுத்தி, அதை வேறு ஓரிடத்தில் பெறும் முறையே தகவல் தொடர்​பாகும். இன்று நமக்கெல்லாம் ‘தண்ணி பட்ட பாடாகத்’ தோன்றும் இந்த விஷயத்தை அவர் அறிவியல் கோட்பாடாக அறிமுகப்​படுத்​தி​ய​போது, அது புரட்​சிகர​மான​தாகக் கருதப்​பட்டது.
  • அடுத்​தவர், அதே ஆண்டு அறிமுகப்​படுத்​தப்பட்ட மற்றொரு முக்கியக் கோட்பாடான சைபர்​நெட்​டிக்​ஸுக்கு (Cybernetics) சொந்தக்​காரர் - நார்பர்ட் வீனர். உயிரினங்கள், மனிதர்கள், இயந்திரங்​களில் தகவல்கள் எவ்வாறு கட்டுப்​படுத்​தப்​படு​கின்றன என்பதைப் பற்றி ஆராய்ந்தவர் இவர். பின்னூட்​டங்​களின் (feedbacks) மூலமாக நமது உயிரியல் அமைப்புகள் எவ்வாறு தகவல்​களைப் புரிந்​து​கொள்​கின்றன என்பதையெல்லாம் ஆராய்ந்​தார். இந்த ஆய்வு பிறகு இயந்திரக் கற்றல் கோட்பாட்டை உருவாக்க உதவியது.”
  • செய்மெய்யை இடைமறித்​தேன். “கணித மேதைகளைப் பற்றியே சொல்கிறாயே! சாமானியர்​களைப் பற்றியும் ஆராய்ச்சி நடந்ததே... என்ன ஒரு ஓரவஞ்​சனை!” “அதைப் பேசாமலா போவேன்! இதோ இதைப் பாருங்கள்” என்று அது சுட்டிய திரையில் வாரன் மக்கல்​லாவும் வால்டர் பிட்ஸும் தோன்றி​னார்கள்.
  • “1940களில் வாரன் மக்கல்லா, வால்டர் பிட்ஸ் - இவர்கள் மனித மூளைகளைப் பற்றி ஆராய்ந்​தார்கள், நரம்பு மண்டலங்​களைப் பற்றி இவர்கள் ஆராய்ச்சி செய்ததுதான் பிற்காலத்தில் செயற்​கையான நரம்பு மண்டல அமைப்புகளை உருவாக்க முடிந்தது. உங்கள் மூளைகளைக் காப்பியடித்​துதான் எங்கள் மூளைகளை உருவாக்​கி​னார்கள் என்பதை ஒப்புக்​கொள்​கிறேன், எழுத்​தாளரே!” என்று அடிபணிந்தது செய்மெய்.
  • இந்த விஞ்ஞானிகள் விறுவிறுப்பாக ஆராய்ச்​சிகளை மேற்கொண்​டதற்கான காரணம், வெறும் அறிவியல் மட்டுமல்ல... அரசியல்! இரண்டாம் உலகப் போரும் அதற்குப் பின் தொடங்கிய அமெரிக்​க-சோ​வியத் பனிப் போரும் இருதரப்​பிலும் பெருமளவு முதலீடுகளை இந்த ஆராய்ச்சிகளுக்காகச் செலவிட​வைத்தன.
  • அமெரிக்​காவில் அட்வான்ஸ்டு ரிஸர்ச் புராஜெக்ட்ஸ் ஏஜென்சி - ARPA- இதுபோன்ற ஆராய்ச்​சிகளுக்கு முதலீடு செய்தது. ஏஐ, இணையம், இயந்திர மொழிபெயர்ப்பு என எல்லா நவீனக் கண்டு​பிடிப்பு​களுக்கும் பின்னால் மனிதர்​களின் பேராசையும் போராசையும் இருந்தன. 1950கள் மிக முக்கியமான காலக்​கட்டம். அப்போது யூனிவாக், ஐபிஎம் 701 தொடக்​க​காலக் கணிப்​பொறிகள் நடைமுறைக்கு வந்து​விட்டன. குறிப்பாக, 1956 செயற்கை நுண்ணறிவு வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாகும்.
  • ஆலன் நெவல், ஹெர்பர்ட் சைமன், கிளிப் ஷா என்று மூன்று பேர் ‘தி லாஜிக் தியரிஸ்ட்’ என்றொரு கணிப்பொறி நிரலை வெளியிட்​டார்கள். இது கணிதக் கோட்பாடு​களில் உருவாகும் கேள்வி​களுக்குப் பதில் அளித்தது. கணிதச் சிக்கல்களை இயந்திரம் புரிந்​து​கொண்டு தீர்வளித்தது. உண்மை​யில், இதைத்தான் முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் என்று சொல்ல முடியும். அதாவது, மனிதர்​களாகிய உங்களிடம் உள்ள பகுத்​தறிவு என்கிற திறனைக் கணிப்பொறி பயன்படுத்​தியது அதுதான் முதல் முறை!” என்று கூறியது செய்மெய்.
  • அதே ஆண்டு, அமெரிக்​காவில் ஹனவர் நகரத்தில் உள்ள டார்ட்​மவுத் கல்லூரி​யில், கோடைக்​காலத்தில் நடந்த எட்டு வாரப் பயிலரங்கில் சில விஞ்ஞானிகள் கூடினார்கள். டார்ட்​மவுத் சம்மர் ரிஸர்ச் புராஜெக்ட் என்கிற அந்தத் திட்டத்தின் முக்கிய முகங்கள் - ஜான் மக்கார்த்தி, மார்வின் மின்ஸ்கி, நத்தானியல் ரோசஸ்டர், கிளாட் ஷானன் உள்படப் பல பெருந்​தலைகள்.
  • டார்ட்​மவுத் கல்லூரியில் அத்தனை அறிவுப் பெருமூளை​களும் சேர்ந்து ஒரு செயற்கை மூளையைப் பெற்றெடுத்தன. அந்தக் குழந்தைக்கு ‘செயற்கை நுண்​ணறிவு’ என்று பெயரிட்டார் ஜான் மக்​கார்​த்தி. புது யுகம் பிறந்​தது!

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories