TNPSC Thervupettagam

பிறருக்காகத் தன் உயிரைக் கொடுப்பவர்கள் இருக்கிறார்களா?

November 24 , 2024 17 hrs 0 min 3 0
  • கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளரான கி.ராஜநாராயணன், ‘ஜடாயு’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். தொன்மக் கதையான ராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பறவை ‘ஜடாயு’. கழுகுகளின் அரசன் என்று ஜடாயு அழைக்கப்படுகிறது.
  • ஒருமுறை தசரதன் காட்டுக்கு வேட்டை​யாடச் சென்றபோது அவரது உயிரை ஜடாயு காப்பாற்றியது. அன்றி​லிருந்து தசரதனுக்கு ஜடாயு நெருக்கம். காலம் ராமனையும் காட்டுக்கு அனுப்​பியது. தண்டகாரண்​யத்தில் ஜடாயுவைச் சந்திக்​கிறார் ராமன். இருவரும் தத்தமது வரலாறுகளைப் பகிர்ந்​து​கொள்​கின்​றனர். தசரதன் மறைவுக்காக ஜடாயு வருந்​துகிறது. உயிர் துறக்​கவும் துணிகிறது. ஏற்கெனவே ஒரு தந்தையை இழந்து​விட்​டேன்; உங்களையும் இழக்க விரும்ப​வில்லை என்கிறார் ராமன். ‘நீங்கள் மூவரும் காட்டில் இருக்​கும்வரை உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்​பேன்; பின்னர், உயிர் துறப்​பேன்’ என்கிறது ஜடாயு.
  • பஞ்சவடியில் ராமர், லட்சுமணர் தங்கு​வதற்கு உதவுகிறது. இந்நிலை​யில், ராவணன் சூழ்ச்​சிசெய்து சீதையைக் கடத்திச் செல்லும்போது ராவணனுடன் கடுமை​யாகப் போர் புரிகிறது ஜடாயு. ராவணனது கொடி, குண்டலம், திருமுடி, கவசம், வில் முதலிய​வற்றுடன் அவரது தேரையும் தேர்ப்​பாகனையும் சிதைத்து அழிக்​கிறது ஜடாயு. சினம் கொண்ட ராவணன், ஒப்பற்ற தெய்வ வாளால் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்து​கிறார். ஜடாயு நடந்ததையெல்லாம் ராமனிடம் கூறிவிட்டு உயிர் நீத்தது. ராமன் ஜடாயுவுக்குத் தன் கையாலேயே நீர்க்கடன் செய்தார். தசரதனுக்குக் கிடைக்காத பேறு ஜடாயுவுக்குக் கிடைத்தது. ஜடாயுவின் தியாகம்தான் இதற்குக் காரணம்.
  • போலம்​மாளுக்கு நேர்ந்தது என்ன?
  • விவசா​யியான தாத்தைய நாயக்கர், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க ஒரு கோடைக்​காலத்தில் கோவில்​பட்​டிக்குச் செல்கிறார். அன்றிரவு ஊருக்கு ஒதுக்​குப்புறமான தெரிந்தவர் ஒருவர் வீட்டில் தங்க வேண்டிய சூழல் உருவாகிறது. அப்போதுதான் அந்தக் குரல் கேட்கிறது. ‘ஐயோ, அம்மா... இதைக் கேட்க நாதி இல்லையா? ஐயோ... ஐயோ...’ என்ற ஓலம். நாயக்கர் அபயக்​குரல் கேட்ட திசையை நோக்கி ஓடுகிறார். அவரை நோக்கி ஒரு பெண் தலைவிரி கோலமாக ஓடி வருகிறார்.
  • ‘தாயே பயப்ப​டாதே, நான் இருக்​கும்வரை உனக்கு ஒரு கெடுதலும் வராது’ என்கிறார். ஓடிவந்த பெண்ணின் பெயர் போலம்​மாள்; கணவனுடன் சண்டை போட்டுக்​கொண்டு ஊரைவிட்டு உறவினரைத் தேடி வந்தவர். போலம்​மாளின் தனிமையைப் பயன்படுத்​திக்​கொண்டு நான்கு பேர் அவளிடம் பேச்சுக் கொடுக்​கின்​றனர். இறுதியில் அவர்களது நோக்கத்தைப் புரிந்​து​கொண்டு, தப்பிச்​செல்ல முயல்​கிறார். இந்தச் சூழலில்தான் நாயக்கர் உதவ முன்வரு​கிறார். குடும்பச் சண்டை என்று நாயக்கரை ஏமாற்றி​விட்டு, போலம்மாளை அழைத்துச் செல்கின்​றனர். நாயக்​கரின் உள்ளுணர்வு அந்தப் பெண்ணைத் தொடரச் சொல்கிறது.
  • நால்வரும் ஒரு பாலத்தின் அடியில் போலம்​மாளைப் பலாத்​காரம் செய்ய முயல்வதை நாயக்கர் பார்க்​கிறார். நாயக்கர் குனிந்து இரண்டு பெரிய கற்களை எடுக்​கிறார். அவரது தோள்கள் பூரித்து நிற்கின்றன. மார்பு புடைத்து விம்முகிறது. கம்பீரமான தோற்றத்​துடன் அவர்களை எதிர்​கொள்​கிறார். இரண்டு பேரைக் கல்லால் அடித்துக் கீழே தள்ளுகிறார். ‘அம்மா போய்விடு இங்கிருந்து’ என்று கத்து​கிறார்.
