TNPSC Thervupettagam

புத்தரின் கருத்துகளை உலகறிய செய்த போதி தர்மர்

January 24 , 2025 6 hrs 0 min 12 0

புத்தரின் கருத்துகளை உலகறிய செய்த போதி தர்மர்

  • ஞான விழிப்புணர்வு பெற்று வாழ்பவர், போதி சத்துவர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு போதி சத்துவராக ஆக, முறையாக புத்த நிலையை அடையக் கூடிய வழிகளைக் கற்றுக் கொண்டு, அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வரவேண்டும் என்று ஆன்றோர் பெருமக்கள் அருளியுள்ளனர்.
  • கி.பி.436-460 காலக்கட்டத்தில் காஞ்சி மாநகரில் ஆட்சியிலிருந்த இடைக்காலப் பல்லவ மன்னன் சிம்மவர்மனுக்கு, கி.பி. 440-ல் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் புத்த தர்மர். இவர் பிறக்கும்போதே ஒரு மகானுக்குரிய அம்சங்களோடு பிறந்தார். வளரும் பருவத்திலேயே அறிவாற்றலும், பக்தி ஞானமும் உடையவராக திகழ்ந்தார்.
  • சிம்மவர்மன், புத்தரின்பால் கொண்டிருந்த பற்றின் மிகுதியாலேயே தனது பிரியமான மூன்றாவது மகனுக்கு புத்த தர்மர் என்று பெயர் சூட்டினார். அரசக் குடும்பத்தில் பிறந்தவரானாலும், ஆடம்பரமற்ற வாழ்க்கை முறையையே கொண்டிருந்தார் புத்த தர்மர். ஒரு சமயம், மகத நாட்டில், வனத்தின் நடுவே கடுந்தவம் செய்யும் ‘ப்ரணதாரா’ என்ற யோகினியின் சிறப்புகள் தெரியவந்தது.
  • உடனே மகத தேசத்தின் எல்லையிலுள்ள வனத்தில் தவத்திலிருந்த ப்ரண தாராவை காஞ்சிக்கு அழைத்துவர அமைச்சர்களை அனுப்பினார் சிம்மவர்மன். ஒரு பௌர்ணமி தினத்தில் தமது சீடர்களுடன் காஞ்சி மாநகருக்கு வந்தார் ப்ரணதாரா. புத்தத் தன்மை நிறைந்த அந்த யோகினியின் அருளால், புத்த தர்மர் ஆன்ம ஞானம் பெறவேண்டும் என்ற தன் விருப்பத்தை ப்ரணதாராவிடம் கூறினார் சிம்மவர்மன். புத்த தர்மரை தன்னுடன் அழைத்து செல்ல இசைந்தார் ப்ரணதாரா.
  • ப்ரணதாராவின் இருப்பிடத்தை அடைந்தபுத்த தர்மர், இருவேளையும் தியானம் செய்தார். புத்தரின் கருத்துகளை எதிர்காலத்தில் உலகெங்கும் கொண்டுசெல்ல இவனே தகுதியானவன் என்று ப்ரணதாரா தீர்மானித்தார். பாலி மொழியில் உள்ள இலக்கண இலக்கியங்கள், ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ பயிற்சிகள், போர்க்கலை, வர்மக்கலை ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார் புத்ததர்மர்.
  • ப்ரணதாராவுக்கு அவருடைய சீடனைப் பற்றி பெருமிதமாக இருந்தது. அவருடைய தந்தை தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பை சரியாக செய்துவிட்ட திருப்தியுடன், புத்த தர்மரை காஞ்சிபுரம் அழைத்து போனார். மகனை தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினார் ப்ரணதாரா. காஞ்சிபுரம் வந்தடைந்த புத்த தர்மர், அரச பதவியை ஏற்க தனக்கு விருப்பமில்லை என்று கூறினார். பல நாட்களுக்குப் பிறகு, “உன் விருப்பப்படியே செயல்படு" என்று மகனை ஆசிர்வதித்த சிம்மவர்மன் ஓரிரு நாட்களில் உயிர்நீத்தார்.
  • சிலநாட்கள் கழித்து, அனைத்தையும் துறந்து அரண்மனையைவிட்டு வெளியேறிய புத்த தர்மர், தன் குரு ப்ரணதாராவை தேடி நடந்தவற்றை விவரித்து, தனக்கு சந்நியாச தீட்சை தரும்படி வேண்டினார். ப்ரணதாரா, புத்த தர்மரிடம், “நீ அரண்மனையைவிட்டு நள்ளிரவில் வெளியேறியதும், முடிசூட மறுத்ததும் ஏன்?” என்று கேட்டார்.
  • "என் மீது கொண்ட அன்புகாரணமாக எனது தந்தை எனக்கு முடிசூட்ட நினைக்கிறார். முறைப்படி அரச பதவி என்பது என் மூத்த சகோதரனுக்கு கிடைக்க வேண்டிய ஒன்றாகும். எனவே பதவிக்காக உயிர் கொலைகள் நடக்கும். ரத்தத்தின் மீது நான் அரச வாழ்க்கை வாழ விரும்பவில்லை. நிலையற்ற இன்பங்களில் வாழ்வை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை. எது நிலையானதோ அதை கண்டடையவே துறவறத்தை நாடினேன்" என்று புத்த தர்மர் பதிலளித்தார்.
  • புத்த தர்மரின் ஞானவேட்கை கண்டு மகிழ்ந்த ப்ரணதாரா, அந்த ஆண்டின் புத்த பூர்ணிமா புனித நாளில், முறைப்படி தமது சீடன் புத்த தர்மருக்கு சந்நியாச தீட்சையளித்து, ‘போதி தர்மர்’ என்ற சந்நியாச நாமத்தை சூட்டினார். குரு ப்ரணதாராவின் கட்டளைப்படி, மஹாயான புத்தத்தை சீனாவில் பரவச் செய்ய சீனாவுக்கு சென்றார் போதிதர்மர்.
  • சீனர்களோ போதிதர்மரை ‘இரண்டாவது புத்தர்’ என்றழைத்தனர். அவர் புத்தரில் இருந்து பிறவியெடுத்து வந்தவர் என்றே அவர்கள் நம்பினர். ஆனால் உண்மையில் போதிதர்மர் இன்னொரு புத்தரில்லை. அவர் புத்தர் இருந்த இடத்திலிருந்து அடுத்த அடியை, ‘ஜென்’ என எடுத்துவைத்தார்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories