புகைப்பழக்கத்தை நிறுத்தும் அருமருந்து!
- மாரடைப்பு வந்தவர்களுக்குப் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், அதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்களாகிய நாங்கள் சொல்வோம். உயிர் மேல் இருக்கிற ஆசையால் பெரும்பாலானோர் அதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், மற்றவர்கள் அடுத்த ஒரு வருடத்தில், “நெஞ்சு வலிக்கிறது” என்று மருத்துவமனைக்கு அவசரமாக வருவார்கள். காரணம் பார்த்தால், அவர்கள் மறுபடியும் புகைப் பழக்கத்துக்கு ஆளாகியிருப் பார்கள்.
- “ஏன்?” என்று கேட்டால், “புகைப்பதைக் கைவிட முயற்சி செய்கிறேன், டாக்டர். ஆனால், முடியவில்லை” என்பார்கள். “புகைப்பதை நிறுத்தத் தான் நினைக்கிறேன். அதற்கு அறிவுரைகள் மட்டும் போதவில்லை. மாற்றுவழிகள் இருந்தால் சொல்லுங்கள், டாக்டர். முயல்கி றேன்” என்று கேட்பவர்கள்தான் அதிகம்.
அருமருந்து எது?
- ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன். நவீன மருத்துவத்தில் புகைப்பழக்கத்தை நிறுத்தப் பல்வேறு மருந்துகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனாலும், என் அனுபவத்தில், புகைப்பவரின் மன உறுதிதான் இதற்கான அருமருந்து; அவசியமான மருந்து.
- இன்றைய சூழலில், ஒருபுறம் தொழிற்சாலை இயந்திரங்களும் சாலையில் ஓடும் வாகனங்களும் வெளிவிடுகிற புகையின் அளவைக் கட்டுப்படுத்த மாற்று வழிகளைத் தேடி உலக அளவில் மாநாடுகள் நடத்துகிறோம். மற்றொருபுறம், புகைப்பழக்கத்தால் நம் உடல் என்னும் இயந்திரத்துக்குள் புகையை ஊதித் தள்ளி அதைப் பாழாக்குகிறோம். இது நியாயமா என யோசிக்க வேண்டும்.
எப்படி நிறுத்துவது?
- புகைப்பழக்கத்தை நிறுத்துவதில் இரண்டுவிதக் கட்சியினரைக் காணலாம். ‘ஒரே நாளில் புகைப்பதை நிறுத்திவிட வேண்டும்’ என்று திட்டமிடுவோர் ஒரு கட்சியிலும், ‘படிப்படியாக நிறுத்திக்கொள்ளலாம்’ என்று நினைப்பவர்கள் அடுத்த கட்சியிலும் இருக்கிறார்கள். நீங்கள் ஒரே நாளில் புகைப்பதை நிறுத்திவிடும் கட்சியில் இருந்தால், மகிழ்ச்சிதான். உங்களால் அப்படி நிறுத்த முடிந்தால், அதற்கு ஆட்சேபனை இல்லைதான். ஆனால், உங்கள் கட்சியில் இருப்பவர்கள் கொஞ்சம் பேர்தான்.
- இதற்குக் காரணம் சொல்கிறேன். ஒரே நாளில் புகைப்பழக்கத்தை நிறுத்தினால், உடலுக்குள் சில வேண்டாத விளைவுகளும் ஏற்படும். இதுவரை நாளொன்றுக்கு எத்தனை சிகரெட்/பீடி புகைத்தீர்களோ, எத்தனை வருடங்களுக்குத் தொடர்ச்சியாகப் புகைத்தீர்களோ அவற்றைப் பொறுத்து இந்தத் தொல்லைகள் தொடங்கும்.
- முக்கியமாக, தலைவலி அடிக்கடி தொல்லை கொடுக்கும். நெஞ்சில் படபடப்பு ஏற்படும். இரவில் உறக்கம் வராது. எதைப் பார்த்தாலும் எரிச்சல் உண்டாகும். மனச்சோர்வு எட்டிப் பார்க்கும். விரல்கள் நடுங்கும். இப்படிப் பலவிதத் தொந்த ரவுகள் அடுத்தடுத்து ஏவப்படும் ஏவுகணைகள்போல் தாக்குவதால், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை ஆகிவிடும். ஆம், நீங்கள் மறுபடியும் புகை பிடிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆகவே, எனது ஓட்டு அடுத்த கட்சியினருக்குத்தான். மிகுந்த மன உறுதியுடன், படிப்படியாக, சிகரெட்/பீடிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வந்து, சீக்கிரத்தில் சிகரெட்டுக்கு மூடுவிழா நடத்திவிடலாம்.
