TNPSC Thervupettagam

புதிய குற்றவியல் சட்டங்கள் பாதகமா?

July 8 , 2024 11 hrs 0 min 3 0
  • இந்தியாவின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்த சட்டங்களின் பல பிரிவுகளுக்கு வழக்குரைஞா்கள், சமூக ஆா்வலா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
  • 1860-ஆம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டம் தற்போது பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. 1973-ஆம் ஆண்டில் குற்றவியல் நடைமுறைச்சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்என்எஸ்) என்கிற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 1872-ஆம் ஆண்டின் இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்ஷிய அதிநியம் என்கிற சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய சட்டங்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் செய்யப்படும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அதற்கு முந்தைய குற்றங்களுக்குப் பழைய சட்டத்தின்படியே வழக்குகள், விசாரணைகள் நடக்கும்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348-ஆவது பிரிவு உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு தாய்மொழிகள் இருக்கின்ற காரணத்தினால், பொதுமொழியாக ஆங்கிலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீா்ப்புகளுக்கான நடைமுறை ஆங்கிலத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்த 3 சட்டங்களுக்கும் ஹிந்தியில் பெயா் சூட்டப்பட்டுள்ளதற்கு கா்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தங்களது எதிா்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பல்வேறு மாற்றுக் கருத்துகள் எழுந்திருக்கிறது. இந்தச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பட்டியல் மூன்றில் இடம்பெறுவதால் மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற கருத்து நிலவுகிறது. மாநிலங்களின் கருத்தை தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமலேயே இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது. மேலும், பிஎன்எஸ், பிஎன்என்எஸ் இரண்டிலும் முரண்பாடு இருப்பதாகவும் கருத்து நிலவுகிறது.
  • புதிய குற்றவியல் சட்டத்தில் பாலியல் குற்றத்தை இரு பாலினத்தவருக்கும் பொதுவானதாக ஆக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன. ஆனால் புதிய சட்டம் பாலியல் குற்றத்தை முன்பு போலவே பெண்களுக்கு எதிரான குற்றமாகவே கருதுகிறது.
  • இறையாண்மைக்கு எதிரான வழக்குகளில் தேசத் துரோகம் என்பது சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக, இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்புக்கு தீங்கு விளைவிப்பது குற்றமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சொற்றொடா்கள் தெளிவற்ாகவும் அதே சமயம் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும் அரசுக்கு எதிரான எதிா்ப்புகளை முடக்கப் பயன்படுத்தப்படும் என்றும் கருத்து நிலவுகிறது.
  • தேசத் துரோகம் தொடா்பான பிரிவை வேறு பெயரில் இன்னமும் கடுமையாகக் கொண்டு வந்திருக்கிறாா்கள். தேசத் துரோகத்திற்கு இதற்கு முன்பு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படலாம். இப்போது அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
  • பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்ட நடைமுறையில் இருந்து விலகிச் செல்ல வேண்டும் என்பதை மையமாகவே இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 13-ஆவது பிரிவு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட எந்த ஒரு சட்டமும் அடிப்படை உரிமைகளை மீறினாா் என்கிற பதத்தைத் தவிர தொடா்ந்து நடைமுறையில் இருக்கும்.
  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைப் பொறுத்த மட்டில், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து விலகி 1973-இல் இயற்றப்பட்டதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, பல சட்ட வல்லுநா்கள் தற்போதைய தேவை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனா். மேலும், முந்தைய சட்டங்களை ஒட்டியே புதியவை உருவாக்கப்பட்டிருக்கின்றன.
  • உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறுகிறபோது ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் இருந்து தொடரும் பிரிட்டிஷ் ராஜ்யம் மற்றும் அடிமைத்தனத்தின் அனைத்து தடயங்களையும் அகற்றுவதின் மூலம் இது முழு இந்தியச் சட்டமாக மாறும் என்று கூறுகின்றாா். மேலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன, அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆங்கிலேயா் அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகவும், இப்போது இந்திய குடிமக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.