  • நாயக்கர் மூன்றாவது நபரைச் சாய்ப்​ப​தற்குள் அதிலொருவன் அரிவாளால் நாயக்​கரின் வலது கையை வெட்டு​கிறான். போலம்​மாள், ‘ஐயோ... ஐயோ...’ என்று கதறுகிறார். இடது கையால் அவர்களைத் தடுக்​கிறார். இடது கையையும் நாயக்கர் இழக்கிறார். ‘தாயே, உனக்கு நான் உதவ முடியாமல் போய்விட்டதே, இவர்களைக் கொன்று உன்னை மீட்க வல்லமை இல்லாமல் போய்விட்டதே? கடவுளே, நீ இருக்​கிறாயா?’ என்று தரையில் மோதிக்​கொள்​கிறார் நாயக்கர். நாயக்கர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதை இடையர்​குலப் பெண்கள் மறுநாள் பார்க்​கின்​றனர். இதுதான் கி.ரா.வின் ‘ஜடாயு’ கதையின் சுருக்கம்.
  • ‘உச்’ கொட்டு​வதைத் தவிர நாம் என்ன செய்கிறோம்?
  • ‘ஜடாயு’ சிறுகதைக்கும் ராமாயணப் பிரதிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால், ஜடாயு என்கிற தொன்மக் கதாபாத்​திரத்தை மனதிற்​கொண்டே கி.ரா. இக்கதையை எழுதி​யிருக்​கிறார். சில இடங்களில் புராண கால மொழியைப் பயன்படுத்​தி​யிருக்​கிறார். போலம்மாள் அழுதது, சீதை அழுததன் மிச்சம். அந்த நால்வரில் ஒருவர் ராவணனை நினைவூட்டு​கிறார். இந்தக் கதையில் கி.ரா. பல்வேறு திறப்புகளை உருவாக்கு​கிறார். புனைவு எப்போதும் நனவிலி மனதிலிருந்தே கருக்​கொள்​கிறது. கி.ரா.வின் நனவிலி மனதில் கடவுளுக்கான இடம் என்னவாக இருக்​கிறது என்பதையும் இக்கதை வெளிப்​படுத்து​கிறது. சீதையை ராமன் காப்பாற்றி​னார். போலம்​மாளுக்கு யார் இருக்​கிறார்கள்? தான் இறந்து​போவதைப் பற்றி நாயக்கர் கவலைப்​பட​வில்லை; அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடிய​வில்லையே என்றுதான் தரையில் மோதிக்​கொள்​கிறார். தரையில் மோதி மோதித்தான் தன் உயிரைப் போக்கிக்​கொள்​கிறார் நாயக்கர்.
  • கம்பன் உருவாக்கி​யுள்ள ஜடாயு, திசைகளை மறைக்கும் அளவுக்குப் பெரிய சிறகுகளை உடையது. கைலாய மலையையொத்த தோற்றத்தை உடையது. தாத்தைய நாயக்​கருக்கு அத்தகைய எந்தச் சிறப்புத் தகுதியும் இல்லை. அறுபது வயதுக் கிழவர். கைதான் அவரது பலம். கோபம் என்பதை அறியாதவர். நாயக்​கருக்கும் ஒரு மகளும் குழந்​தைத்தனம் மாறாத பேரனும் உண்டு. நாயக்கர் தன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்​பட​வில்லை. ஆதரவு கேட்டு அபயக்​குரல் கொடுக்கும் ஒரு பெண்ணுக்கு முன்னால் தன் குடும்பத்தை அவர் பெரிதாக நினைக்க​வில்லை.
  • நாயக்​கருக்கு நினைவு தப்பும் அந்தச் சூழலில்தான் கி.ரா. நாயக்​கரின் குடும்பத்தை நமக்கு அறிமுகப்​படுத்து​கிறார். ‘பாவம், யார் பெற்ற பிள்ளை​யோ... எந்தப் பாவி செய்த வேலையோ?’ என்ற உச்சுக்​கொட்​டலில் சக உயிர்​களின் மீதான கருணையை மக்கள் வெளிப்​படுத்​தி​விட்டு, அந்த இடத்தைக் கடந்து​விடு​கின்​றனர். இந்த உச்சுக்​கொட்​டலின் வழியாகத் தம் பொறுப்பைக் கனகச்​சித​மாகச் செய்து​விட்​ட​தாகப் பொதுத் திரள் கருதுகிறது. அவர்களுக்கு அவ்வளவுதான் நேரமிருக்​கிறது. இந்தக் கதையை வாசிக்​கும்போது பெரும் குற்றவுணர்வு ஏற்படு​வதைத் தவிர்க்க முடியாது. ‘நியாயம் என்று ஒன்று இருக்​கிறது’ என்ற நாயக்​கரின் குரல் தொந்தரவு செய்து​கொண்டே இருக்​கிறது.
  • எந்தப் பிரதிபலனையும் எதிர்​பார்க்​காமலேயே தசரதனுக்கு ஜடாயு உதவியது. இந்தப் பண்பு புராண காலத்​துடன் அற்றுப்​போய்​விட​வில்லை. தாத்தைய நாயக்கர் போன்ற​வர்கள் இன்னும் மிச்சமிருக்​கிறார்கள் என்கிற நம்பிக்கையை இக்கதையின் வழியாக கி.ரா. உண்டாக்​குகிறார்​.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories