புத்தாண்டும் புதிய நம்பிக்கைகளும்
- புத்தாண்டு என்பது மனித குலத்துக்குக் காலம் பரிசளிக்கும் கொடை. முந்தைய ஆண்டில் உலகம் எதிர்கொண்ட இன்னல்கள், சவால்கள் என எதிர்மறையான எல்லா அம்சங்களையும் கடந்து இழப்புகளை ஈடுகட்டும் நிகழ்வுகள், சிறப்பான எதிர்காலம், போர்களற்ற உலகம், சச்சரவுகள் அற்ற சமூகம் எனப் பல நம்பிக்கைகளுடன் எதிர்நோக்க வேண்டிய புதிய காலம் அது.
- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உலுக்கிய கோவிட் கொடுங்காலத்தைக் கடந்து வந்துவிட்டாலும், அது முடிவுற்றுவந்த காலம் தொடங்கி இதுவரை லட்சக்கணக்கானோரைப் பலிகொண்ட உக்ரைன் போரும், 2023 அக்டோபரில் தொடங்கி இன்றுவரை 45,000க்கும் மேற்பட்டோரைக் கொன்றழித்த காஸா போரும் புத்தாண்டிலாவது முடிவுக்கு வருமா என சர்வதேசச் சமூகம் காத்திருக்கிறது. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, சூடான் போன்ற ஆப்ரிக்க நாடுகளில் தீவிரமடைந்திருக்கும் உள்நாட்டுப் போர்களும் கவலையளிக்கின்றன.
- அதேவேளையில், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைதி ஒப்பந்தம் ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கிறது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் முயலக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த சிரியாவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சமடைந்திருந்த சிரிய நாட்டு மக்கள் தாய்நாடு திரும்பிவருகின்றனர். அசர்பைஜான் விமானம் ரஷ்ய ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்டது, தென் கொரிய விமானம் பறவை மோதி விபத்துக்குள்ளானது எனப் பல அசம்பாவிதங்களும் நிகழ்ந்துள்ளன.
- உலகின் பல்வேறு பகுதிகளில், காலநிலை மாற்றத்தின் விளைவுகளாக நிகழ்ந்த பேரிடர்களும் இழப்புகளும் வருத்தம் தந்தன. கூடவே, அசர்பைஜான் காலநிலை உச்சி மாநாட்டில் காத்திரமான எந்த முடிவும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளித்தது. சீனாவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தையால் எல்லையில் படைவிலக்கம் ஏற்பட்டது.
- காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் முடிவுற்றுவிடவில்லை. வங்கதேச உள்நாட்டுப் பிரச்சினையின் தாக்கம் இந்தியா வரை நீண்டது. இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக இலங்கையின் புதிய அதிபரிடம் இந்தியா இன்னும் உறுதியான குரலில் வலியுறுத்த வேண்டிய தருணம் இது.
- மக்களவைத் தேர்தல், ஹரியாணா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்கள் என நாடெங்கும் அரசியல் சூழல் பரபரப்பாகவே இருந்தது. இனியேனும், அரசியல் போட்டிகளைத் தாண்டி ஆக்கபூர்வச் செயல்பாடுகளில் அரசும் அரசியல் கட்சிகளும் ஈடுபட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். புத்தாண்டில், தேசிய பட்ஜெட்டும், தமிழ்நாடு பட்ஜெட்டும் மக்களுக்கு என்ன பரிசுகளை வழங்கும், எவ்விதமான சவால்களை ஏற்படுத்தும் என்பதும் உற்றுநோக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்துக்கு மாற்றாக, ‘கலைஞர் கைவினைஞர்’ திட்டத்தைக் கொண்டுவருவதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது. எனினும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில அரசின் கல்விக் கொள்கை இறுதிசெய்யப்படவில்லை.
- அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் போன்ற திட்டங்கள் நம்பிக்கை அளித்தன. எனினும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை, கூலிப்படைக் கொலைகள், கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றங்கள் எனப் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் வேதனை அளித்தன. புத்தாண்டில் கசப்புகள் குறைந்து ஆக்கபூர்வ நிகழ்வுகள் நிகழ அரசும் அரசியல் இயக்கங்களும் மக்களும் இணைந்தே செயல்பட்டாக வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 01 – 2025)