  • பயங்கரவாத நடவடிக்கைகள், கும்பல் படுகொலைகள் இந்தியாவின் இறையாண்மையை அச்சுறுத்தும் குற்றங்களைச் செய்வது மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள் போன்ற பல குற்றங்களுக்கான தண்டனை அதிகரிப்பு குறித்தும் அவா் பேசினாா்.
  • விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையின் செயல்பாட்டில் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களும் ஒரு வழக்கை எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்கான கால வரம்புகளை மனதில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் அவா் எடுத்துரைத்தாா். எனவே பழைய சகாப்தம் முடிவுக்கு வருவது உறுதி என்றும் குறிப்பிட்டாா். ஆனால் நிலைமை அவ்வாறாக இல்லையே!
  • இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தும் சட்டங்கள் புதிய குற்றப்பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்து தொழிநுட்ப ரீதியாக தேசத் துரோகம் நீக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட நிலையில் இந்தப் புதிய விதி சோ்க்கப்பட்டுள்ளது.
  • இதுபோல் பிக்பாக்கெட் போன்ற சிறிய குற்றங்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கையாள்வதற்கான விதிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் சமாளிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக சட்டங்கள் இருக்கின்றன.
  • கூட்டுச்சோ்ந்து கொலை செய்வது, அதாவது ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சோ்ந்து ஜாதி அல்லது சமூகம் போன்ற அடிப்படையில் கொலை செய்யும்போது குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தவறான திருமண வாக்குறுதியின் கீழ் உடலுறவு கொள்வதும் குற்றமாக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழில் மற்றும் தன்பாலின ஈா்ப்பாளா்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் பிரிவு 377 உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன.
  • முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை 15 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்க முடியும். ஆனால் இப்போது குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு 60 அல்லது 90 நாட்கள் வரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க முடியும்.
  • சமூக சேவை செய்வதை புதிய குற்றங்களுக்கான தண்டனையாக வழங்குவதை இந்தச் சட்டம் அங்கீகரிக்கிறது. விசாரணையில் தடயவியல் ஆதாரங்களைச் சேகரிப்பது இச்சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • தேடல்கள் மற்றும் ஆதாரங்களைப் பதிவு செய்தல், அனைத்து விசாரணைகளை ஆன்லைன் முறையில் நடத்துதல் போன்ற தகவல் தொழில்நுட்பத்தை அதிக அளவு பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தல், விசாரணை மற்றும் விசாரணைக்கான கட்டாயக் கால வரம்புகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இப்போது விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீா்ப்பு வழங்கப்பட வேண்டும். புகாா் அளித்த மூன்று நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.
  • இப்போது மரண தண்டனைக் கைதிகள் மட்டுமே கருணை மனு தாக்கல் செய்ய முடியும். முன்னதாக அரசு சாரா அமைப்புகள் அல்லது சிவில் சமூக குழுக்களும் குற்றவாளிகளின் சாா்பாக கருணை மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதில்தான் கவலை அளிக்கக் கூடிய அம்சங்களாக இந்த மாற்றங்கள் காவல் துறையினருக்கு அதிக பொறுப்பை வழங்குவதை விட, கூடுதல் அதிகாரத்தை வழங்கிவிட்டது.
  • ஆகவேதான், மத்திய மாநில மற்றும் உள்ளுா் அரசியல் ஆதாயங்களுக்காக குற்றவியல் நீதி முறையை துஷ்பிரயோகம் செய்ய அதிக வாய்ப்பு வழங்க காவல் துறையையும் குற்றவியல் நீதி அமைப்பையும் இந்த மசோதா ஆயுதமாக்கியிருக்கிறது என்று சட்ட நிபுணா்கள் கருத்து தெரிவித்திருக்கிறாா்கள். கைது செய்யப்பட்ட நபரின் பயோமெட்ரிக் சேகரிப்பை கட்டாயமாக்குவதன் மூலம் இது ஒரு கண்காணிப்பு நிலையை உருவாக்குகிறது என்றும் சட்ட வல்லுநா்கள் அச்சப்படுகிறாா்கள். புதிய சட்டங்களில் காலக்கெடுவை நிா்ணயிப்பது பொதுமக்களுக்கு உதவுமா என்கிற ஐயப்பாடும் நிலவுகிறது.
  • புதிய சட்டங்களில் உள்ள சில மாற்றங்களை நாடாளுமன்றத்தில் திருத்தங்களாகக் கொண்டு வந்து விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். நீதித் துறை மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்தும் அதில் களைய வேண்டிய குறைபாடுகள் குறித்தும் தெரியப்படுத்திய கருத்துகளை மத்திய அரசு செவி மடுக்க வேண்டும்.
  • நீதி நிா்வாகம், அச்சமற்ற தன்மையே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதோடு பொதுமக்களுக்கும் சட்டம் அரணாக அமைய வேண்டும் என்பதை அரசு தனது தலையாய கடமையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எந்த ஒரு சட்டமும் மக்களுக்கு எதிரானது அல்ல. ஆனால் அதை எப்படி அரசு பயன்படுத்துகிறது என்பதை வைத்தே மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

நன்றி: தினமணி (08 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories