புவியின் 77 சதவீத நிலப்பரப்பில் வறண்ட காலநிலை
- புவிப் பந்தின் நிலப்பகுதியில் 77 சதவீதம் வறட்சியான காலநிலையையே கடந்த 30 ஆண்டுகளில் சந்தித்துள்ளது என்று ஐ.நா.- பாலைவனமாதலைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
- இந்தக் காலத்தில் நிலப்பகுதியில் 4.3 லட்சம் சதுர கி.மீ. பரப்பு, அதாவது பூமியின் நிலப்பரப்பில் 40 சதவீதம் - சராசரியாக இந்தியாவின் நிலப்பரப்பில் முக்கால் பங்கு அளவுக்கு வறண்ட நிலங்கள் - உலகில் அதிகரித்துள்ளன. பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடையும் நிலையில், உலகின் ஈரப்பதமான பகுதிகளில் 3 சதவீதம் வறண்ட நிலங்களாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மாறிவிடும்.
- அதேநேரம், கடந்த 30 ஆண்டுகளில் வறண்ட நிலப்பகுதிகளில் வாழும் மக்களின் தொகை 230 கோடியாக அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் தீவிரமடையும் பட்சத்தில் 2100 வாக்கில் 500 கோடி பேர் வறண்ட நிலப்பகுதிகளில் வாழக்கூடிய மோசமான நிலை ஏற்படக்கூடும்.
- காலநிலை மாற்றம் சார்ந்த பாலைவனமாதல், வறண்ட தன்மை அதிகரித்தால் கோடிக்கணக்கில் வாழும் இந்த மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இந்தப் பிரச்சினையால் ஐரோப்பா, அமெரிக்காவின் மேற்குப் பகுதி, பிரேசில், ஆசியா, மத்திய ஆப்பிரிக்கப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக தெற்கு சூடான், தான்சானியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தப் பாதிப்பை ஏற்கெனவே மோசமாக எதிர்கொண்டுவருகின்றன.
- வறண்ட நிலப்பகுதிகளில் வாழ்பவர்கள் எண்ணிக்கையில் ஆசியா, ஆப்பிரிக்காவில் உள்ளவர்களே அதிகம். எகிப்து, கிழக்கு-வடக்கு பாகிஸ்தான், இந்தியா, வடகிழக்கு சீனா ஆகியவை நெருக்கடியான மக்கள்தொகை வாழும் வறண்ட நிலப்பகுதிகளாக உள்ளன.
- வறட்சி என்பது குறிப்பிட்ட காலத்தில் மழைப்பொழிவு குறைவாக இருப்பது. அதேநேரம் நிலம் பாலைவனமாதல்-வறண்டு போதல் என்பது நிரந்தர வறட்சிக்கு ஒரு நிலப்பகுதி தள்ளப்படுவது. எனவே, பெருமளவு நிலப்பகுதிகள் வறண்டு வருவது, புவியின் தன்மையையே மறுவரையறை செய்துவருகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 01 – 2025)