உதவும் நிகோட்டின் பட்டைகள்:
- மன உறுதி இல்லாதவர்களுக்காகவே ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறது, நிகோட்டின் பட்டை (Nicotine Patch). கை புஜம், தோள்பட்டை, நெஞ்சு இப்படி ஏதாவது ஓர் இடத்தில் இதை ஒட்டிக்கொள்ள வேண்டும். இதில் இருக்கிற நிகோட்டின் ரசாயனம் 24 மணி நேரம் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாகத் தோலுக்குள் ஊடுருவிச் சென்று ரத்தத்தில் கலக்கும்; நீங்கள் புகை பிடிக்கும்போது கிடைக்கக்கூடிய அதே அளவு உற்சாகத் தைக் கொடுக்கும். இதன் பலனால், உங்களுக்கு சிகரெட்/பீடி புகைக்க வேண்டும் என்கிற உந்துதல் குறைந்துவிடும்.
- “சரி, டாக்டர். சிக ரெட்டில் இருக்கிற மாதிரி இந்தப் பட்டையிலும் நிகோட்டின்தானே இருக்கிறது? இது உடலுக்குள் போனால், கெடுதல் செய்யாதா?” என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? கேட்பது சரிதான். இது முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தைதான். தடுப்பூசியில் சிறிதளவு கிருமியை அனுப்பி, அந்தக் கிருமி ஏற்படுத்துகிற நோயைத் தடுக்கிறோம் அல்லவா? அப்படித்தான் நிகோட்டின் பட்டையும். இது புகைப்பதை நிறுத்தும் வேலையைச் செய்கிறது.
- அடுத்து, நிகோட்டின் பட்டையில் இருக்கிற நிகோட்டின் அளவு சிக ரெட்டில் இருக்கும் அளவைவிட மிகவும் குறைவு. இது உடலுக்கும் உள் ளத்துக்கும் உற்சாகத்தைத் தருமே தவிர, கெடுதல் செய்யாது. நிகோட்டின் பட்டை அணியச் செய்வதன் முக்கிய நோக்கம், புகைப்பழக்கத்துக்கு அடிமையாகிப் போனவரை ‘சிகரெட்/பீடியை இனிமேல் மறந்தும் தொடக் கூடாது’ என்கிற நிலைமைக்குக் கொண்டுவருவதுதான். அதற்குச் சிறிதளவு நிகோட்டினைக் கொடுத்து, போகப்போக அதைக் குறைத்து, நிகோட்டின் பட்டை அணிவதை முற்றிலும் நிறுத்திவிடலாம்.
எப்படிப் பயன்படுத்துவது?
- புகைபிடிப்பவர் நாளொன்றுக்கு எத்தனை சிகரெட்/பீடி புகைக்கி றாரோ, அதற்கு ஏற்ப நிகோட்டின் பட்டைகளை அணிய வேண்டியது அவசியம். உதாரணத்துக்கு, ஒருவர் தினமும் 10 சிகரெட்டுக்கு மேல் புகைக்கிறார் என்றால், 21 மி.கி. நிகோட்டின் அளவுள்ள நிகோட்டின் பட்டை ஒன்றை அவர் தினமும் அணியவேண்டும்.
- 8 - 12 வாரங்களுக்குப் பிறகு, 14 மி.கி. பட்டையை அணிந்துகொள்ள வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, 7 மி.கி. பட்டை தினமும் அவருக்குத் தேவைப்படும். இப்படி, சிகரெட் எண்ணிக்கையைக் குறைப்பதுபோல் நிகோடின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்தால், சில மாதங்களில் தலை வலி, உளச்சோர்வு, நெஞ்சில் படபடப்பு என எதுவும் இல்லாமல் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடலாம்.
- நிகோட்டின் பட்டைகளை மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொண்டால் இன்னும் நல்லது. தற்போது நிகோட்டின் பட்டைக்கு மாற்றாக, நிகோட்டின் மாத்திரைகள், lozenge, gum, inhaler, nasal spray என்னும் வழிமுறைகளும் வந்துள்ளன. மருத்துவரின் பரிந்துரைப்படி இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கைகொடுக்கும் ‘5-D’கள்:
- புகைபிடிக்க வேண்டும் என்னும் உந்துதல் வரும்போது கீழ்க்காணும் ஐந்து D-களைப் பின்பற்றுங்கள்.
முதல் D (Delay):
- சிகரெட்/பீடி நினைவுக்கு வரும்போது, ஒவ்வொரு முறையும் பத்து நிமிடங்கள் தாமதப்படுத்துங்கள். இதைத் தினமும் தொடருங்கள். நீங்கள் வழக்கமாகப் புகைக்கும் சிகரெட்/பீடி எண்ணிக்கை சீக்கிரத்தில் குறைந்துவிடும்.
இரண்டாவது D (Deep breathe):
- ஐந்து நிமிடங்களுக்கு ஆழமாக மூச்சு விடுங்கள். அல்லது பிராணாயாமம் செய்யுங்கள். பிறகு, அடுத்த வேலையை ஆரம்பித்துவிடுங்கள்.
மூன்றாவது D (Drink water):
- சிறிது நேரம் கொஞ்சம் கொஞ்சமாகவும் மெதுவாகவும் தண்ணீர் குடியுங்கள். இப்படி நேரத்தைத் தள்ளுங்கள்; அப்படியே சிகரெட் நினைப்பையும்தான்.
நான்காவது D (Do something else):
- நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு, மாற்று வேலையைச் செய்யுங்கள். உதாரணத்துக்கு, அலுவலகத்தில் இருந்தால், உட்கார்ந்தபடி கைகால்களுக்குச் சிறு சிறு பயிற்சிகள் கொடுப்பது, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது. வீட்டில் இருந்தால், வீட்டைச் சுத்தம் செய்வது, பொருள்களை ஒழுங்குபடுத்துவது, யோகா, தியானம் செய்வது, பிடித்த இசை கேட்பது, புத்தகம் வாசிப்பது.
ஐந்தாவது D (Directory):
- அதாவது, வழிகாட்டி. புகைபிடிப்பதைக் கைவிட உங்களுக்கு வழிகாட்ட உதவும் தேசிய அழைப்பு எண்: 1800 112 356. இதையும் நாடலாம். இப்படி நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் புகைப்பதைத் தடுக்கிற அல்லது தள்ளிப்போடுகிற தடுப்பூசியாக அமையும். இது உறுதி.
இ-சிகரெட் வேண்டாம்:
- ‘சிகரெட்டுக்கு மாற்று’ என்கிற போர்வையில் புகுந்துள்ள இ-சிகரெட் புகைப்பழக்கம் இன்றைய இளைஞர் களிடம் தொற்றிக்கொண்டு வருகிறது. ஆள் இல்லாத வீட்டுக்குத் திருடன் முன்வாசல் வழியாக வந்தால் என்ன, பின் வாசல் வழியாக வந்தால் என்ன? திருடுபோவது நிஜம்தானே? அப்படித்தான், இ-சிகரெட்டும். இந்த நவீன ‘தோட்டா’வில் 16 மி.கி.வரை நிகோட்டின் இருக்கிறது. இதயத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்த இந்த அளவே ஒரு விஷம்தான். அதோடு இதில் கலக்கப்படும் பலவித ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் கண்ணிவெடிகள். ஆகவே, இ-சிகரெட் பக்கம் மறந்தும் செல்லாதீர்கள்.
புகைப்பதை நிறுத்தினால்?
- உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி, புகைப்பதை நிறுத்திய 20 நிமிடங்களுக்குள், உங்கள் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் குறையும்.
- 12 மணி நேரத்திற்குள், ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.
- 2-12 வாரங்களுக்குள், உங்கள் ரத்த ஓட்டம் மேம்படும்; நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.
- 1 முதல் 9 மாதங்களுக்குப் பிறகு, இருமல், மூச்சுத் திணறல், இளைப்பு, களைப்பு போன்றவை குறையும்.
- ஒரு வருடத்தில், மாரடைப்புக் கான உங்கள் ஆபத்து பாதியாகக் குறைந்திருக்கும்.
- ஐந்து வருடங்களுக்குப் பிறகு, உங்களுக்குப் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் புகைபிடிக்காதவர்களுக்கு உள்ளதுபோல் குறைந்திருக்கும்.
- பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் பாதியாகக் குறைந்து விடும்.
- 15 வருடங்களுக்குப் பிறகு, மாரடைப்புக்கான சாத்தியம் புகை
- பிடிக்காதவர்களுக்கு இருப்பதைப் போலவே மாறியிருக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 02 – 2025)